ஜெகநாதர் சுவாமிகள்

From Tamil Wiki
Revision as of 11:18, 29 June 2023 by Aravink22 (talk | contribs) (Created page with "ஜெகநாதர் சுவாமிகள் வட இந்தியாவில் 19ஆம் நூற்றாண்டில் பூரி எனும் நகரில் பிறந்து மலாயாவில் வாழ்ந்த ஆன்மீக குருவாவார். இவர் மலாயாவில் பேராக் மாநிலத்தில் உள்ள தாப்பா எனும் ஊரில் 145...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஜெகநாதர் சுவாமிகள் வட இந்தியாவில் 19ஆம் நூற்றாண்டில் பூரி எனும் நகரில் பிறந்து மலாயாவில் வாழ்ந்த ஆன்மீக குருவாவார். இவர் மலாயாவில் பேராக் மாநிலத்தில் உள்ள தாப்பா எனும் ஊரில் 145 வயதில் ஜீவசமாதி அடைந்தார். சுவாமி ஜெகநாதர், வள்ளலார் ராமலிங்க அடிகளைத் தன் குருவாக ஏற்றிருந்தார். 

சுவாமி ஜெகநாதர்

வாழ்க்கை வரலாறு

ஜெகநாதர் சுவாமிகள்  1814 ஆம் ஆண்டு தை மாதத்தில் வட இந்தியாவில் பூரி எனும் நகரில் பிறந்தார்.  அவர் தனது பதினெட்டாவது வயதில் பர்மாவுக்குச் சென்றார். அங்கே,  சிட்டகாங் என்ற ஊரில் சில காலம் வசித்தார், தன் ஐம்பதாவது வயது வரை பர்மாவில் பல ஊர்களில்  வாழ்ந்தார்.  பிறகு மலாயாவுக்கு வந்தார். மலாயாவில் லங்காவி,  பாலிங், தைப்பிங், சிரம்பான் என பல நகரங்களுக்கும் மாறிக்கொண்டே இருந்தார்.  இறுதியாக அவர் தெலுக் இந்தானில் சில காலம் தங்கி ஆன்மீக சாதனைகளில் ஈடுபட்டார். அங்கே அவர் ஒரு மாட்டுத் தொழுவத்தில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது.  சுவாமிகள் பஞ்சாபி, தமிழ் தெலுங்கு மொழிகளில் பேசக்கூடியவராக இருந்தார். பஞ்சாபி நாளிதழ்கள் வாசிக்கும் பழக்கம் அவரிடம் இருந்தது.  இறுதியாக  அவர் 1920 ஆம் ஆண்டில் தனது 106 வயதில் பேராக் மாநிலத்தில் உள்ள  தாப்பா எனும் சிற்றூருக்கு வந்து அங்கேயே நிரந்தரமாகத் தங்கினார். 

தாப்பாவில் சுவாமிகள்

தாப்பா நகரில் அவரின் எளிய தோற்றத்தையும் நடைமுறைகளையும் கவனித்த சிலர்  அவரைத் தெய்வீக மனிதராக மதித்தனர். அவருக்கு ஆதரவு தந்து அங்கேயே தங்க வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தனர். அவர்களில் தாப்பா ராஜு குடும்பத்தினர் முக்கியமானவர்கள். தாப்பாவில் அப்போது  சுந்தரராஜு  என்பவர் தன் குடும்பத்துடன் வாழ்ந்த இடம் ராஜு கம்பம் என்றே அழைக்கப்பட்டது.  சீன இடுகாட்டுக்குப் பக்கத்தில் அடர்ந்த காடாக இருந்த அந்த இடம் சுவாமிகளைக் கவர்ந்தது.  சுந்தரராஜுவின்  தாயார் தான் நடத்தி வந்த அன்னசத்திரத்தில் சுவாமி ஜெகநாதருக்கு உணவு வழங்கினார். மேலும், சீன இடுகாட்டின் அருகில் இருந்த தனக்குச் சொந்தமான நிலத்தில்  சுவாமி தங்க குடில் அமைத்துக் கொடுத்தார் 

தாயார் மறைவுக்குப் பிறகு சுவாமிகளைப் பராமரிக்கும் பொறுப்பை திரு சுந்தரராஜுவும் அவர் குடும்பத்தினரும் ஏற்றுக் கொண்டனர்.  சுவாமிகள் தினமும் பசும்பாலும் அவித்த பச்சைப்பயிறையும் சிலவகை காய்கறிகளையும் மட்டுமே உணவாகக் கொண்டார். கொட்டை வாழைப்பழத்தைச் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சுவாமி தனிமையில் தியானம் மற்றும் யோகாசனப்பயிற்சிகளில் கடுமையாக ஈடுபட்டு வந்தார்.

தாப்பா நகரில் பழைய சென்டிரீயாங் சாலையின் ஓரமாக இருந்த ராஜு கம்பம் எனும் 2 ¾  ஏக்கர் நிலம் சுந்தரராஜுவின் தங்கை தனலட்சுமியின் பெயரில் இருந்தது. சுவாமி ஜெகநாதர் அந்த நிலத்தை  திருமதி தனலட்சுமியிடம் உரிய பணம் கொடுத்து வாங்கினார். அதுமுதல் அது சுவாமி கம்பம் என்றழைக்கப்பட்டது.

தாப்பாவில் அமைந்திருக்கும் ஜெகநாதர் சுவாமி கோவில்

சுவாமி அக்கம்பத்தில் எட்டுக்கு எட்டு என்ற அளவில் ஒரு  குடிசையைக் கட்டிக் குடியேறினார். மக்கள் அங்கே வீடுகள் கட்டிக் குடியேறவும் அனுமதி தந்தார். அங்கே வீடுகட்டி குடியேறியவர்கள்  சுவாமியிடம் குறைந்த  நில வாடகை செலுத்தினார்கள். 1993 ஆம் ஆண்டில்  அங்கு வசித்த 21 குடும்பங்கள்  மாத  நில வாடகையாக ஐந்து வெள்ளி செலுத்தினர்.

சுவாமிகளின் தனி குணங்கள்

சுவாமி ஜெகநாதர் பொதுமக்களிடமிருந்து விலகியே வாழ்ந்தார். அவரால் மனதளவில் ஏற்கப்பட்டவர்களைத் தவிர மற்றவர்களைச் சந்திப்பதைத் தவிர்த்தார்.  அவரைச் சந்திக்கச் சென்ற பலரைச் சந்திக்க மறுத்துத் திருப்பி அனுப்பினார். சுவாமி  எப்போதும் கையில் ஒரு விசிறியை வைத்திருப்பார். அவர் குளிப்பதில்லை என்றும் ஒவ்வொரு பெளர்ணமியின் போதும் பக்கத்தில் ஓடும் ஆற்றில் மூன்று முறை மூழ்கி எழுவது மட்டுமே உண்டு என்றும் கூறப்படுகின்றது. உடலில் சந்தனமும் பிற மூலிகைச் சாந்தையும் பூசிக் கொள்வார் என்றும் கூறப்படுகின்றது.

காலை நடையின் போது, அருகில் இருந்த நாயர் கடையில்  தினமும் தேநீர் அருந்தும் பழக்கம் சுவாமிக்கு இருந்தது. ஆனால் அக்கடையில் பயன்படுத்தப்படும் குவளைகளில் தேநீர் குடிக்க மாட்டார்.  மாறாக காலி பால் டின்னில் தேநீர் பெற்றுக் குடித்துவிட்டு டின்னை வீசிவிடுவார்.

சுவாமி ஜெகநாதர் தனது ஆன்மீகப் பயிற்சிகளையும் முயற்சிகளையும் மிக ரகசியமாக வைத்திருந்தார். குடிலில் அவர் தியானத்தில் ஈடுபட்டிருக்கும்போது அவரை யாரும் பார்க்கவும் அவர் அனுமதிப்பதில்லை. அவரிடம் தீட்சை பெற்ற சித்திரமுத்து அடிகளார் போன்றவர்களிடமும் 'ஞான ரகசியங்களை வெளியில் சொல்லாதே' என்றே உபதேசித்தார். 

அவர் குடிலின் வாசலில் நான்கு கட்டளை வாசகங்கள் எழுதி வைத்திருந்தார்.

1. இவ்விடத்தில் சுருட்டு புகைக்காதே

2. என்னிடம் அதிகம் பேசக்கூடாது

3. நான் உள்ளேயிருக்கும்போது கூப்பிடாதே

4. என்னைத் தொடவும் கூடாது

ஜெகநாதர் கோவில் முகப்பு

பொது மக்களிடம் குறைவாகப் பழகும் இயல்புடைய சுவாமி அக்கம்பத்தில் வாழ்ந்த சிறுவர் சிறுமியரிடம் மிகுந்த அன்புடன் பழகினார். அக்கம்பத்தில் வாழ்ந்த சிறுவர்கள் பலர் சுவாமிகளின் குடிலைச் சுத்தப்படுத்தும் பணிகளிலும் பிற வேலைகளிலும்  ஈடுபட்டுள்ளனர்.  அவர்களுக்குத் திடீர் பரிசுகளும் நாணயங்களும் வழங்கி மகிழ்ச்சிப்படுத்துவது சுவாமியின் பழக்கம்.  மேலும்  பரந்த அளவில் ஆன்மீக  அன்பர்களுடன் தொடர்பில் இருந்தார். சுத்த சமாஜத் தோற்றுனர் சுவாமி சத்தியானந்தா, அன்னை மங்களம், தமிழ் நாட்டிலிருந்து மலாயாவில் சில ஆண்டுகள் தொழில் செய்ய வந்த  சித்ரமுத்து அடிகளார் போன்றவர்கள் அவர்களில் முதன்மையானவர்கள்.

மாணவர்கள்

சுவாமியின்  முதன்மைச் சீடர்களாக மூவர் இருந்ததாகக் கூறப்படுகின்றது. இந்தோனேசியாவைச் சேர்ந்த ஶ்ரீ வீமவார், சித்ரமுத்து அடிகள், சுத்த சமாஜத்தின் தோற்றுனர் டாக்டர் சுவாமி சத்தியானந்தா ஆகியோராவர்.

1940ஆம் ஆண்டுகளில் சித்திரமுத்து அடிகளார் சுவாமி ஜெகநாதரை அவர் குடிலில் சந்திந்தார். அப்போது அவர் மலாயாவில் தைப்பிங் நகரில் கள் இறக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார்.  சித்திரமுத்து, ஜெகநாதர் சுவாமிகளிடம் ஆன்மீகப் பயிற்சியும் தீக்கையும் பெற்றார்.  பிறகு அவர் தமிழ் நாட்டிற்குத் திரும்பி ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் என்ற ஊரில் ஆத்ம சாந்தி நிலையம் நிறுவினார்.

1951ல் குருசாமி பிள்ளை  சித்ரமுத்து அடிகளாரின் ஆணையை ஏற்று ஜெகநாதர் சுவாமியைச் சந்தித்தார். அதன்பின் பலமுறை ஜெகநாதரைச் சந்தித்து ஆன்மீக சாதனைகளைப் பயின்றார். இவர் பிறருக்கு எழுதிய கடிதங்களின் வழிதான் சுவாமியைப் பற்றிய பல தகவல்கள் கிடைக்கப் பெற்றன.

சுவாமி ஜெகநாதர் 78 ஆண்டுகள் தாப்பாவில் வாழ்ந்தார். 145 வயதுவரை அவர்  வாழ்ந்ததாக அவரின் சேவகர் குருசாமி பிள்ளை ஹாவாய் சுப்ரமணிய சுவாமிக்கு  அனுப்பிய கடிதத்தில் உறுதிபட எழுதியுள்ளார்.

வாழும் காலத்தில் சுவாமி ஜெகநாதர் பல அற்புதங்களை நிகழ்த்தியதாக அவருடன் பழகிய பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜீவ சமாதி

சுவாமி ஜெகநாதர்  ஜனவரி 25,1959ல்  தைப்பூசத்தன்று அதிகாலை 2 மணி அளவில் ஜீவசமாதி அடைந்தார்.

சுவாமி ஜெகநாதர் சமாதி அடையும் முன் பல முன்னேற்பாடுகளைச் செய்து வைத்தார்.  தன் உதவியாளர் பொன்னன் மென்சன் என்றழைக்கப்பட்ட பொன்னுசாமி என்பவரிடம் பல விபரங்களைத் தெரிவித்திருந்தார்.

தனது சமாதியில் வைக்க வேண்டிய பொருட்களாக தனது இடுப்புத்துணி, திருவோடு, ஆசனப்பலகை, சங்கு, பாதுகை, மற்றும் சுவாமி இராமலிங்க சுவாமிகளின் திருவுருவப்படம் ஆகியவற்றைப் பட்டியலிட்டுக் கொடுத்தார்.

அவர் ஜீவ சமாதி அடையும் மூன்று மாதங்களுக்கு முன்பே தனக்கான சமாதியைத் தக்க கட்டுமான முறைப்படி கட்டத் தொடங்கினார்.  தன் நிலங்களையும் ஆசிரமச் சொத்துகளையும் நிர்வகிப்பவர்களாக மூவர் அடங்கிய அறங்காவலர் குழுவை அமைத்தார்.  தனது ஜீவசமாதி  சடங்குக்கான செலவுகளுக்கும் சமாதியின் மேல் எழுப்பும் கோயிலுக்கான செலவுகளுக்கும்  அறங்காவலர் திரு ஆர் எம் முத்துகருப்பன் செட்டியாரிடம் 9309.90 டாலரும் மூன்று நிலங்களையும் கொடுத்தார். சுத்த சமாஜத்தின் தோற்றுனர் டாக்டர் சுவாமி சத்தியானந்தாவைத் தனது ஜீவ சமாதி சடங்கை நடத்திக் கொடுக்க நியமித்தார்.   

சுவாமியின் ஜீவ சமாதி சடங்கு முறைப்படி சுவாமி சத்தியானந்தாவால் நடத்தப்பட்டது.

சுவாமியின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் சமாதியின் மேல் அறங்காவலர்கள் சிவலிங்கம் ஒன்றை நிறுவினர். உடன் தெய்வ சிலைகளையும் வைத்தனர். பகுதிநேரப் பராமரிப்பாளர் ஒருவர் அக்கோயிலில்  தினமும் பூஜைகள் நடத்திவந்தார். 

பக்தர்கள் ஆதரவில் அக்கோவில் விரிவடைந்தது.மார்ச் 25, 1992ல் புதிய கோயில் சீரமைக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. முழு நேர பூசகரும் அமைந்தார்.  சுவாமி ஜெகநாதரால் நியமிக்கப்பட்ட அறங்காவலர்களில் ஒருவரான ஆர். எம் லெச்சுமண செட்டியார் கோயில் சொத்துகளை மலேசிய இந்து சங்கத்திடம் ஒப்படைத்தார். 1993 முதல் ஜெகநாதர் சுவாமிகள் கோவிலின் நிர்வாகப் பொறுப்பை மலேசிய இந்து சங்கம் ஏற்றுக் கொண்டது.

உசாத்துணை

சத்குரு ஶ்ரீ ஜெகநாதர் சுவாமி- சங்கபூசன் ப. சுப்ரமணியம் ஏ.எம்.என்