தமிழ் நேசன்

From Tamil Wiki
Revision as of 20:34, 27 July 2022 by Parimitaa KM (talk | contribs) (Created page with "தமிழ் நேசன் (செப்டம்பர் 10, 1924 - ஜனவரி 31, 2019) உலகில் மிக நீண்டகாலம் புழக்கத்தில் இருந்த தமிழ் நாளிதழ். ஆரம்பத்தில் தமிழகத்திருந்து மலாயா வரும் பயணிகளைச் சார்ந்து,  வணிக தகவல்களை வழங்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தமிழ் நேசன் (செப்டம்பர் 10, 1924 - ஜனவரி 31, 2019) உலகில் மிக நீண்டகாலம் புழக்கத்தில் இருந்த தமிழ் நாளிதழ். ஆரம்பத்தில் தமிழகத்திருந்து மலாயா வரும் பயணிகளைச் சார்ந்து,  வணிக தகவல்களை வழங்குவதற்காகத் தொடங்கப்பட்டது. பின்னர், தோட்ட தொழிலாளர்களின் குரலாக சமுதாய நலனுக்காக இயங்கியது. இறுதியில் அரசியல் கொள்கைகளைப் பரப்பும் நாளிதழாக உருவமெடுத்தது. 1970 வரை தமிழ் நேசனின் இலக்கிய முன்னெடுப்புகள் மலேசிய தமிழ் இலக்கியத்தின் முக்கிய பங்களிப்பாகும்.

தொடக்கம்

கி. நரசிம்ம ஐயங்கார் 1924 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி தமிழ் நேசனை துவங்கினார். செப்டம்பர் 24, 1924ல் முதல் இதழ் வெளிவந்தது.  அவர் தனது சகோதரருடன் கூட்டாக அம்பாங் வீதியில் உள்ள ‘ஆட்ப் பிரிண்டிங் ஒர்க்’ என்ற நிறுவனத்தை உருவாக்கினார். அப்போது தமிழ் நேசன் வார இதழாக இருந்தது. பிறகு வாரம் இருமுறை, வாரம் மும்முறை என பரிணாமம் எடுத்து, பிப்ரவரி 20, 1937ல் நாளிதழாக மாற்றம் கண்டது.

ஜி. பார்த்தசாரதி

ஜப்பானிய ஆட்சிக்குப் பிறகு, பத்திரிகை தாள் கிடைப்பது கஷ்டமாக இருந்ததால், தமிழ் நேசனும் இணை வெளியீடான ஆங்கில பத்திரிகை ‘மலாயன் டைலி நியூஸ்’ பாதிக்கப்பட்டது. நரசிம்ம ஐயங்காரின் மனைவி லட்சுமி அம்மாள் ‘மலாயன் டைலி நியூஸ்’ நிறுத்திவிட்டு தமிழ் நேசனை மட்டும் தொடரலாம் என ஆலோசித்தார். நரசிங்க ஐயங்காரின் மைத்துனரும் அப்போதைய நாளிதழின் ஆசிரியரான ஜி. பார்த்தசாரதி, இதை ஏற்காதனால் அவர்களிடையே மனத்தாங்கல் ஏற்பட்டது. அதனால், தமிழ் நேசன், ஆங்கில பத்திரிகை, அச்சுக்கூடம் அனைத்தையும் விலைக்கு வாங்க சீன வக்கில்களிடம் நேசன் உரிமையாளர்கள் ஒப்பந்தம் போட்டு, முதலும் வாங்கிவிட்டிருந்தனர்.

இதற்கிடையில், தமிழ் நேசனை இந்தியர் சார்பாக வாங்கி நடத்த அப்போதைய ம.இ.காவின் முதல் தலைவராக இருந்த ஜாந்திவி சீனர்களிடம் பேசி, இன்னும் குறைந்து விலைக்குக் கேட்டும், அவர்கள் சம்மதித்தும் போதிய பணமில்லாமல் இம்முயற்சி தோல்வியுற்றது. இதன்பிறகு, நேசன் உரிமையாளர்களிடமிருந்து, ஜாந்திவி பேசிய விலைக்கு சீனர்கள் வாங்கிக்கொண்டனர்.

சுதந்திரத்துக்குப் பின், வழக்கறிஞர்களான கூ டெக் ஈ மற்றும் யாங் ஷுக்லினிடமிருந்து, தமிழ் நேசன் என்ற பெயர் உரிமையை முரு.நா.மலையாண்டி செட்டியாரும் பழனியப்ப செட்டியாரும் கூட்டாக விலைக்கு வாங்கினர்.

இந்த நாளிதழுக்காகச் சொந்த சிறு அச்சகத்தையும் கூட்டாக நிறுவினர். பழைய கட்டடத்திலேயே செயல்பட்ட தமிழ் நேசனை சிறிது காலம் தொடர்ந்து நடத்திய பின் ஆம்பாங் சாலை 37க்கு பதிப்பகம் மாற்றம் கண்டது. 1980களில் இந்நாளிதழை முன்னால் அமைச்சரான துன் சாமிவேலுவின் குடும்பம் வாங்கியது. டத்தின் இந்திராணி சாமிவேலு நாளிதழ் உரிமையாளராக செயல்பட்டார்.   அதனைத்தொடர்ந்து, அரசாங்கத்தின் கொள்கையைப் பரப்பும் சாதனமாகத் தமிழ் நேசன் கையாளப்பட்டது. மேலும் ம.இ.காவில் உட்கட்சி பூசல்களில் ஒரு தரப்பு செய்திகளை மட்டும் வெளியிடும் நிலைபாட்டை கொண்டிருந்தது. 2000க்குப் பின்னர் தமிழ் நேசன் அலுவலகம் பத்துமலைக்கு இடமாற்றம் கண்டது.  95 வருடங்களைக் கடந்து 2019ல் வர்த்தக பிரச்சனைகளால் ஜனவரி 31-ஆம் திகதியுடன் தமிழ் நேசன் நாளிதழ் வெளியீடு நிறுத்தப்பட்டது.

கி. நரசிம்ம ஐயங்கார்
கி. நரசிம்ம ஐயங்கார்

தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டம் நங்கவரத்தில் வைணவ குளத்தில் ஜூலை 3, 1890 பிறந்தார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் எஸ்பிஜி கல்லூரியிலும் கல்வி கற்றார். தமிழ் அறிஞர் நா மு. வெங்கடசாமி நாட்டார் இடம் தமிழ் கற்றார். 1915 ஆம் ஆண்டு ரங்கூன் வந்து அங்கு அக்கவுண்ட் ஜெனரல்ஸ் அலுவலகத்தில் வேலை செய்தார். பிறகு 1923 ஆம் ஆண்டு மலாயா வந்த திரு ஐயங்கார் தனது உடன் பிறந்தார் நிர்வாகியாக இருந்த இண்டஸ்ட்ரியல் அச்சகத்தில் உதவி நிர்வாகியாக சேர்ந்தார். பிறகு தமிழகம் என்ற பத்திரிக்கையை துவக்கி நடத்தினார். 1923 இல் இந்த ஸ்திரீல் அச்சகத்தை விட்டு விலகி 1924 ஆம் ஆண்டு தனது சகோதரருடன் கூட்டாக அம்பாங் வீதியில் உள்ள ஆட்ப் பிரிண்டிங் ஒர்க் என்ற நிறுவனத்தை உருவாக்கினார். 1924 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி தமிழ் நேசனை துவங்கினார். அப்போது அது வார இதழாக இருந்தது பிறகு வாரம் இருமுறை வாரம் மும்முறையாக மாறி, பிப்ரவரி 20, 1937ல் நாளிதழாக மாறியது. இதற்கிடையில் இந்தியன் பயோனியர் என்ற ஆங்கில நாளிதழையும் திருவைங்கார் ஆரம்பித்தார். பத்திரிகை நஷ்டம் ஆகியதால் ஆங்கில இதழை சில மாதங்களில் நிறுத்திவிட்டு தமிழ் நேசனை வளர்ச்சி செய்ய பாடுபட்டார். இந்தியர்களுக்கு ஸ்லாங்கூர் ஸ்டேட் கவுன்சலிலும் பெடரல் சட்ட சபையிலும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று போராடிய திருவயங்கார் 1938 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நான்காம் நாள் காலமானார்.

தமிழ் நேசனின் வெற்றிக்கான காரணங்கள்
அ. சமுதாய குரல் & அரசியல் உரிமை

தமிழ் நேசன் தோட்ட தொழிலாளர்களின் குரலாகச் செயல்பட்டது. 1924 பிப்ரவரியில் தோட்ட தொழிலாளர்களின் குறைந்த பட்ச சம்பளத்தை நிர்ணயிக்கும் விசாரணையில் ஆண்களுக்கு 35 காசும், பெண்களுக்கு 27 காசாகவும் சிலாங்கூர் மாநில பகுதிகளில் நிர்ணயமிக்கப்பட்டிருந்தது. இறுதி விசாரணையில் 1929 பிப்ரவரி முதல் தேதி முதல் தோட்டத் தொழிலாளரான ஆண்களுக்கு 50 காசு, பெண்களுக்கு 40 காசு, சிறுவர்களுக்கு 20 எனக் கிள்ளானில் அந்த வருடம் அக்டோபரில் நடந்த இந்திய இமிகிரேஷன் கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த சம்பளத்திற்கு குறைவாக கொடுத்தால் 1928 ஜனவரி முதல் இந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான உரிம அனுமதி வழங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டியிருக்கும் என்று இந்திய இமிகிரேஷன் கமிட்டி கூறும் நிலைமை ஏற்பட்டது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் விஷயத்தில் அப்போதைய இந்தியா ஏஜென்ட் ராப் சாகிப் சுப்பையா நாயுடுவிற்கு வேண்டிய தகவல்களான தொழிலாளர் வாழ்க்கை செலவு பற்றிய புள்ளி விவரங்கள், பொதுமக்கள் ஆதரவை திரட்டுவது, பொதுமக்களின் அக்கறையை ஊக்குவிப்பதென தமிழ் நேசன் பங்காற்றி உள்ளது. இதனிடையில் சீன தொழிலாளர்களுக்கு 60, 70 காசு என்ற சம்பளம் இருக்கையில் மேற்கொண்டு 10காசு உயர்த்தி 50 காசிலிருந்து 60 காசு கொடுக்க வேண்டுமென ‘10 காசு சம்பள உயர்வு போராட்டம்’ காலகட்டத்தில் கிள்ளான் வட்டாரத்தில் இந்திய தொழிலாளர்களுக்காக 1938-ன் தமிழ் நேசனில் ஆசிரியரான ஆர். எச். நாதன் எனும் ஆர். ஹாலாசிய நாதன் எழுதியதும் குறிப்பிடத்தக்கது.  

மலேசிய தமிழர்களின் அரசியல் உரிமை உள்ள குடிமக்களாக திகழ வேண்டுமென அன்றைய பிரிட்டிஷ் அரசிடம் 1909-ல் உருவாக்கியிருந்த பெடரல் சட்ட சபையினில் ‘தேச சட்டமன்றம்’, சிலாங்கூர் சமஸ்தான சபையிலும் இந்தியர்களுக்கு உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் சி. நரசிம்ம ஐயங்கார் தமிழ் நேசன் மூலம் போராடினார்.

மலாயா சுதந்திரம் பெற்ற போது தமிழ் நேசன் ‘மெர்டேக்கா மலர்’ 1957 வெளியிட்டது. சுதந்திர நாட்டில் இந்தியர்கள் குடியுரிமை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற அக்கரை தமிழ் நேசனுக்கு இருந்தது. இம்மலரில் இதயத்தில் இந்தியராக இருங்கள் என்று வழக்கறிஞர் ஆர் ரமணி எழுதிய கட்டுரை இடம் பெற்றிருந்தது.

ஆ. தமிழ்பள்ளி மாணவர் நிதி

1974ல் முகமது பாச்சாவின் அறிவுரைக்கு இணங்க அன்றைய தமிழ் நேசன் ஆசிரியர் குழுவில் இருந்த தமிழ்ப்பள்ளி மாணவர் நிதி உருவாக்கப்பட்டது.

இ. ஜப்பானியர் ஆட்சி காலத்திலும் தொடந்த பிரசுரம்

ஜி. பார்த்தசாரதி ஆசியராக இருந்தபோது, மலாயாவில் டிசம்பர் 1941-ல் ஜப்பானியர் ஆதிக்கம் ஆரம்பமாகியது. குண்டுவெடிப்புகளின் காரணமாக நேசன் காரியாலயத்தைத் தற்காலிகமாகப் பூட்டிக்கொண்டு நேசன் உரிமையாளர்கள் குடும்பத்தினருடன் பை.கி. ஶ்ரீநிவாச ஐயங்காரும், டமன்சாரா தோட்டத்தில் வேணுகோபால் ஐயங்கார் என்ற தமிழ் பாட சாலை ஆசிரியர் வீட்டில் அடைகளத்துக்குத் தங்கியிருந்தனர். ஜனவரி 11, 1942 ஜப்பானரியர் ஆட்சி கோலாலம்பூரை ஆக்கிரமித்தபோது, இவர்களைத் தேடி வந்து நேசன் உரிமையாளர்களிடம் காரியாலத்தைத் திறக்கும்படியும், ஜப்பானிய ராணுவ ஆட்சியினர் அறிக்கைகளை பிரசுரிக்கவும், பத்திரிகைகளை வெளியிடவும் வந்து வேலை செய்யும்படி கூறியதன் பேரில்  காரியாலயத்தைத் திறந்து நான்கு பக்க நாளிதழ் பிரசுரித்து வெளியிட்டனர். ஜனவரி 20, ஜாவாவிலிருந்து டச்சு விமாங்கள் திடிரென தாக்கியதன் பின்னர் ஜப்பான் ராணுவத்தின் எதிர் தாக்குதல் இரண்டு நாட்கள் நீடித்தது. அக்காலகட்டத்திலும் அதன் பின்னர் தொடர்ந்த போர் காலத்திலும் தமிழ் நேசன் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தது. தமிழ்நேசனுக்கு நிகராக, ஆங்கில பத்திரிக்கை “மலாய் மெயில்” ஜப்பான் பத்திரிக்கை “மாராய் மெயிரு” (ஜப்பான் மொழியில் ‘எல்’ எழுத்து இல்லாத காரணத்தால்), சிங்கையில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ஷொனான் ஷிம்பன் என்ற பெயரிலும் 4 பக்கங்களுடன் நடைபெற தொடங்கின. இதே சமயம் தமிழ்நேசனின் இணை பத்திரிகையான, “மலாயன் டைலி நியூஸ்” வெளிவரத் தொடங்கியது.

ஜப்பானிய ஆட்சி காலத்தில் பலவாறான இடர்களும் சோதணைகளும் இருந்தபோதும், ஜப்பானியர் மனப்போக்கை விளக்கூடிய வேடிக்கையான சோதனையை, அப்போதைய தமிழ் நேசன் ஆசிரியரான பை.கி. ஶ்ரீநிவாச ஐயங்கார் நேசன் நாற்பதாவது நினைவு மலரில் எழுதியுள்ளார். ஜப்பானிய சக்கரவர்த்தி தென்னோ ஹெய்காவின் பிறந்தநாளையொட்டி நேசனிலும் அதன் ஆங்கில அங்கமான 'மலாயன் டெய்லி நியூஸிலும்' அவரது முழு உருவப்படம் முதல் பக்கத்தில் பெருமையுடன் பிரசுரிக்கப்பட்டது. ஆனால் ஜப்பானிய ராணுவ அதிகாரிகள் தங்களின் சக்கரவர்த்திக்கு செய்த ஒரு அவமரியாதையாகக் கருதி விட்டார்கள். தெய்வ பிறவியாக ஜப்பானில் கருதப்பட்ட சக்கரவர்த்தி படத்தைத் தினப்பத்திரிக்கையில் பிரசுரிப்பதால் அப்படம் பலவாறு கிழிந்தும், காலில் மிதிப்பட்டும், மதிப்பிழந்து போகும் என அவர்கள் நம்பினர். எனவே, கோபம் கொண்டு ஜப்பானிய ராணுவ அதிகாரி ஒருவர் நேசன் காரியாலயத்திற்கு வந்து, ஆசிரியரை அழைத்து சிப்பந்திங்கள் அனைவருக்கும் அன்று வரை சம்பளத்தை கணக்கு தீர்த்துக் கொடுக்க சொல்லியபின், எல்லோரையும் வெளியே வர சொல்லி காரியாலயத்தை இழுத்துப் பூட்டிவிட்டு சாவியை எடுத்து சென்று விட்டார். ஆனால் இந்தத் ‘தண்டனை’ இரண்டு நாளுக்கு நீடித்தது. மூன்றாவது நாள் அதே ஜப்பானிய அதிகாரி நேசன் காரியாலயத்திற்கு வந்து, பக்கத்தில் உள்ள கடைக்காரரிடம் நேசன் ஆசிரியரை தன்னை வந்து பார்க்கும்படி தகவல் கொடுக்கச் சொல்லிவிட்டு போனார். தகவல் கிடைத்ததும், ஆசிரியர் பார்த்தசாரதி அந்த ராணுவ அதிகாரியை பார்க்க சென்றபோது, இராணுவ அதிகாரி எச்சரிக்கையுடன் சாவியைத் திரும்பி கொடுத்து மீண்டும் பத்திரிகையைத் தொடர்ந்து பிரசுரிக்க அனுமதியளித்து அனுப்பினார்.

ஈ. இலக்கிய முன்னெடுப்பு

சிறுகதை

1932ல் தமிழ் நேசன் கதை பகுதியைத் தொடங்கிய கோ. பார்த்தசாரதி ‘தோட்டக்கலை மர்மம்’ அல்லது ‘பத்து மலைக் கள்வன்’ எனும் தொடர்கதை எழுத ஆரம்பித்தார். 1933ல் தமிழ் நேசன், புதன், சனி ஆகிய இரு நாட்களில் வாரம் இருமுறை வெளிவந்தது. இந்த இரு வெளியீடுகளிலும், தமிழ் நேசன் முதல் முறையாக சிறு கதைளைப் பிரசுரிக்க ஆரம்பித்தது. 1933ல் தமிழ் நேசன் கிறிஸ்துமஸ் சிறப்பு மலரில் இரு சிறு கதைகள் உள்ளன தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் நல்ல தரமான சிறுகதை. தமிழ் நேசனில் முதலில் சிறுகதை எழுதியவரும் நரசிம்ம ஐயங்கார்தான். ‘கிரமப்போன் சத்தியாவந்தனம்’ ஆகஸ்ட் 2, 1933ல் வெளிவந்தது. அதன்பின், ‘மூக்கந்துரையைப் பாம்பு கடித்தது’ என மலாயாவில் ரப்பர் விலை சரிவால் ஏற்பட்ட சூழ்நிலைக்குத் தகுந்த மலேசிய சிறுகதையை எழுதியுள்ளார். தமிழ் நேசனில் நரசிம்ம ஐயங்கார் மலேசியாவின் சிறுகதைக்கான தளத்தை ஏற்படுத்திய முன்னோடிகளில் ஒருவர்.

கதை வகுப்பு

தமிழ் நேசன் முன்னெடுத்த 'கதை வகுப்பு' மலேசிய நவீன இலக்கியத்தில் தொடக்கமாகக் கருதப்படுகிறது. கதை வகுப்பு சு.ப நாராயணனும் (கந்தசாமி வாத்தியார்), பைரோஜி நாராயணனும் (வானம்பாடி) இணைந்து நவம்பர் 26, 1950 முதல் ஆகஸ்ட் 19, 1951 வரை நடத்தினர். கதை வகுப்பின் முடிவில் இதில் பங்கேற்ற இளம் எழுத்தாளர்களுக்குப் பரீட்சை வினாக்கள் எழுப்பப்பட்டது. தமிழ் நேசன் முன்னெடுத்த கதைவகுப்பு 50-களில் எழுதவந்தவர்களுக்குப் பயிற்சி பட்டறையாக அமைந்தது.

இலக்கிய வட்டம்

கு. அழகிரிசாமி 1952 முதல் 1957 வரை தமிழ் நேசனில் ஞாயிறு பதிப்பு ஆசிரியராகவும் பின்னர் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார். ‘இலக்கிய வட்டம்’ எனும் இலக்கிய சந்திப்புகளை ஆரம்பித்து, எழுத்தாளர்களை அடையாளப்படுத்தி, கறாரான விமர்சனத்துடன் ஊக்கம் கொடுத்தார். மலேசிய எழுத்தாளர்களிடம் புனைவுக்கான நுட்பங்களை ‘இலக்கிய வட்டம்’ என ஜனவரி 1957 முதல் அக்டோபர் வரை மாதமொரு முறையென பத்து சந்திப்புகளில் கொண்டு சேர்த்தார். இதனால் உள்ளூரில் சிறந்து எழுத்தாளர்களையும் சிறுகதைகளையும் கண்டடைந்து அதனை திருத்தி தமிழ் நேசனில் வெளியிட்டார். 1957ல் அழகிரிசாமி மலேசிய தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தி எழுதிய தலையங்கம் அரசின் சீற்றத்துக்கு ஆளானபோது அழகிரிசாமியை தமிழ்நேசன் இதழ் பணிநீக்கம் செய்தது.

பவுன் பரிசு

முருகு சுப்ரமணியன் தமிழ் நேசனில் 1962 முதல் 1975 வரை ஆசிரியராகப் பொறுப்பேற்கும் போது, மலேசிய எழுத்தாளகளுக்கு உந்துதல் கொடுப்பதாக பவுன் பரிசு திட்டம் இருந்தது. இந்த பவுன் பரிசுத் திட்டத்தால் ரெ.கார்த்திகேசு, இராம கண்ணபிரான், அரு.சு.ஜீவானந்தன், சீ.முத்துசாமி, எம். ஏ. இளஞ்செல்வன், பாவை, மாயதேவன் என 70களில் இளம் எழுத்தாளர் குழு உருவானது. இவர்களது படைப்புகளை நேசன் ஞாயிறு பதிப்பில் இடம்பெறச் செய்தார்.

ஆனால், 80ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு புதிய இலக்கிய முயற்சிகள் எதையும் தமிழ் நேசன் எடுக்கவில்லை. அது பழமை போக்குகளுடன் படைப்புகளை தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருந்தது. ஒப்பீட்டளவில் அதே கால கட்டத்தில் மலேசியாவில் வெளிவந்த மற்ற நாளிதழ்கள் எடுத்த இலக்கிய முயற்சிகளை அது எடுக்கவில்லை. வழக்கமான ஒரே பாணியில் அதன் படைப்புகள் இருந்தன.

உ. நிதி சேகரிப்பு

தமிழ் நேசன் பலநோக்கங்களுக்காக நிதியுதவி கோரியிருந்தாலும், சிலவற்றை அவசியம் குறிப்பிட வேண்டியுள்ளது. 1975-ல் தமிழ் பள்ளிகளை மூடவேண்டுமென மேல்தட்டு மக்களின் வற்புறுத்தலை எதிர்த்து, தமிழ் பள்ளிகள் தொடர்ந்து இயங்குவதற்கான நிதியை திரட்டிய பத்திரிக்கைகளில் தமிழ் நேசனும் பங்காற்றியுள்ளது. அந்த காலத்தில் சென்னையில் எரிந்து போன காங்கிரஸ் மாளிகையை புதுப்பித்து கட்டவும் தமிழகப் புயல் பேரிடர்  நிவாரணம், குவேட்டா துருக்கி பூகம்ப பேரிடர் நிவாரணம் போன்ற பலவற்றைக் குறிப்பிடலாம். வாழ்க்கை வசதி இழந்த திக்கற்ற குடும்பங்களுக்கு ஆயிரக்கணக்கான தொகை நிதி சேர்த்து உதவியுள்ளது தமிழ் நேசன்.

தமிழ் நேசன் ஆசிரியர்கள்

நரசிம்ம ஐயங்கார் [10.9.1924 - 4.2.1938]

ஜி. பார்த்தசாரதி [4.2.1938-1957]

ஆதிநாகப்பன் [1957-1963]

வேங்கட ராஜு நாயுடு

கு. அழகிரிசாமி

கே.சி அருண்

முருகு சுப்பிரமணியம்

வே. விவேகானந்தன்

வே. விவேகானந்தன் [1959-1996]

பி. மலையாண்டி [1997-2007]

கே. பத்மநாபன் [2008-2019]

உசாத்துணை

https://www.tamilmurasu.com.sg/channel-1/story20190129-23823.html [மலேசியாவின் தமிழ் நேசன் நாளிதழ் மூடப்படுகிறது என அதிர்ச்சித் தகவல்]

https://vallinam.com.my/version2/?p=4926 [மலேசியத் தமிழ் நாளிதழ்கள்: ஆதி. குமணன் விட்டுச் சென்ற சிதைவுகள்-1 - இரா.சரவணதீர்த்தா]

https://vallinam.com.my/version2/?p=4965 [மலேசியத் தமிழ் நாளிதழ்கள்: ஆதி. குமணன் விட்டுச் சென்ற சிதைவுகள் (பகுதி 2) - இரா.சரவணதீர்த்தா]

https://vallinam.com.my/version2/?p=6334 [அறிந்த வரலாற்றில் அறியப்படாத இடைவெளி – திலிப் குமார் அகிலன்]

https://youtu.be/Ril20tAgbcw 

https://malaysiaindru.my/172788 [தமிழ் நேசன் – சமூகத்தின் ஓர் ஒளிவிளக்காகவும் திகழ்ந்தது!]

https://jeyamohan60.blogspot.com/2022/04/blog-post_42.html [பெருங்களிறின் வருகை - ம.நவீன்]

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%8F._%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF [எஸ். ஏ. கணபதி]

http://vallinam.com.my/navin/?p=4691 [உலகத் தமிழ்ச் சங்கத்தில் கொட்டிய குப்பை – ம.நவீன்]

http://ksmuthukrishnan.blogspot.com/2019/05/blog-post_68.html [தமிழ்நேசன் முதல் சிறுகதை - கே.எஸ். முத்து கிருஷ்ணன்]

https://www.noolaham.net/project/86/8587/8587.pdf [தமிழ்நேசனின் மகத்தான பணிகள் – ஆ. குணநாதன்]

https://tamil.wiki/wiki/%E0%AE%95%E0%AF%81._%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF [கு. அழகிரிசாமி]