under review

தக்கர் பாபா: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
m (Reviewed by Je)
Line 22: Line 22:


* தீண்டாமையை தகர்த்த தக்கர்பாபா - தி.சுபாஷிணி - வெளியீடு, சிறுவாணி வாசகர்மையம், கோவை
* தீண்டாமையை தகர்த்த தக்கர்பாபா - தி.சுபாஷிணி - வெளியீடு, சிறுவாணி வாசகர்மையம், கோவை
{{first review completed}}
{{finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 21:47, 22 April 2022

தக்கர் பாபா

தக்கர் பாபா (அம்ரித்லால் விட்டல்தாஸ் தக்கர் பாபா) (நவம்பர் 9, 1869 - ஜனவரி 20, 1951) காந்திய நம்பிக்கை கொண்டிருந்த சமூகசேவகர். தலித் பழங்குடி மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக உழைத்த முன்னோடி. பில் பழங்குடிகளுக்காக பில் சேவா மண்டல் என்னும் அமைப்பை நிறுவியவர். பின்னர் ஹரிஜன் சேவா சங் செயலாளராக பணியாற்றினார். பாரதிய ஆதிம்ஜாதி சேவக் சங் என்னும் அமைப்பை நிறுவியவர்.

பிறப்பு, கல்வி

குஜராத் மாநிலத்தில் பவ்நகரில் லோஹனா குடியில் நவம்பர் 9, 1869 அன்று பிறந்தார். தந்தை பெயர் விட்டல்தாஸ் தக்கர். புனேயில் கட்டுமானப்பொறியியலில் பட்டயப்படிப்பை 1890-ல் முடித்தார்.

தனிவாழ்க்கை

ஷோலாப்பூர்,பவ்நகர், போர்ப்பந்தர் போன்ற ஊர்களில் ரயில்வே பொறியாளராகப் பணியாற்றினார். 1900-ஆம் ஆண்டு மூன்றாண்டு ஒப்பந்தத்தில் உகாண்டா சென்றார். அங்கே முதல் இருப்புப்பாதை திட்டத்தில் பங்காற்றினார். இந்தியா திரும்பி சாங்லி நகரில் தலைமைப் பொறியாளராக ரயில்வேயில் பணியாற்றினார்.

அரசியல்,சமூகசேவை

தக்கர் பாபாவுக்கு 1905-ல் கோபாலகிருஷ்ண கோகலே தொடர்பு உருவாகியது. கோகலேயின் Servants of India Society அமைப்பில் உறுப்பினரானார். காந்தியை 1918-ல் அறிமுகம் செய்துகொண்டார். மும்பை நகராட்சியில் பணிக்குச் சேர்ந்தார்.குப்பை அள்ளும் தொழிலாளர்களுக்காக நலத்திட்டங்களை அறிமுகம் செய்தார். 1942-ல் வங்கம் மற்றும் ஒரிசாவில் நிகழ்ந்த பெருவெள்ளத்தில் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டார்.

குஜராத்தின் பஞ்சமகால் பகுதியைச் சேர்ந்த பில் பழங்குடிகளின் நலவாழ்க்கைக்காக ஆதிம் சேவா சங் என்னும் அமைப்பை 1922-ல் உருவாக்கினார். 1932-ல் காந்தியின் ஹரிஜனசேவா சங்கத்தின் செயலாளராக பொறுப்பேற்றார். பாரதிய ஆதிம்ஜாதி சேவக் சங்க் என்னும் அமைப்பை 1948 அக்டோபர் 24-ஆம் தேதி உருவாக்கினார். தக்கர்பாபா இந்திய அரசியல் சட்டத்தில் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்கான சலுகைகளுக்கான ஆலோசகராகச் செயல்பட்டார். தன் வாழ்க்கையில் 35 ஆண்டுகளை தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்காகச் செலவிட்டார்

அப்பா டக்கர்

தக்கர்பாபாவால் சென்னை தி.நகரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக கட்டப்பட்ட தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 1946-ல் காந்தி அடிக்கல் நாட்டினார். அது தக்கர்பாபா வித்யாலயா என அழைக்கப்படுகிறது. சென்னையின் குடிசைவாழ் மக்களிடையே அப்பா தக்கர் என அவர் அழைக்கப்பட்டார். இன்று அது பெரிய மனிதர்களை அழைக்கும் ஒரு சொலவடையாக புழக்கத்திலுள்ளது.

மறைவு

ஜனவரி 20, 1951 அன்று தன் 82-வது வயதில் மறைந்தார்

உசாத்துணை

  • தீண்டாமையை தகர்த்த தக்கர்பாபா - தி.சுபாஷிணி - வெளியீடு, சிறுவாணி வாசகர்மையம், கோவை


✅Finalised Page