தம்புரான் விளையாட்டு

From Tamil Wiki
Revision as of 16:07, 21 March 2022 by Navingssv (talk | contribs) (Created page with "thumb|''பரகோடி கண்டன் சாஸ்தா தம்புரான் விளையாட்டு'' ஆரல்வாய்மொழி ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கூர் தெருக்களில் பங்குனி உத்தரம் பத்து நாள் திருவிழாவில் ஒன்பத...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பரகோடி கண்டன் சாஸ்தா தம்புரான் விளையாட்டு

ஆரல்வாய்மொழி ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கூர் தெருக்களில் பங்குனி உத்தரம் பத்து நாள் திருவிழாவில் ஒன்பதாம் நாள் நடக்கும் திருவிழா தம்புரான் விளையாட்டு. வடக்கூரில் உள்ள பரக்கோடி கண்டன் சாஸ்தா கோவிலின் முன்னால் நிகழ்த்தப்படும் கலை இவ்விளையாட்டு.

நடைபெறும் முறை

ஆரல்வாய்மொழி பேருராட்சி வடக்கூர் கிராமத்தில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், பரகோடி கண்டன் சாஸ்தா கோவிலில் நிகழும் பத்து நாள் பங்குனி உத்தரம் திருவிழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்வு தம்புரான் விளையாட்டு. பங்குனி மாதம் உத்தரம் திருநாளின் மறுநாள் பரகோடி கண்டன் சாஸ்தா குதிரை வாகனத்தில் எழுந்தருளி திடலில் போர் விளையாட்டு காட்டுவதை ஊர் மக்கள் சப்பரத்தில் தூக்கி செல்வதாக நிகழ்ச்சி அமையும்.

பங்குனி உத்திரம் ஒன்பதாம் நாள் மாலை கோவிலின் மூல சாஸ்தாவான பரகோடி கண்டன் சாஸ்தா குதிரை வாகனத்தில் ஏற்றி மலர் மாலைகளால் அலங்கரிக்கப்படுவார். குதிரையும், சுற்றியுள்ள நான்கு வீரர்கள் உருவ சிலையும் பட்டு சார்த்தி அலங்கரிக்கப்பட்ட பின் ஊரில் உள்ள இளைஞர்கள் மூங்கில் சப்பரத்தில் கோவிலுக்கு முன்னுள்ள சுடலைமாடன் கோவிலுக்குத் தூக்கி வந்து எதிர் சேவை பூஜை நிகழ்த்துவர். அதன்பின் கோவிலுக்கு முன் அமைக்கப்பட்ட திடலில் சாஸ்தாவை இளைஞர்கள் வேகமாக சுற்றி வருவர். சப்பரத்தில் உள்ள குதிரை சுழலும் வண்ணம் உருளைத்தடியால் சப்பரத்தோடு இணைக்கப்பட்டிருக்கும். நான்கு இளைஞர்கள் சப்பரத்தின் நடுவிலிருந்து குதிரையைச் சுழற்றி விடுவர். இவ்விளையாட்டிற்கு நடுவே இளைஞர்கள் மாறி மாறி சபரத்தைக் கைமாற்றி விடுவர்.

இதற்கு பிண்ணனி இசையாக முரசு, உடுக்கு, இலை தாளம், கொம்பு ஆகியன ஊரிலுள்ள திருவாவடுதுறை மடத்தில் பயிற்சி பெற்ற இளைஞர்கள், குழந்தைகள் இசைக்கின்றனர். இவ்விசைக் கேற்ப சாஸ்தாவை மெதுவாகவும் வேகமாகவும் சுற்றி வருவர்.

நிகழ்த்துபவர்கள்

இதனை பெரும்பாலும் ஊரில் உள்ள வலுக்கொண்ட இளைஞர்களே நிகழ்த்துகின்றனர். இவர்களைத் தவிர நடுவயதுக்காரர்களும் இளைஞர்களுடன் சேர்ந்து கூட்டாக மூங்கில் தடியைத் தூக்கி வருவர்.

அலங்காரம்

இவ்விழா தொடங்கும் முன் சாஸ்தாவிற்கு ரோஜா, மல்லிகை, அல்லி மற்றும் பல வண்ண மாலைகளால் அலங்காரம் செய்யப்படும். சப்பரத்தைத் தூக்கி வரும் இளைஞர்கள் மேலே வெற்றுடம்புடனோ அல்லது வெள்ளை பணியன் அணிந்து ஆரஞ்ச் துண்டுடன் வருவர்.

நிகழும் ஊர்

இவ்விழா ஆரல்வாய்மொழி வடக்கூர் கிராமத்திலும், புத்தேரி, இறச்சிக்குளம் போன்ற கன்னியாகுமிரி, திருநெல்வேலி மாவட்ட கோவில் பங்குனி உத்தர விழாக்களில் நடைபெறுகிறது.

நடைபெறும் இடம்

இவ்விழா மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் முன் உள்ள திடலில் நடைபெறும்.

காணொளி