தமிழ்மணம்

From Tamil Wiki
தமிழ் மணம்

தமிழ்மணம் (23 ஆகஸ்ட் 2004 ) தமிழ் இணையப்பதிவுகளின் திரட்டி. தமிழிலும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் எழுதப்படும் வலைப்பதிவுகளை தொகுத்தளிக்கிறது.

தொடக்கம்

தமிழ்மணம் இணையத்திரட்டி காசி ஆறுமுகம் அவர்களால் 23 ஆகஸ்ட் 2004-ல் தொடங்கப்பட்டது. 14 அக்டோபர் 2004 ல் எழுதிய குறிப்பில் காசி ஆறுமுகம் இந்தத் திரட்டி பற்றி இவ்வாறு கூறுகிறார். ’தமிழ் வலைப்பதிவு அரங்கம் என்ற பெயரில் இயங்கு வலைப்பக்கங்கள் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு மேடைத்தளமாகும் (WEB PORTAL) இது. வலைப்பதிவர் பட்டியல், மற்றும் செய்தியோடை வாயிலாகத் திரட்டப்படும் விஷயங்கள் இதை ஒரு உயிருள்ள தளமாக, நிமிடத்தில் மாறும் ஒன்றாக வைத்திருக்கும். ஆனால், உண்மையில் இது ஒருவர் அவ்வப்போது கைவைக்காத ஒரு தானியங்கியாகும்’.

பணிகள்

2004 முதல் பத்தாண்டுகள் தமிழ்மணம் திரட்டி வலைப்பூக்களை திரட்டி அளிப்பதில் பெரும்பங்கு வகித்தது. 2006 ல் காசி ஆறுமுகம் அதன் நேரடிப்பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டார். அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் நிறுவனமான தமிழ் மீடியா இண்டர்நேஷனல் நிறுவனம் தமிழ்மணத்தை வாங்கி தன் பொறுப்பில் நிர்வாகம் செய்தது.

தொடக்ககால நிர்வாகிகளாக கீழ்க்கண்டோர் இருந்தனர்

  • முனைவர் இரா. செல்வராஜ் - தலைவர்,
  • முனைவர் நா. கணேசன் - துணைத் தலைவர்,
  • முனைவர் பா. சுந்தரவடிவேல் - செயலாளர்,
  • மயிலாடுதுறை சிவா - பொருளாளர்.
  • முனைவர் சொ. சங்கரபாண்டி
  • தமிழ்சசி
  • முனைவர் இரமணீதரன்
  • முனைவர் பாலு
  • இளங்கோ
  • முனைவர் சுந்தரமூர்த்தி
  • கார்த்திக்ராமஸ்
  • முனைவர் தங்கமணி
  • முனைவர் பாலாஜி பாரி

உசாத்துணை