ஜேம்ஸ் எம்லின்

From Tamil Wiki

ஜேம்ஸ் எம்லின் (J. Emlyn) (1838-1917) கிறிஸ்தவ மதபோதகர். கன்யாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பள்ளியாடி பகுதிகளில் மதப்பணியும் கல்விப்பணியும் ஆற்றியவர்

பிறப்பு, கல்வி

எம்லின் 7 ஏப்ரல் 1838ல் இங்கிலாந்தில் வேல்ஸ் பகுதியில் கார்டிகான்ஷயர் (Cardigaanshire) பிறந்தார். வெஸ்டெர்ன் ஹைகேட் (Western College and High Gate) கல்லூரியில் இறையியல் படித்தார். கிராவன் சர்ச்( Craven Church) சில் 9 ஜூன் 1867ல் குரு பட்டம் பெற்றார்

தனிவாழ்க்கை

எம்லின் எமிலி செய்மோர் (Emily Seymeir) ஐ 1867 ல் பிரிஸ்டல் ஹேய்கிராப்ர் பாப்டிஸ்ட் சர்ச்சில் (Bristol Haycraft Baptist Church)ல் மணம்புரிந்துகொண்டார்.

மதப்பணி, கல்விப்பணி

லண்டன் மிஷனரி சொசைட்டி (London Missionary Society -LMS ) மதப்பரப்புநராக 11 செப்டெம்பர் 1867ல் எம்லின் இந்தியாவந்தார். 1t ஜூன் 1868 ல் கர்கோயிலை வந்தடைந்தார். அன்றைய திருவிதாங்கூரின் பாறசாலை மிஷன் மாவட்டத்தின் பொறுப்பை ஏற்று 1892 வரை பணியாற்றினார். அன்று குழித்துறைக்கு மேலே காடாகக் கிடந்த நிலத்தில் கிறிஸ்தவ தேவாலயம், மிஷன் ஆஸ்பத்திரி மற்றும் கல்விநிலையங்களை உருவாக்கினார். அவற்றின் ஊழியர்களுக்கான குடியிருப்புப் பகுதிகள் அமைந்தன. அவ்வாறாக உருவாகி வந்த புதிய ஊர் நிலத்தை அன்பளிப்பாக அளித்த மன்னர் நினைவாக மார்த்தாண்டம் என்று பெயர் கொண்டது. மார்த்தாண்டம் சிறுநகரின் உருவாக்கம் எம்லின் வழியாகவே நிகழ்ந்தது.

எம்லின் அன்று பாறசாலை மிஷன் மாவட்டத்தில் செயல்பட்டுக்கொண்டிருந்த மற்ற திருச்சபைக் கிறிஸ்தவப் பணியாளர்களை ஒருங்கிணைக்க ‘ஒருங்கிணைந்த சுவிசேஷக சங்கம் (United Evangelical Council ) என்னும் அமைப்பை உருவாக்கினார். ஆண்டுக்கு ஒருமுறை அந்த அமைப்பின் பொதுக்குழு கூடியது. அந்த முன்னுதாரணமே பின்னர் நாகர்கோயிலில் அமைந்த எல்.எ,ம்.எஸ் தலைமையகத்தில் தென்திருவிதாங்கூர் சர்ச் மிஷன் கௌன்ஸில் (South Travancore Church Mission Council ) உருவாக வழிவகுத்தது

எம்லின் வள்ளவிளை கடற்கரைப் பகுதியில் ரோமன் கதோலிக்க மீனவர்களை லண்டன் மிஷன் சர்ச்சில் சேர்த்தார். வள்ளவிளை கொல்லங்கோடு பகுதிகளில் பள்ளிகளை தொடங்கினார். அப்பகுதி சத்தியவேத பட்டினம் என அறியப்பட்டது. டேவிட் சைலம் (David Sylem) பாறசாலைக்கும் சாமுவேல் கொல்லங்கோடுக்கும் ஜேக்கப் வல்லவிளைக்கும் பொறுப்பளிக்கப்பட்டனர்.எம்லின் மருதங்கோடு ஆலயம் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆலயங்களை உருவாக்கினார். 1871 ல் எம்லின் ஆறு பொதுசேகரங்களை உருவாக்கினார். சிறிய ஆலயங்களை ஒருங்கிணைத்து பெரிய அமைப்புகளாக ஆக்கினார்

திருமதி எமிலி செய்மூர் ரெவெ ஜான் அப்ஸ் (Rev. John Abbs ) பாறசாலையின் உருவாக்கிய பெண்களுக்கான தங்கிப்படிக்கும் பள்ளிகளை நிர்வாகம் செய்தார்.இப்பகுதியில் அன்று இருந்த கடுமையான தீண்டாமையை ஒழிக்கவும் அனைவருக்கும் கல்வியளிக்கவும் பாடுபட்டார்.

பள்ளியாடியில் ரெவெ சார்ல்ஸ் மில்லர் (Rev. Charles Miller) ரெவெரெண்ட் மீட் (Rev. Mead) உதவியுடன் 1835 முதல் 1840 வரை ஐந்து சிறிய ஆலயங்களை உருவாக்கியிருந்தார். எம்லின் இன்றைய பள்ளியாடி கிறிஸ்துகோயில் இருக்கும் இடத்தை வாங்கி பெரிய ஆலயமாக கட்டி அனைத்து சிறிய ஆலயங்களையும் ஒருங்கிணைத்தார். 1881ல் அங்கே 97 மாணவிகளுடன் ஒரு பெண்பள்ளிக்கூடம் அமைந்தது. ஈசாக்கு காடெசிஸ்ட் (Eesachu catechist) அதன் முதல் தலைமை ஆசிரியர். ரெவெரெண்ட் டி.எச்.ஹாரிஸின் அன்னை திருமதி பாக்கியமுத்து, போதகர் காலனின் மகள் ஏழுவடியாள் ஆகியோர் அங்கே உதவியாளரானார்கள்.