second review completed

டைம் பாஸ்

From Tamil Wiki
டைம் பாஸ்

டைம் பாஸ் (2012-2017) விகடன் குழுமத்திலிருந்து வெளியான பொழுதுபோக்கு இதழ். திரைப்படச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது. அரசியல், சமூகம், இணையம், தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை எள்ளல் நடையுடன் வெளியிட்டது. கவர்ச்சிப் படங்களுக்கும், கேலிச் சித்திரங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தது. 2017-ல் நின்று போனது.

வெளியீடு

திரைப்படம் மற்றும் பொழுதுபொக்குச் செய்திகளை மையப்படுத்தி, அக்டோபர் 13, 2012 முதல் விகடன் குழுமத்திலிருந்து வெளிவந்த இதழ் டைம் பாஸ். இதழின் முகப்பு அட்டையில் 'டைம்பாஸுக்கு எல்லாம் பாஸ்‘என்ற வாசகம் இடம்பெற்றது. தனி இதழின் விலை - ரூபாய் ஐந்து.

உள்ளடக்கம்

டைம் பாஸ் இதழில் அரசியல், சினிமா, திரைப்பட விமர்சனங்கள், கிசுகிசுக்கள், கேலிச்சித்திரங்கள், ஜாலி புதிர்கள் ஆகியன இடம் பெற்றன. கிசுகிசு டிக்ஷனரி, ஆஃப்தி ரெகார்டு போன்ற தலைப்புகளில் திரைப்படச் செய்திகள் வெளியாகின. பெரும்பாலான இதழ்களின் முகப்பில் நடிகைகளின் கவர்ச்சிப் படங்கள் இடம்பெற்றன.

டைம் பாஸ்  இதழ் அரசியல் கிண்டல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. ‘அவதூறு வழக்குக்கு ஆளாகாமல் ஜெயலலிதா குறித்துக் கட்டுரை எழுதுவது எப்படி’, ‘2000 ரூபாய் கொடுத்தால் வாடகை கலைஞர்’ எனப் பல கட்டுரைகள் வெளியாகின. நெடுமாறன், ஜி. ராமகிருஷ்ணன், துரைமுருகன், பொன். ராதாகிருஷ்ணன், சரத்குமார் போன்ற அரசியல் கட்சித் தலைவர்களின் நேர்காணல்கள் இடம்பெற்றன. குஷ்புவுக்குக் கோயில் கட்டப்பட்டது நிஜமா, விஜயகாந்திடம் அடி வாங்காமல் தப்பிப்பது எப்படி?, காமெடி பீஸ் திருட்டுக்கள் எனப் பல செய்திகள் இடம்பெற்றன.

கொக்கிபீடியா, அப்பாடக்கர் பதில்கள், ஹாலிவுட் டைரி, பதில் சொல்லுங்கள், பாஸ், மீம்ஸுப்பே, தாறுமாறு தக்காளிச் சோறு, சினிமால், அக்கட தேசத்து அழகிகள், மை ரியாக்‌ஷன், அக்கரைப் பச்சை, ஃபாரின் சரக்கு, டெக்மோரா, ‘ட்ரெண்ட்’ பெட்டி, சினிமா விடுகதை, லிட்டில் ஜான் ஜோக்ஸ், Fakebook, வருத்தப்படாத வாட்ஸப் க்ரூப், சர்வே கார்னர், சினிமா விடுகதை, போட்டோடூன் எனப் பல பகுதிகள் இடம்பெற்றன.

நிறுத்தம்

புத்தகமாக வெளிவந்த டைம் பாஸ் இதழ், பிப்ரவரி 18, 2017 இதழுடன் நின்றுபோனது. பதிலாக 'டைம்பாஸ் ஆன்லைன்' என்ற முகவரியில் இணையத்தில் வெளிவந்தது.

மதிப்பீடு

அரசியல், சினிமா, இணையம், தொழில்நுட்பம் தொடங்கி அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் வரை அனைத்தையும் கேலியும், கிண்டலுமான மொழியில் வெளியிட்ட இதழாக டைம் பாஸ் இதழ் அறியப்படுகிறது.

உசாத்துணை


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.