under review

திருவலஞ்சுழி மும்மணிக்கோவை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 33: Line 33:
[http://www.tamilvu.org/node/154572?link_id=61817 திருவலஞ்சுழி மும்மணிக்கோவை, தமிழ் இணைய கல்விக்கழகம்]
[http://www.tamilvu.org/node/154572?link_id=61817 திருவலஞ்சுழி மும்மணிக்கோவை, தமிழ் இணைய கல்விக்கழகம்]


{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 10:02, 22 September 2023

திருவலஞ்சுழி மும்மணிக்கோவை பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. மும்மணிகோவை என்ற சிற்றிலக்கிய வகைமையில் இயற்றப்பட்டது.

ஆசிரியர்

திருவலஞ்சுழி மும்மணிக்கோவையை இயற்றியவர் நக்கீரதேவ நாயனார். திருமுருகாற்றுப்படை இயற்றிய நக்கீரரும் இவரும் ஒருவர் அல்லர் என்பதும், சொல் வழக்கு முதலியவற்றாலும் பொருள் அமைதியாலும், தேவார திருவாசகக் கருத்துக்களும் சொற்றொடர்களும் இடம் பெற்றிருப்பதாலும் சமய குரவர்க்குப் பின் பொ.யு. 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நக்கீரர் என்ற ஒருவரால் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதும் ஆய்வாளர்களின் கருத்து.

நூல் அமைப்பு

திருவலஞ்சுழி என்னும் தேவாரப் பாடல்பெற்ற தலத்தில் கோவில் கொண்ட ஈசனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டது. காவிரி இவ்வூரை வலமாக சுழித்துப் போவதால் திருவலஞ்சுழி எனப் பெயர் பெற்றது. திருவலஞ்சுழி இறைவரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, அவர் பேரழகில் ஈடுபட்டு, காதல் கொண்டு, காம வருத்தம் உற்ற, தலைவியின் நீங்கா அன்பை வெளிப்படுத்தும் நூல் இது. அகவல் வெண்பா கலித்துறை என்னும் மூன்றுவகைச் செய்யுட்களினால் அந்தாதித் தொடையாகப் பாடப்பட்ட பதினைந்து பாடல்களை உடையது.

பல புராண வரலாறுகளைக் குறிப்பிட்டு அவற்றால் சிவபெருமானின் சிறப்புப் பேசப் பெறுகின்றது. திருமாலும் பிரமனும் சிவபெருமானின் அடியையும் முடியையும் தேட முற்பட்டுக் காண இயலவில்லை என்னும் வரலாற்றை 'வானோரும் காணாத செம்பொன் கழல் (2)' என்பதாலும் 'தழல் வண்ணம் கண்டே தளர்ந்தார் இருவர்' (3) என அவ்விருவர்களுக்கும் திருவண்ணாமலையில் சிவபெருமான் தீப்பிழம்பாய்க் காட்சியளித்த சிறப்பினையும் (6) இந்நூல் குறிப்பிடுகிறது. பிறைச்சந்திரன் சிவபெருமானிடம் சாபத்துக்கு அஞ்சி அடைக்கலம் புகுந்ததையும் பெருமான் அச்சந்திரனைத் தலையில் சூடி அருள் பாலித்ததையும் 5, 12 -ஆம் பாடல்களில் காணலாம். சிவபெருமான் தாருகாவனத்துள்ள முனிவர்களின் ஆணவத்தை அடக்க முற்பட்டுப் பிச்சைக்காகச் சென்றமையை 8 -ஆம் பாடல் தெரிவிக்கிறது. திரிபுரம் எரிப்பதற்கு "நகரெரிய அம்பாய்ந்தவன்'' என இந்நூலின் 15 -ஆம் செய்யுளில் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

பாடல் நடை

வணங்குதும்; வாழி; நெஞ்சே! புணர்ந்துடன்
பொருகடல் முகந்து கருமுகிற் கணம்,நற்
படஅர வொடுங்க மின்னிக் குடவரைப்
பொழிந்து கொழித்திழி அருவி குணகடல்
மடுக்குங் காவிரி மடந்தை வார்புனல்
உடுத்த மணிநீர் வலஞ்சுழி
அணிநீர்க் கொன்றை அண்ணல தடியே.

வணங்குவோம் வாழி நெஞ்சே! மேகக்கூட்டமானது கடலுடன் புணர்ந்து அலை பொருதும் கடல் முகந்து, கருமுகிற் கணங்களாகி, நல்ல படம் கொண்ட பாம்புக் கூட்டம் ஒடுங்க மின்னி, மேற்கு மலையில் மழையாகப் பொழியும். அந்த மழை நீர் கொழித்து இறங்கி அருவியாக இழியும். அந்த அருவியானது கிழக்குக் கடல் வந்து சேரும் முன் வார்புனல் உடுத்த காவிரி மடந்தையாகி, மணி நீர் கொண்டு வலம் சுழியில் உறையும் அணிநீர் கொன்றை அண்ணலது அடியை வணங்கிச் செல்லும். அந்த அண்ணலின் அடியை நாமும் வணங்குதும் வாழி நெஞ்சே!

தோழி கூற்று

தனமேறிப் பீர்பொங்கித் தன்அங்கம் வேறாய்
மனம்வேறு பட்டொழிந்தாள் மாதோ, - இனமேறிப்
பாடாலம் வண்டலம்பும் பாய்நீர் வலஞ்சுழியான்
கோடாலம் கண்டணைந்த கொம்பு.

தலைவியின் உடலும், உள்ளமும் வேறுபாடு கொண்டது கண்டு வினவிய செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது.

உசாத்துணை

திருவலஞ்சுழி மும்மணிக்கோவை, தமிழ் இணைய கல்விக்கழகம்


✅Finalised Page