under review

திண்டிவனம் அருகன் கோயில்

From Tamil Wiki
Revision as of 20:14, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)

திண்டிவனம் அருகன் கோயில் (பொ.யு. 12-ஆம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அமைந்த சமணக் கோயில்.

இடம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலுள்ள பெருங்குடி மக்களால் இந்நகரின் மேற்கு பகுதியில் அண்மைக்காலத்தில் பார்சுவநாதருக்குக் கட்டப்பட்ட கோயில்.

வரலாறு

இத்தலத்தில் பண்டைக்காலத்திலிருந்தே சமண சமயத்தவர் வாழ்ந்து வந்திருக்கின்றனர். அப்போதிருந்த கோயில் அழிந்துவிட்டபோதிலும், அதனை அறிவுறுத்தும் வகையில் சில சிற்பங்கள் இங்கு காணப்படுகின்றன.

அமைப்பு

பொ.யு. 12-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஆதிநாதர் உலோகத்திருமேனியும், பொ.யு. 15-ஆம் நூற்றாண்டு பத்மபிரபா தீர்த்தங்கரர் சிற்பமும் சென்னை அருங்காட்சியகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. செஞ்சியிலிருந்து கொணரப்பட்ட தீர்த்தங்கரர் சிற்பம் திண்டிவனத்திலுள்ள தனியார் தோட்டத்தில் வைக்கப்பட்டது.

திண்டிவனத்திலுள்ள ஜைன சத்திரத்தில் மூன்றடி உயரமுள்ள சந்திரநாதரின் சிற்பம் உள்ளது. இரு மருங்கிலும் இருவர் சாமரங்களை ஏந்திய வண்ணம் நிற்கின்றனர். சந்திரநாதரின் சிற்பம் பொ.யு. 17-ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது. முன்பு திண்டிவனத்தின் ஒருபுறத்தில் இடம்பெற்று 1919-ல் தர்மசாலை கட்டப்பட்டபோது அதில் கொண்டு வைக்கப்பட்டு வழிபடப்பட்டது.

திண்டிவனத்திலிருந்து கிடைக்கப் பெற்ற சிற்ப, படிமச்சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது, இங்கு பொ.யு. 12-ஆம் நூற்றாண்டிலேயே சமணக்கோயில் இருந்திருக்கிறதென்பது தெரிகிறது. பிற்காலத்திலும் இக்கோயில் நன்முறையில் இருந்ததை அறிவுறுத்தும் வகையில் பொ.யு. 15, 17-ஆம் நூற்றாண்டுகளைச் சார்ந்த சிற்பங்கள் உள்ளன. பொ.யு. 17-ஆம் நூறாண்டிற்குப் பின்னர் இங்கு சமணம் செல்வாக்கிழந்து கோவில் அழிவுற்றது. பண்டைக்காலத்தில் இங்கு எந்த தீர்த்தங்கரருக்குரிய கோயில் இருந்ததென்பது தெரியவில்லை. தற்காலத்தில் பார்சுவநாதருக்கான கோயில் உள்ளது

உசாத்துணை

  • தொண்டை நாட்டுச் சமணக் கோயில்கள் (டாக்டர்.ஏ. ஏகாம்பர நாதன்); 1991


✅Finalised Page