ஞானாலயா ஆய்வு நூலகம்

From Tamil Wiki
Revision as of 23:39, 27 June 2022 by ASN (talk | contribs) (para created)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஞானாலயா ஆய்வு நூலகம், தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய தனியார் நூலகமாகும். இது 1959-ம் ஆண்டு, நூறு புத்தகங்களுடன் தொடங்கப்பட்டது. இந்நூலகத்தில் தற்போது ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. இந்த நூலகத்தை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி - டோரதி கிருஷ்ணமூர்த்தி இணையர் இணைந்து நடத்தி வருகின்றனர். இருவருமே ஆசிரியராகப் பணியாற்றியவர்கள்.

நூலக உருவாக்கம்

பள்ளி ஆசிரியரான கிருஷ்ணமூர்த்தியும், தாவரவியல் துறை பேராசிரியரான அவரது மனைவி டோரதி கிருஷ்ணமூர்த்தியும், தங்கள் பணி ஓய்வின்போது கிடைத்த தொகை ரூபாய் 11 லட்சத்தைக் கொண்டு, தங்களது வீட்டை அடுத்து நூலகத்திற்கு என்று ஒரு கட்டிடத்தை எழுப்பினர். அது கீழ்த்தளம், மேல் தளம் என இரண்டு அடுக்குகளைக் கொண்டதாகும்.

ஞானாலயா நூலகம் - பெயர்க் காரணம்

ஆரம்பத்தில் ‘மீனாட்சி நூலகம்’ என்று தனது தாயாரின் பெயரில்தான் இந்த நூலகத்தை நடத்தி வந்தார், கிருஷ்ணமூர்த்தி. அது வாடகை நூல் நிலையத்தின் பெயர் போல இருப்பதாக நண்பர்கள் சொல்லவும், ‘ஞானாலயா’ என்று பெயர் மாற்றம் செய்தார்.

நூல் சேகரிப்பு ஆர்வம்

கிருஷ்ணமூர்த்தியின் தந்தை கே.வி. பாலசுப்ரமணியன், கல்வி அதிகாரியாகப் பணியாற்றியவர். அவர் மூலம் கிருஷ்ணமூர்த்திக்குச் சிறு வயதிலேயே புத்தகங்கள் அறிமுகமாகின. ஒரு சமயம் தந்தை கே.வி. பாலசுப்ரமணியன், நூறு புத்தகங்களை கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்து ‘இவற்றை கவனமாகப் பாதுகாத்து வா’ என்று சொன்னார். அதில் ஒரு புத்தகம், கிருஷ்ணமூர்த்தியின் தாய்வழித் தாத்தாவான பொன்னுசாமி, 1873ல், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்தபோது, எஸ்.எஸ்.எல்.சியில் தமிழில் முதல் பரிசு பெற்றதற்காக் கிடைத்த பரிசு நூலாகும். ‘Footprints of Famous men’ என்பது அந்தப் புத்தகத்தின் பெயர். தாத்தா பொன்னுசாமி கையெழுத்திட்டிருந்த ‘தனிப்பாடல் திரட்டு’ என்ற நூலும் அந்தச் சேகரிப்பில் இருந்தது. அது எழுத்தாளர் கு. அழகிரிசாமி வெகுநாட்களாய்த் தேடிக் கொண்டிருந்த புத்தகம் என்பதை அறிந்த கிருஷ்ணமூர்த்தி வியப்புற்றார். அதுவே பழைய புத்தகங்களின் மீதான கிருஷ்ணமூர்த்தியின் காதலுக்கும் தேடலுக்கும் காரணமானது.