தஞ்சை பிரகாஷ்

From Tamil Wiki
Revision as of 01:37, 28 January 2022 by Madhusaml (talk | contribs) (category & stage updated)

Template:Stub page


தஞ்சை பிரகாஷ் என்னும் ஜி. எம். எல். பிரகாஷ் படைப்பாளி, இதழாளர், இசைக் கலைஞர், ஓவியர் மற்றும் தீவிர இலக்கியச் செயற்பாட்டாளர் (பிறப்பு 1943). தஞ்சை பிரகாஷ், கரமுண்டார் வீட்டில் பிறந்தவர். அவருடைய பூர்வீக கிராமத்தின் பெயர் கரமுண்டார் கோட்டை. பல இலக்கிய அமைப்புக்களை உருவாக்கியவர். பல இலக்கிய இதழ்களையும் நடத்திவந்தார். சிறுகதை, கவிதை, நாவல், விமர்சனம், கட்டுரை, இதழியல், பதிப்பு என எழுத்தின் எல்லா பரிமாணங்களிலும் ஆழமாகக் கால் பதித்தவர் பிரகாஷ் தனது புனைவுவகை ‘பசி: சரித்திரம்,காமம் போன்றவைகளில் இருந்து உருவாக்கியவர். பெண்களின் உளவியலையும் தேடலையும் வேட்கையையும் காதலையும் சொல்லும் பிரகாஷின் கரமுண்டார் வூடு வெளிவந்த காலகட்டத்தில் பெரிதும் பேசப்பட்டது. பாலியல் பிறழ்வுகள், குற்றங்கள் என்று சமூகத்தாலும் சட்டத்தாலும் தள்ளிவைக்கப்பட்ட விஷயங்களுக்குள் தஞ்சை பிரகாஷ் தயக்கமின்றி நுழைந்திருக்கிறார்.


பிறப்பு, கல்வி

பிரகாஷின் அப்பா கார்டன் எல்.ஐ.சி-யில் பணியாற்றினார், அம்மா கிரேஸ், மருத்துவர். தீவிரக் கிறிஸ்தவர்கள். பிரகாஷ் ஒரே மகன்.

தஞ்சை பிரகாஷ் தமிழ் இலக்கியம் படித்தார். வாழ்நாளெல்லாம் படித்துக்கொண்டும் கற்றுக்கொண்டுமே இருந்தார். மெஸ்மரிசம். அங்கசாஸ்திரம் மற்றும். கிரிமினாலஜி ஆகியவற்றை படித்தார்.ஓஷோவை,. ரமணரை முழுவதும் வாசித்தார். வரலாற்றில் தீவிர ஆர்வம் உண்டு.

ஃப்ரென்ச், ஜெர்மென், வங்காளம், மலையாளம், கன்னடம், ஒரியா, உருது தெலுங்கு சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் தெரியும் . பைபிள் மனப்பாடம். சமஸ்கிருத்த்தில் சிரோன்மணி பட்டம் பெற்றவர். ஓவியக்கலையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். இசையிலும் ஆர்வம் இருந்தது.

தனி வாழ்க்கை

ஒரத்தநாடு அருகில் உள்ள கீழக்கண்ணத்தங்குடியைச் சேர்ந்த, ஒருவகையில் பிரகாஷுக்கு உறவுக்காரரான மங்கையர்க்கரசியை திருமணம் செய்துகொண்டார்.மங்கையர்க்கரசி கம்யூனிட்டி ஹெல்த் நர்சாக இருந்தார்.

சர்க்கரை நோய், எலும்பு முறிவால் ஏற்படும் ஆஸ்டியோமைலிடிஸ், சிறுநீரகக் கோளாறு என உடம்பில் பல்வேறு நோய்களை கொண்டிருந்தும், ஓய்வில் இருக்காமல் இலக்கியக் கூட்டங்களை தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்தார். அலோபதி மருத்துவத்தில் நம்பிக்கை குறைந்து பின்னர் இயற்கை வைத்தியத்தை நாடினார். ஆன்மிகத் தேடலும் பிரகாஷுக்கு உண்டு.

ரயில்வே, அஞ்சல் துறை தேர்வுகளை எழுதி, ஒரே நேரத்தில் இரண்டு துறைகளிலும் வேலை கிடைத்தபோது. ரயில்வேயைத் தேர்வு செய்தார் பிரகாஷ். ரயில்வேயில் விபத்து பிரிவில் பாலக்காட்டில் பணியாற்றினார் அவ்வேலையை சிறிது காலத்திலேயே ராஜினாமா செய்துவிட்டு சொந்தமாக பல தொழில்களை துவங்கினார்

தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்டில் பால் கடை, பேப்பர் கடை, வெங்காய வியாபாரம் என்று ஆந்திராவிலிருந்து கல்கத்தா வரை வியாபாரம் செய்தார்.அந்த பயணங்களில்தான், மலையாளம், தெலுங்கு, கன்னடம், வங்காளம், உருது, ஒரியா, சமஸ்கிருத மொழிகளெல்லாம் கற்றுக்கொண்டார்

பிறகு மதுரையில் பி .கே.புக்ஸ் என்ற பெயரில் ஒரு பதிப்பகத்தைத் தொடங்கி சில புத்தகங்கங்கள் பதிப்பித்தார். பின் தஞ்சாவூருக்கு வந்து ஸ்கிரீன் பிரிண்டிங், ரப்பர் ஸ்டாம்ப் கடை வைத்தார்.

எந்தத் தொழில் தொடங்கினாலும் அவை பகுதி நேர தொழிலாகவே இருந்தன. இலக்கியமே அவரது முக்கியமான பணி. கடையில் எப்போதும் இலக்கிய விவாதங்கள் நடக்கும். எழுத்து ஆர்வம் கொண்ட இளைஞர்களை ஓர் ஆசிரியராக இருந்து செம்மைப் படுத்திய பிரகாஷை இளம் படைப்பாளிகள் ஆசான் என்று அழைத்தார்கள்.

கத்தை கத்தையாக கடிதங்கள் எழுதுவார்.கடித இலக்கியம் என்றொரு வடிவத்தை முறைமைப்படுத்தி முன்னெடுத்து சென்றதில் பிரகாஷின் பங்கு முக்கியமானது. கடிதங்களுக்காகவே ‘சாளரம்’ இதழை நடத்தி கடித இலக்கியத்திற்கு வலுசேர்த்தார். புத்தகம் படிப்பது, பிடித்த புத்தகங்களின் பிரதிகள் வாங்கி நண்பர்களுக்குக் கொடுப்பது, இலக்கிய ஆளுமைகளை அழைத்துக் கூட்டங்கள் நடத்துவது இவற்றிலேயே தனது வாழ்நாளை செலவழித்தார். இலக்கியவாதிகள் சந்திப்புக்கென்றே ‘யுவர் மெஸ்’ என்ற உணவு விடுதியை நடத்தியவர்.

பிரகாஷின் மறைவிற்கு பிறகு அவரது கையெழுத்துப் பிரதிகள், பிரகாஷ் சேகரித்து வைத்திருந்த அரிய நூல்களை எல்லாம் ராஜா முத்தையா நூலகத்துக்கு வழங்கிய மங்கையற்கரசி த்வம்சம், முகமன், கடைசி மாம்பழம் ஆகிய சிறுகதைகளின் கையெழுத்துப் பிரதிகளை மட்டும் வைத்திருக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

கவிஞர் எழுத்தாளர் கட்டுரையாளர் பதிப்பாளர் பத்திரிகை ஆசிரியர் என்ற பன்முகத்தன்மை கொண்ட பிரகாஷின் இலக்கிய ஆர்வம் பரந்துபட்டது. இளமையிலிருந்தே இலக்கிய ஆர்வம் கொண்டிருந்தார். மணிக்கொடி கால எழுத்தாளர்களின் படைப்புகள் அவரை வெகுவாக கவர்ந்தன குறிப்பாக மெள்னியின் படைப்புக்கள். இந்தி, கன்னடம் உள்ளிட்ட இந்தியாவின் பல மூத்த எழுத்தாளர்களுடன் அவருக்கு நேரடி உறவிருந்தது.மிகச் சிறந்த வாசகர்.

உளவியல் தன்மையோடும், மனித உள்ளுணர்வுகளை சீண்டும் தன்மையோடும் அமைந்ததஞ்சை பிரகாஷின் எழுத்து, பலத்த விமர்சனத்துக்கும் உள்ளானது. ஆண் - பெண் பாலியலை மட்டுமின்றி, பெண் - பெண் உறவுகளையும் அவரது நாவல்கள் பேசின. வாசித்தவற்றைகளையும், தன்னை கவர்ந்த வற்றையும் தெரிவிப்பதிலும் பிறருடன் உரையாடுவதில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். இதற்காகவே ’’சும்மா இலக்கிய கும்பல்’’ என்னும் இலக்கிய அமைப்பு உள்ளிட்ட பல இலக்கிய அமைப்புகளை துவங்கி தொடர்ந்து விமர்சன கூட்டங்களை நடத்தினார்.

மிகச்சிறந்த கதை சொல்லியும் கூட. இலக்கியப் பரிச்சயமும் தத்துவப் பரிச்சயமும் அவரது கதை சொல்லலில் தனித்துவமாக வெளிப்பட்டன. பிரகாஷ் மொழிபெயர்ப்பாளரும் கூட. மலையாளம் நன்கு அறிந்த அவர், மலையாளத்திலிருந்து தமிழுக்கு நிறைய இலக்கியங்களை கொண்டுவந்தார். பிரகாஷ் மொழிபெயர்த்த கதைகளின் தொகுப்பானது ‘ஞாபகார்த்தம்’ என்ற பெயரில் சமீபத்தில் வெளிவந்துள்ளது. அந்த நூலில் மலையாளம், இந்தி, வங்கம், ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மொழிகளில் இருந்து தஞ்சை பிரகாஷ் நேரடியாக மொழிபெயர்த்திருக்கிறார் என்ற குறிப்பு உள்ளது.

1990 மார்ச் மாதத்தில், ‘கலைஞர்களின் கலைஞன்’ என்று காஃப்கா வைப் பற்றி பிரகாஷ் ஆற்றிய உரை மிக முக்கியமாக பேசப்பட்டது. 1975–ல் அவரது ‘பி.கே. புக்ஸ்’ பதிப்பகத்தில் க.நா.சு.வின் ‘பித்தப்பூ’, கே.டானியலின் ‘பஞ்சமர்’, கி.ராஜநாராயணனின் ‘கிடை’, அம்பையின் ‘சிறகுகள் முறியும்’ போன்ற முக்கியமான நூல்களைக் கொண்டுவந்தார்.

சாகித்ய அகாதமிக்காக க.நா.சு. வாழ்க்கை வரலாற்று நூலை, காரைக்கால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தனது வாழ்நாளின் கடைசிக் காலத்தில் எழுதி முடித்தார்.

1994-ல் ‘குயுக்தம்’ இதழில் வெளியான அவரது ‘பூ கோஸ்’ கதை தஞ்சை மராட்டிய குடும்பத்தின் பின்னணியில் நிகழ்கிறது.

சுமார் 250 ஆண்டுகளாகத் தொடர்ந்து கரமுண்டார் வீடு என்னும் குடும்பப் பெருமை பெற்றுள்ள கள்ளர் சமுதாயத்தின் ஒரு கூட்டுக் குடும்பம், அக்குடும்பத்தின் பண்ணையாட்களாகப் பணிபுரியும் பள்ளர்களுக்கும் அக்குடும்பத்தினருக்கும் இருந்து வரும் நெருக்கம் உறவு இவற்றில் முரண்களும் மோதல்களும் வெடிக்கையில் ஏற்படும் அவமானங்கள் இழப்புகள், ஒழுக்கவியலை மீறிய விலகல்கள் - பாய்ச்சல்கள் என விரிவார்ந்த தளத்தில் காவேரிக் கரையிலுள்ள அஞ்சினி என்னும் கிராமத்து வாழ்வு ‘கரமுண்டார் வீடு’ என்னும் நாவலில் பேசப்படுகிறது.

“மீனின் சிறகுகள்” நாவலில் பிராமண சமுதாயம் சார்ந்தவாழ்க்கை விவரிப்பில் பாலியல் வேட்கை மிக்க தங்கமணி என்னும் இளைஞனின் பெண் வேட்டைபேசப்படுகிறது. கள்ளம் நாவலின் அடிநாதமும் ‘கட்டில்லாத காமம்’தான். தஞ்சை ஓவிய மரபில் வரும் கைதேர்ந்த ஓவியன் ஒருவனின் மகன்தான் இக்கதையின் மையம். காமம் என்பது உடல் சார்ந்ததா, மனம் சார்ந்ததா என்ற தேடலுக்கான முடிச்சை அவிழ்க்க முயற்சி செய்கிறது ‘கள்ளம்’.

பல்வேறு படையெடுப்புகள், ஆதிக்கம் போன்றவற்றால் அரசியல், பொருளாதார ரீதியில் பல சீரழிவுகள் ஒரு பக்கம் ஏற்பட்டாலும் கலாச்சார ரீதியில் வளமான ஒரு பாரம்பரியம் தஞ்சையில் வேரூன்றியது. இந்தக் கலாச்சார வெளிதான் தஞ்சை பிகாஷின் பெரும்பாலான சிறுகதைகளின் நிகழ்விடம். தஞ்சை பிரகாஷ் தொகுத்த நாட்டுப்புற கதைகள் தொகுக்கப்பட்ட காலத்தில் தாமரை இதழில் தொடர்ந்து வெளிவந்தன.தஞ்சையின் புராணகால கற்பனை மட்டுமல்லாது, சில நூறு ஆண்டுகளுக்கு முந்தைய தஞ்சையின் கலாசாரத்தின் எதார்த்தையும் கொண்டுள்ளதாக அமைந்துள்ளன இக்கதைகள்.

‘திண்டி’, ‘அங்கிள்’, ‘கொலைஞன்’, ‘சோடியம் விளக்குகளின் கீழே’, ‘க்யாமத் என்னும் இறுதித் தீர்ப்பின் நாள்’, மேபல், பற்றி எரிந்த தென்னை மரம், கடைசிக்கட்டி மாம்பழம் ஆகியவற்றை தஞ்சை பிரகாஷின் சிறப்பான சிறுகதைகள்.

பிரகாஷ் சிறுகதை,குறுநாவல், நாவல் என்று பல விதமாக கதைகளைச் சொல்ல முயன்றுள்ளார்.இவரது பெரும்பாலான படைப்புகள் மனிதனுக்கும் காமத்துக்குமான தொடராட்டத்தை வயது,சாதி, உறவு, மதப்பேதங்களைக் கடந்த வெளியில் விவரித்துக் செல்கின்றன கள்ளம், மிஷன் தெரு, கரமுண்டார் வீடு, மீனின் சிறகுகள் நாவல்களும், பற்றி எரிந்த தென்னை மரம், ஜானு பாட்டி அழுது கொண்டிருக்கிறாள், வத்ஸலி, மேபெல், அங்கிள், ராவண சீதை சிறுகதைகளும் பலத்த விவாதங்கள், சர்ச்சைகளை ஏற்படுத்தியவை. எண்பதுகளின் பிற்பகுதியில் லத்தீன் அமெரிக்க இலக்கியங்களின் அறிமுகத்துக்கு பிற்பாடு, தமிழ் இலக்கியப் போக்குகளில் ஏற்பட்ட மாறுபாடுகளை அறிந்துகொள்ள அன்றைக்கு தஞ்சை இளைஞர்களுக்கு பிரகாஷ் ஒரு வரமாக இருந்தார். கலைஞர்களை ஈர்க்கும் விஷயங்கள் எல்லாம் அவரிடம் இருந்தன இருபதாம் நூற்றாண்டின் தகவல் களஞ்சியமாக விளங்கினார் என்று அசோகமித்திரன் பிரகாஷை குறிப்பிடுகிறார்.

வாழ்வின் தீரா ஆச்சரியங்களும், முடிவற்று தொடரும் காமத்தின் தீண்டல்களும் கொண்டவர்களாக தஞ்சை பிரகாஷின் கதை மாந்தர்கள் வலம் வருகிறார்கள். அசட்டுத்தனமான, மிகை உணர்ச்சியற்ற நிதானத்துடன் கதை சொல்லும் பிரகாஷ், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனித்தனி சித்திரமாகப் பதியும்படி தீட்டியிருக்கிறார். ஆண் / பெண் மனங்களில் பொதிந்து கிடக்கும் காமத்தின் மூர்க்கத்தனமும், வன்மமும் தெறிக்க தெறிக்க, அதன் பொருட்டெழுகிற பகையுணர்ச்சி என அவர் காட்டுகிற உலகம் என்றென்றைக்குமானது. பாலுணர்ச்சியின் எல்லையற்ற கற்பனைகள், உள்மன விகாரங்கள், அதன் மீதான சுய பகடிகள் என கதைகளில் இழையோடுகின்றன என்கிறார் . அவரது சிறுகதைகளை தொகுத்த அகநாழிகை பொன் வாசுதேவன்.‘ தமிழ் இலக்கியம் மட்டுமல்லாது ஹிந்தி, வங்காள இலக்கியங்களிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது. க.நா.சு வெங்கட் சாமிநாதன் கரிச்சான் குஞ்சு எம் வி வெங்கட் ராம் ஆகியோருடன் நெருங்கிய நட்பில் இருந்தார். இந்தி இலக்கிய சிற்பி பிரேம் சந்திற்காக பிரகாஷ் நடத்திய இலக்கியக் கூட்டம் பலரையும் கவனிக்க வைத்தது.

’’தஞ்சையில் அவர் ஓர் இலக்கிய மையம். அவரது கதைசொல்லிகள் என்னும் அமைப்பு பல எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கிறது தஞ்சை பிரகாஷின் சிறுகதைகள் சில குறிப்பிடத்தக்கவை என நினைக்கிறேன். நாவல்களில் இல்லாத அபூர்வமான மனநிலைகள், சிடுக்கான வாழ்க்கை தருணங்களை அவர் சிறுகதைகளில் தொட்டிருக்கிறார். ஜானகிராமன் நெடி அதிகம் இருந்தாலும் அவை வாசிக்கத்தக்கவை’’ என்று குறிப்பிடுகிறார் ஜெயமோகன்.

'பிரகாஷின் பாலியல் கற்பனைகள், பொய்யானவை. வெறும் சுயமைதுனக் கதைகள்’ என்ற விமர்சனமும் அவரது படைப்புகள்மீது தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தது. அதன் காரணமாகவே பெரிய அளவிலான வாசகர் வட்டமும் அவருக்கு இல்லை. ஆனாலும், அவர் தன் போக்கில் செயல்பட்டுக்கொண்டே இருந்தார். அவரது மொழிக்கட்டின் மீதும், வடிவத்தின் மீதும் வைக்கப்பட்ட எந்த விமர்சனத்துக்கும் அவர் செவி கொடுக்கவில்லை.

அவர் மறைவுக்கு பிறகு, அவரின் அச்சேறாத சில சிறுகதைகள் தொகுப்புகளாக வெளிவந்தன.அவரது பல படைப்புகள் இன்னும் அச்சேறாமல் இருக்கின்றன

இலக்கிய அமைப்புக்கள்

  • ஒளிவட்டம்
  • சும்மா இலக்கியக் கும்பல்
  • கதைசொல்லிகள்
  • தளி
  • தமிழ்த்தாய் இலக்கியப் பேரவை
  • தனிமுதலி
  • தாரி
  • கூட்டுசாலை

இலக்கிய இதழ்கள்

  • வெசாஎ
  • பாலம்
  • சாளரம்,
  • வைகை
  • குயுக்தி

நூல்பட்டியல்

  • கரமுண்டார் வூடு
  • மீனின் சிறகுகள்
  • தஞ்சை பிரகாஷ் சிறுகதைகள்
  • கள்ளம்
  • தஞ்சை நாடோடிக் கதைகள்
  • புலன் விசாரணை
  • பள்ளத்தாக்கு
  • என்னை சந்திக்க வந்தான்
  • நாகம்
  • பூகோஸ்
  • வைர மாலை
  • அஞ்சு மாடி
  • வடிகால்
  • வாரியம்
  • உம்பளாயி
  • நியூஸன்ஸ்
  • சோடியம் விளக்குகளின் கீழ்
  • அங்குசம்
  • உனக்கும் ஒரு பக்கம்
  • தஞ்சையின் முதல் சுதந்திரபோராட்டம்
  • சுயம்
  • எரித்தும் புதைத்தும்
  • வத்ஸலி
  • பொறா ஷோக்கு
  • பேய்க்கவிதை
  • கொலைஞன்
  • தஞ்சை சிறுகதைகள்
  • தஞ்சை நாடோடிக் கதைகள்
  • வெக்கங்கெட்டவன்
  • திண்டி
  • ஆலய மண்டபம்
  • மேபெல்
  • கடைசிக் கட்டி மாம்பழம்
  • இருட்டின் நிறங்கள்
  • க்யாமத் என்னும் இறுதி தீர்ப்பின் நாள்

மறைவு

சிறுநீரக கோளாறினால் சிகிச்சை பலனின்றி 27/2/2000 அன்று காலமானார். பிரகாஷ் இறந்த போது அவருக்கு வயது 57.

===விருதுகள்

  • அக்னி விருது
  • கேரளத்து குமரன் ஆசான் விருது
  • கதா விருது

இணைப்புகள்