being created

ஞானாலயா பா. கிருஷ்ணமூர்த்தி

From Tamil Wiki
Revision as of 11:55, 21 July 2022 by ASN (talk | contribs) (Para Added, Image Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பா. கிருஷ்ணமூர்த்தி - டோரதி கிருஷ்ணமூர்த்தி (இள வயதுப் படம்: நன்றி : தினமணி)

தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய தனியார் நூலகமான ஞானாலயா ஆய்வு நூலகத்தின் நிறுவனர் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி (பா. கிருஷ்ணமூர்த்தி; பிறப்பு : ஜனவரி 31, 1942). ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியரான இவர், எழுத்தாளர், கட்டுரையாளர், பேச்சாளர் என பல களங்களில் இயங்கி வருபவர். பழங்காலத்துப் புத்தகங்கள்,  எழுத்தாளர்கள், அச்சகங்கள் பற்றிய பல அரிய தகவல்களை அறிந்தவர். மகாத்மா காந்தி, விவேகானந்தர், பாரதியார், ஏ.கே.செட்டியார் உள்ளிட்ட பலரைப் பற்றி மிக விரிவாகச் சொற்பொழிவாற்றியிருக்கிறார்.

பிறப்பு, கல்வி

கிருஷ்ணமூர்த்தி, பாலசுப்பிரமணியன் - மீனாட்சி இணையருக்கு, ஜனவரி 31, 1942-ல் மகனாகப் பிறந்தார். திருவாரூருக்கு அருகில் உள்ள காவாலக்குடி இவரது சொந்த ஊர். தந்தை கே.வி. பாலசுப்ரமணியன் கல்வி அதிகாரியாகப் பணியாற்றினார். அவரது பணிமாறுதல் காரணமாக பெரம்பலூர் உள்ளிட்ட பல இடங்களில் கிருஷ்ணமூர்த்தியின் பள்ளிப்படிப்பு தொடர்ந்தது.  உயர் கல்வியை முடித்ததும், திருச்சி ஜமால் முகம்து கல்லூரியில் இளங்கலை கணிதம் பயின்றார். தமிழார்வத்தால் முதுகலை தமிழ் இலக்கியம் படித்தார். கல்வியியலில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார். மண்ணச்சநல்லூர்  அரசுப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார் கிருஷ்ணமூர்த்தி.

புத்தக ஆர்வம்

தந்தை  மூலம் கிருஷ்ணமூர்த்திக்குச் சிறு வயதிலேயே புத்தகங்கள் அறிமுகமாகின. ஒரு சமயம் தந்தை கே.வி. பாலசுப்ரமணியன், நூறு புத்தகங்களை கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்து ‘இவற்றை கவனமாகப் பாதுகாத்து வா’ என்று கூறினார். அதில் ஒரு புத்தகம், கிருஷ்ணமூர்த்தியின் தாய்வழித் தாத்தாவான பொன்னுசாமி, 1873ல், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்தபோது, எஸ்.எஸ்.எல்.சியில் தமிழில் முதல் பரிசு பெற்றதற்காகக் கிடைத்த பரிசு. ‘Footprints of Famous men’ என்பது அந்தப் புத்தகத்தின் பெயர். பொன்னுசாமி கையெழுத்திட்டிருந்த ‘தனிப்பாடல் திரட்டு’ என்ற நூலும் அந்தச் சேகரிப்பில் இருந்தது. அது எழுத்தாளர் கு. அழகிரிசாமி வெகுநாட்களாய்த் தேடிக் கொண்டிருந்த புத்தகம் என்பதை அறிந்த கிருஷ்ணமூர்த்தி வியப்புற்றார். அதுவே பழைய புத்தகங்களின் மீதான கிருஷ்ணமூர்த்தியின் காதலுக்கும் தேடலுக்கும் வழி வகுத்தது.

தனி வாழ்க்கை

கிருஷ்ணமூர்த்தி,  மண்ணச்சநல்லூர்  அரசுப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றியபோது உடன் பணியாற்றியவர் டோரதி. அவர் தாவரவியல் ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ் இருவரையும் இணைத்தது. இருவரும் இலக்கியப் பணிகளில் இணைந்து பயணித்தனர். ஒரு சமயம் காரைக்குடியில் ‘ஸ்டார் பப்ளிஷிங்’ மற்றும் 'ப்ராக்ரசிவ்' பதிப்பகத்தின் உரிமையாளரான வி.ஆர்.எம். செட்டியாரை இருவரும் சந்தித்தனர். அவர் இருவரையும் வாழ்க்கையிலும் இணையச் சொன்னார். இந்துவான கிருஷ்ணமூர்த்தியும், கிறிஸ்தவரான டோரதி சாமிக்கண்ணுவும் 1971-ல் திருமணம் செய்துகொண்டனர். டோரதிக்கும் இலக்கியம் மற்றும் புத்தகச் சேகரிப்பில் ஆர்வம் இருந்தது. கணவரின் புத்தகச் சேகரிப்பு முயற்சிக்கு அவரும் உறுதுணையாக இருந்தார்.











🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.