under review

டூசூன்

From Tamil Wiki
Revision as of 20:01, 30 December 2022 by Navin Malaysia (talk | contribs)
Dusun 1 .webp

டூசூன் இனக்குழு சபாவின் பழங்குடி ஆவர். யுனெஸ்கோ டூசூன் பழங்குடியை 2004ல் சபாவின் பழங்குடியினரென ஆவணப்படுத்தியுள்ளது.

பெயர் காரணம்

புரூணை சுல்தான் சபாவின் விவசாயிகளை டூசூன் என்றழைத்தார். டூசூன் பழங்குடி மொழியில் டூசூன் எனும் வார்த்தைக்குப் பொருளில்லை. மலாய் மொழியில் டூசூன் என்றால் தோட்டம் என்று பொருள். சபாவின் (வடக்கு போர்னியோ)வில் சுலு சுல்தானிய ஆட்சிக்காலத்தின் போது, டூயில் எனப்படும் ஆற்றுக்கான வரி வசூலிக்கப்பட்டது. அப்போது, சுலு சுல்தான் இவ்வரி கட்டியவர்களை ‘ஓராங் டூசூன்’ என்று வகைப்படுத்தினார். 1881க்குப் பிறகு, சபாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலம் (British North Borneo Company) தொடங்கியது. ஆங்கிலேயர்கள் டூசூன் இனக்குழுவை மொழிவாரியாக பனிரெண்டு (12) முக்கிய குடியும் முப்பத்து மூன்று (33) உபகுடியும் உள்ளரென வகுத்தனர். இன்றைய புலுபிடே மற்றும் இடாஹான் பழங்குடி இஸ்லாம் மதத்தைத் தழுவும் முன் டூசூன் பழங்குடியின் உபபிரிவுகளில் ஒன்றாகவே இருந்துள்ளனர்.

பின்னணி

2018ல் சபா பல்கலைகழகம் செய்த ஆய்வில் வடக்கு போர்னியோவில் வசிக்கும் டூசூன் பழங்குடி (சொன்சோகன், ருங்கோஸ், லிங்கபாவ், மூரூட்) இரண்டு பூர்வீகங்களைக் கொண்டுள்ளது. ஒன்று, தைவான் பழங்குடி (அமி, அதாயல்) மற்றொன்று ஆஸ்திரொ-மெலானிசியன் அல்லாத பிலிபினோ பழங்குடி (விசயான், தகலோக், இலோகானோ, மினான்னுபூ). டூசூன் பழங்குடியினர் சபாவில் இருக்கும் மற்ற பழங்குடிகளை விட தைவான் மற்றும் பிலிபின்ஸ் பழங்குடியுடன் நெருங்கிய மரபியல் தொடர்ச்சிகளைக் கொண்டுள்ளனர்.

நம்பிக்கைகள்

டூசூன் பழங்குடியினர் ஆன்மவாதத்தை (Animism) பின்பற்றுகின்றனர். டூசூன் மக்களில் சிலர் இஸ்லாமிய, கிறிஸ்துவ மதங்களையும்  தழுவியுள்ளனர்.

தொழில்

டூசுன் பழங்குடியினர் விவசாயிகளாவர். விவசாயம் செய்து கடலோரம் வாழ்ந்த மக்களிடம் தங்களின் விளைச்சல்களையும் வன வளங்களையும் மீன், கருவாடு, உப்புக்குப் பண்டமாற்றம் செய்துக்கொள்வர். கடற்கரைகளை இணைக்கும்  இரயில் வேலைகள் தொடங்கியபின் பண்டமாற்றம் இல்லாமலாகின.

டூசுன் மக்கள் மீன் பிடிப்பதற்கு சுரினிட்  எனும் செடியின் வேரிலிருந்து எடுக்கப்படும் ‘துபா’ எனப்படும் சாற்றைப் பயன்படுத்துவர். 'துபா'  மீன்களைச்  சில காலத்துக்குச்  செயலிழக்கச் செய்யும் தன்மை கொண்டது.

கல்வி

1880க்குப் பிறகு கிறிஸ்துவ மிஷினரிகளின் வருகையையடுத்து, சபாவின் டாயாக் மற்றும் டூசூன் பழங்குடிகளுக்குக் கல்வி கற்பிக்கப்பட்டது. சபாவில் விவிலியத்தை முதலில் தங்கா-டூசோனில் மொழிபெயர்த்தனர். தங்கா-டூசூன் மொழியை ‘z’ வழக்கென்று அழைப்பர்.

மொழி 

டூசூன் மொழி 22 லத்தின் எழுத்துகளை எழுத்து மொழியாகக் கொண்டுள்ளது. C,E,F,J,Q,X ஆகிய ஆறு எழுத்துகளைத் தவிர பிற எழுத்துகள் இதில் அடங்கும். இவற்றை டூசூன் மொழியில் பிமாத்தோ என்றழைக்கின்றனர். கடசாண்டூசூன் பண்பாட்டு அமைப்பான (Kadazandusun Cultural Association Sabah) 1995ல் புண்டு-லீபான் டூசூன் வட்டார வழக்கை அதிகாரப்பூர்வ டூசூன் மொழியாக ஒருங்கிணைத்தது .

புதிய இனக்குழு

கடசான் – டூசூன்

மலேசியாவின் சபா மாநிலத்தில் வசிக்கும் டூசூன் பழங்குடியும் கடசான் பழங்குடியும் கலப்பு திருமணங்களைச் செய்து கொண்டனர். இதனால் கடசான் - டூசுன் எனும் புதிய இனக்குழு உருவாகியுள்ளது.  

பண்பாடு

விழா

காமாத்தான்  என்பது கடசான்-டூசுன் மக்களின் அறுவடைத்  திருவிழா ஆகும். காமாத்தான் மே மாதம் முழுவுதும் கொண்டாடப்படும். சபாவில் காமாத்தானின் இறுதி இரு நாட்கள் திருவிழாவின் உச்சகட்ட விழாக்கோலம் கொண்டிருக்கும். காமாத்தான், ஆதி கடவுளுக்கும் அரிசி தேவதைகளுக்கு நன்றி சொல்லவும் தொடர்ந்து நெல் அறுவடை செய்வதற்கான வழிபாட்டுக்காகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்றைய பெரும்பான்மை கடசான் – டூசூன் மக்கள் இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ மதங்களைத் தழுவியுள்ளனர். எனவே, இன்று கொண்டாடப்படும் காமாத்தான் ஆதி நோக்கத்தைக் கொண்டதல்ல. இன்றைய காமாத்தான் கொண்டாட்டங்கள் மூதாதையரின் வழக்கத்தைத் தக்க வைத்திருக்கவும் விடுமுறை நாட்களில் குடும்பங்கள் ஒன்று சேரும் நிகழ்வாக பரிணாமம் அடைந்துள்ளது.

இன்றைய காமாத்தான் நிகழ்வுகளில் உண்டுக் ங்காடு எனும் அழகிப் போட்டியும் சுகண்டாய், தாமு எனும் பாட்டுப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. உணவு-குடிபானக் கடைகளும், கைவினைப் பொருட்களின் விற்பனைகளும், பண்பாட்டுக் கலை படைப்புகளும் இன்றைய காமாத்தான் நிகழ்வின் அங்கமாக அமைந்துள்ளன.

உணவு

ஹினாவா, நூம்சோம், பினாசாகான், போச்சௌ, டுஹாவ், கினோரிங் சூப் போன்றவை டூசூன் பழங்குடியினர் உணவுகளாகும். டூசூனின் பாரம்பரிய குடிபானங்கள் தபாய், தும்பூங், செகாந்தாங், லிஹீங், மொந்தொகு, பாஹர் ஆகியவையாகும்.

நன்றி: Noracarol
உடை

கௌபசனான் என்பது கடசாண்டூசூனின் பாரம்பரிய உடையாகும். கௌபசனான் ஆடை கருப்பு நிற வெல்வெட் துணியிலும் பலவகை வர்ண, வடிவமைப்பு, பொத்தான், எம்பிராய்டரி கொண்டதாகும். கௌபசனான் ஆடை பெனாம்பாங் வட்டாரத்தின் கடசாண்டூசூன் மக்களின் அடையாளமாகும். பெண்களுக்கான கௌபசானான் ஆடை சினுஅங்கா என்றும் ஆண்களின் ஆடை காவோங் என்றும் அழைக்கப்படும்.

நடனம்

கடசாண்-டூசூனின் பாரம்பரிய நடனம் சுமசௌ. சமசௌவை ஆண் பெண் இருபாலரும் சேர்ந்து ஆடுவர். இந்நடனத்தின்போது ஆடுபவர்கள் பாரம்பரிய ஆடையான கௌபாசன் அணிந்திருப்பர். சமசௌவை ஆடும்போது எழிலிருந்து எட்டு எண்ணிக்கையிலான கோங் எனும் இசைக்கருவிகள் இசைக்கப்படும். நடனத்தில் கையசைவை மாற்ற ‘ஹீ’ என ஆண் நடனமாடுபவர் ஓசை எழுப்புவார். இந்த ஓசையைக் கேட்டு மற்றவர்கள் பறவையைப் போல கைகளை முன்னும் பின்னும் ஆட்டி நடனமாடுவர். பறவைகள் பறப்பதைப் போல் ஆடுவது சுமசௌவின் தனிச்சிறப்பு. 

சொம்போத்தோன் (வலது) நன்றி: Borneo Post Online
இசை

கடசாண்-டூசூனின் பாரம்பரிய இசைகக் கச்சேரிகளில் வாத்தியக் கலைஞர்கள் புல்லாங்குழல், சொம்போதோன், தொகுங்காக், கோங் மற்றும் குலிந்தாங்கான் ஆகிய கருவிகளை வாசிப்பர்.

கைவினைப் பொருட்கள்

கடசாண்டூசூனின் கைவினை பொருட்கள், வாகிட், பராயிட், சொம்பொடொன், பினகுல், பாராங் கத்தி, காயாங் ஆகும். வாகிடும் பராயிட்டும் விளைச்சல்களைச் சுமக்கும் கூடை. சொம்போதோன் என்பது இசைக்கருவி. பினகுல் என்பது சடங்குகளில் உபயோகிக்கப்படும் பொருள். பாராங் என்பது விவசாயத்திலும் வேட்டையிலும் பயன்படுத்தப்படும் கத்தி.

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.