தியாகபூமி (நாவல்)

From Tamil Wiki
Revision as of 11:01, 29 January 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "தியாகபூமி ( நாவல்) (1939)கல்கி எழுதிய நாவல். ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்தது. சுதந்திரப்போராட்டப்பின்னணிஒயில் ஒரு குடும்பத்தில் வாழ்க்கையைச் சொல்லும் படைப்பு. பொதுவாசகர்கள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தியாகபூமி ( நாவல்) (1939)கல்கி எழுதிய நாவல். ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்தது. சுதந்திரப்போராட்டப்பின்னணிஒயில் ஒரு குடும்பத்தில் வாழ்க்கையைச் சொல்லும் படைப்பு. பொதுவாசகர்களுக்குரிய எளிமையான கதையோட்டம் கொண்டது. காந்திய இயக்கத்தின் கொள்கைகளான மதுவிலக்கு, பெண்கல்வி, தீண்டாமை ஒழிப்பு, தேசவிடுதலை ஆகிய கருத்துக்களை முன்வைப்பது இந்நாவல்.

எழுத்து, பிரசுரம்

கல்கி ஆனந்த விகடனின் பொறுப்பாசிரியராக இருந்தபோது 1938 ,1939 ஆம் ஆண்டுகளில் தொடராக வெளிவந்த நாவல் இது. கோடை, மழை, பனி, இளவேனில் என நான்கு பாகங்களாக வெளிவந்தது. ஒவ்வொரு பகுதியும் முறையே 11, 10, 16, 32 அத்தியாயங்களாக 69 அத்தியாயங்கள் கொண்டது. இயக்குநர் கே.சுப்ரமணியத்திடம் கதைச்சுருக்கத்தைச் சொல்லிவிட்டு கல்கி இதை எழுதினார். கதை வெளிவரும்போது படப்பிடிப்பும் நடைபெற்றது. படத்திலுள்ள காட்சிகளின் புகைப்படங்களே கதையிலும் வெளியாயின. கதை முடிந்த அடுத்தவாரமே படம் வெளியாகியது. 1939 மே 20 அன்று தியாகபூமி திரைப்படம் வெளியாகியது. ஆனால் அன்றிருந்த ஆங்கிலேய அரசால் தேசத்துரோகக் குற்றம்சாட்டப்பட்டு படம் தடைசெய்யப்பட்டது. பின்னர் தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.

கதைச்சுருக்கம்

தஞ்சை மாவட்டத்து நெடுங்கரை என்னும் ஊரில் வாழும் சம்பு சாஸ்திரி, அவருடைய மனைவி பாக்கியம். அவர்களின் மகள் சாவித்திரி. பாக்கியம் இறந்துவிடவே சாவித்திரியை வளர்ப்பதற்காகச் சம்பு சாஸ்திரி மங்களம் என்ற பெண்ணை மீண்டும் மணம் புரிந்து கொண்டார். சாவித்திரியை மங்களமும், அவளது தாயார் சொர்ணம்மாளும் சேர்ந்து பல வகையில் கொடுமைப்படுதுதுகிறார்கள். சம்பு சாஸ்திரி, சாவித்திரிக்கு மணம் முடிக்க எண்ணி நரசிங்கபுரத்தில் வாழ்ந்த இராசாராமையர் - தங்கம்மாள் என்போரின் மகனான ஸ்ரீதரனை மணமகனாகத் தேர்ந்தெடுத்தார். சம்பு சாஸ்திரிகள் ஆற்றுவெள்ளத்தில் வீடிழந்த தாழ்த்தப்பட்ட மக்களை தன் வீட்டு மாட்டுக்கொட்டகையில் தங்கவைத்ததனால் அக்ரஹாரத்து மக்களால் சாதிவிலக்கம் செய்யப்பட்டவர். அவருடைய தங்கை மீனா இராமச்சந்திரன் என்பவரை மணந்திருந்தாள். ராமச்சந்திரன் காணாமல் போகிறான். கும்பகோணம் மகாமகம் சென்ற மீனா தன் கணவன் தேசசேவையில் ஈடுபட்டதை அறிந்து அவனுடன் சென்றுவிடுகிறாள். அவர்கள் மும்பைக்குச் சென்று வணிகம் செய்து செல்வந்தாரகிறார்கள். சாதிவிலக்கம், தங்கை காணாமலானது ஆகியவற்றால் சம்பு சாஸ்திரி கூடுதலாக வரதட்சிணை கொடுக்கநேர்கிறது.

கணவன் இல்லத்தில் கடுந்துயருக்கு உள்ளாகும் சாவித்ரி அங்கிருந்து தப்பி சம்புசாஸ்திரிகளை தேடிவருகிறாள். அங்கே அவர் இல்லை. அவர் பிழைப்புதேடி சென்னை சென்றுவிட்டார். சாவித்ரி அனாதைகளுக்கான மகப்பேறு விடுதியில் ஒரு குழந்தையை பெற்றெடுக்கிறாள். சென்னைக்கு பிழைப்பு தேடி வரும் சாவித்ரி தன் தந்தையை கண்டுபிடிக்கிறாள். அவர் தூங்கும்போது அருகே குழந்தையை விட்டுவிட்டு மும்பைக்குச் செல்கிறாள். அங்கே ஒரு குடும்பத்தில் பணிப்பெண்ணாக ஆகிறாள். சம்புசாஸ்திரிகள் குழந்தையை அவர் வாழும் சாவடிக்குப்பத்திற்கு கொண்டுசெல்கிறாள். அது சாருமதி என்றபெயருடன் வளர்கிறாள்.

சாவித்ரி பணிப்பெண்ணாகச் சென்ற குடும்பம் அவளுடைய காணாமல் போன அத்தையின் குடும்பம்தான். அத்தையும் கணவனும் மறைகிறார்கள். அவர்களின் சொத்து சாவித்ரிக்கு வருகிறது. சாவித்ரி உமாராணி என்னும் பெயருடன் ஊர் திரும்பி தன் மகளை பார்க்கிறாள். சாருமதியை தானே வளர்ப்பதாக கேட்கிறாள். சாஸ்திரி அதற்கு உடன்படாமல் சாருமதியுடன் தேசசேவைக்குச் செல்கிறார். இந்நிலையில் ஸ்ரீதரன் ஒரு வங்கிமோசடிச் சிக்கலில் மாட்ட உமாராணி அவனை காப்பாற்றுகிறாள். ஸ்ரீதரன் உமாராணி தன் மனைவி என்று கண்டுகொண்டு அவள் தன்னுடன் வரவேண்டுமென வழக்கு தொடுக்கிறான். வழக்கு பல படிகளாக நிகழ்கிறது. கணவனுடன் வாழ விரும்பாத சாவித்ரியும் தேசசேவையில் ஈடுபடுகிறாள். ஸ்ரீதரனும் தேச சேவையில் ஈடுபடுகிறான். அவன்மீதான கசப்பை அகற்றி சாத்வித்ரி அவனை ஏற்கிறாள். அவர்கள் தங்கள் மகளுடன் இணைகிறார்கள்.

கதைமாந்தர்

சாவித்ரி- கதைநாயகி. கணவன் இல்லத்தாரால் கொடுமைப்படுத்தப்பட்டு பலதுன்பங்களுக்கு ஆளாகிறாள்

சம்பு சாஸ்திரி- சாவித்ரியின் தந்தை. தேச சேவை செய்பவர். காந்தியவாதி

ஸ்ரீதரன் - சாவித்ரியின் கணவன்

சாருமதி- சாவித்ரியின் மகள்

மீனா- சாவித்ரியின் அத்தை

ராமச்சந்திரன்- மீனாவின் கணவன்

இலக்கிய இடம்

இது பொதுவாசிப்புக்காக எழுதப்பட்ட படைப்பு. தமிழில் தொடர்கதைகள் மிகுந்த வரவேற்பைப் பெற்ற காலகட்டத்தில் வெளிவந்தது. காந்தியக்கருத்துக்களையும் தேசியப்போராட்டச் செய்திகளையும் பரப்பும் நோக்கம் கொண்டது. இந்நாவலின் கட்டமைப்பு எதிர்பாராத திருப்பங்கள், தற்செயல்கள், நாடகத்தனமான சந்தர்ப்பங்களால் ஆனது

உசாத்துணை