தமிழ்வாணன்

From Tamil Wiki
Revision as of 16:34, 9 February 2022 by Jeyamohan (talk | contribs)


தமிழ்வாணன் ( 22 மே 1926 -10 நவம்பர் 1977) எழுத்தாளர், இதழாளர் மற்றும் பொது ஆளுமை. சிறுவர்களுக்கான இதழாக தொடங்கப்பட்டு முதிரா இளைஞர்களுக்கான பொதுஅறிவு இதழாக நடத்தப்பட்ட கல்கண்டு இதழின் ஆசிரியர். பல்துறை வித்தகர் என தன்னை அறிவித்துக்கொண்டு அனைத்து துறைகளைப் பற்றியும் அடிப்படைத்தகவல்களை எழுதினார். துப்பறியும் கதைகளையும் எழுதினார்.

பிறப்பு, கல்வி

தமிழ்வாணனின் இயற்பெயர் இராமநாதன் செட்டியார். தமிழ்நாட்டின் அன்றைய இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் வாழ்ந்த லெட்சுமணன் செட்டியாருக்கும் பிச்சையம்மை ஆச்சிக்கும் இரண்டாவது மகனாக 1926 மே 5ஆம் நாள் பிறந்தார். தேவகோட்டையில் பள்ளி இறுதி வரை கல்விகற்றார். திருச்சியில் பட்டப்படிப்பை முடித்தார். தமிழ்வாணனின் தந்தை லெட்சுமணன் செட்டியாரும் இலக்கிய வாசிப்பு கொண்டவர். அன்று தேவகோட்டையில் நகரத்தார் பலர் பதிப்பாளராகவும் விளங்கினர். ஆகவே இளமையிலேயே இலக்கிய அறிமுகம் உருவாகியது

தனிவாழ்க்கை

தமிழ்வாணனின் மனைவி பெயர் மணிமேகலை. அவருக்கு இரண்டு மகன்கள். லெட்சுமணன் (லெனா தமிழ்வாணன்) ரவி தமிழ்வாணன். லெனா தமிழ்வாணன் அவருக்கு பின் அவர் ஆசிரியராக இருந்த கல்கண்டு இதழின் ஆசிரியரானார். ரவி தமிழ்வாணன் மணிமேகலை பிரசுரம் நிறுவனத்தை நடத்திவருகிறார்.

இதழியல் வாழ்க்கை

வல்லிக்கண்ணனை ஆசிரியராகக் கொண்டு திருச்சியில் இருந்து வெளிவந்த கிருஷ்ணசாமி ரெட்டியாரின் ‘கிராம ஊழியன் என்னும் இதழில் தமிழ்வாணன் 30 ரூபாய் சம்பளத்தில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். பல எழுத்தாளர்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. சில மாதங்களில் கிராம ஊழியன் ஆசிரியராய் பதவி உயர்வு பெற்றார். அதன் பின்னர் சென்னை வந்த தமிழ்வாணன் செட்டிநாட்டுக்காரரும் ‘சக்தி’ என்ற மாத இதழை வெளியிட்டு வந்தவருமான வை.கோவிந்தன் தொடங்கிய ’அணில்’ என்ற குழந்தைகளுக்கான புதிய வார இதழில் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். அதில் ’துணிவே துணை’ என்ற சொற்றொடரை குறிக்கோளுரையாக அறிமுகப்படுத்தினார்.இக்காலகட்டத்தில் சக்தி இதழில் பணியாற்றிய ரா.கி.ரங்கராஜன் கண்ணதாசன் போன்றவர்களிடம் அணுக்கமான உறவு உருவாகியது.

தனது பள்ளித் தோழரான வானதி திருநாவுக்கரசுடன் இணைந்து ’ஜில்ஜில் பதிப்பகம்’ என்ற பெயரில் குழந்தைகளுக்காக நூல்கள் வெளியீட்டகம் ஒன்றைத் தொடங்கினர். அந்தப் பதிப்பகத்தின் முதல் வெளியீடு ’சிரிக்காதே!’. அதில் ‘அணில் அண்ணா’ என்ற பெயரில் சிறு செய்திகளை எளிமையாக எழுதினார். பின்னாளில் அதுவே கல்கண்டு இதழின் பாணியாக மாறியது. ஜவகர்லால் நேருவின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். ’அல்வாத் துண்டு’, ’சுட்டுத் தள்ளு’, ’பயமா இருக்கே’ என்ற பல தலைப்புகளில் சிறுவர்களுக்கான நூல்களை எழுதினார். அணில் இதழிலும் பின்னர் ஜில்ஜில் பிரசுரத்திலும் இவர் உருவாக்கிய ‘கத்தரிக்காய்’ என்னும் சிறுவர்களுக்கான துப்பறியும் கதாபாத்திரம் புகழ்பெற்றது.

கல்கண்டு வார இதழ்

குமுதம் ஆசிரியர் எஸ். ஏ. பி. அண்ணாமலை கல்கண்டு என்ற புதிய வார இதழை ஆரம்பித்து அதன் முழுப் பொறுப்பையும் தமிழ்வாணனிடம் ஒப்படைத்தார். ’துணிவே துணை’ என்ற முகப்பு வரியுடன் கல்கண்டு சிறுவர் இதழாக சிலகாலம் வெளிவந்தபின் முதிரா இளைஞர்களுக்கான இதழாக ஆகியது.

வேறு துறைகள்

  • "தமிழ்ப் பற்பொடி" என்ற பெயரில் பற்பொடியை தயாரித்து விற்பனை செய்தார்.
  • தெலுங்கில் வெளிவந்த திரைப்படங்கள் இரண்டை பிள்ளைப்பாசம், துடிக்கும் துப்பாக்கி என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார்.
  • காதலிக்க வாங்க என்ற தமிழ்த் திரைப்படத்தை தானே கதை, வசனம் எழுதித் தயாரித்து வெளியிட்டார்.