under review

ஜாவா

From Tamil Wiki
Java 3 .jpg

ஜாவா பழங்குடியினர் மலேசியாவின் சரவாக், சபா, ஜொகூர், பேராக், சிலாங்கூர் மாநிலங்களில் வசிக்கின்றனர்.

பூர்வீகம்

ஜாவா பழங்குடியினர் மத்திய ஜாவா, இந்தோனேசியாவிலிருந்து புலம் பெயர்ந்தவர்களாவர். இவர்கள் ஜாவா மக்களின் சொந்த ஆட்சியின் செல்வாக்கு மிகுந்த ஆட்சிக் காலத்திலும், இந்தோனேசியாவிலிருந்த டச்சு காலனித்துவ ஆட்சியிலிருந்தும் தப்பித்து மலாயாவிற்குள் புலம்பெயர்ந்தவர்களாவர்.

மொழி

ஜாவானீஸ் மொழி ஆஸ்ட்ரோனேசிய பூர்வீகத்தைக் கொண்டது. ஜாவா பழங்குடியினர் ஜாவா மொழியில் பேசுவர். பெரும்பாலான ஜாவா இளம் தலைமுறையினர் ஜாவா மொழியை அறிந்திருக்கவில்லை. ஜாவா பழங்குடியினர் மலாய் மொழியிலும் பேசுவர்.

தொழில்

ஆரம்பகாலத்தில் புலம்பெயர்ந்தவர்களான ஜாவானியர்கள் கைவினைஞர்கள், வணிகர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களாக இருந்தனர். பிற்கால ஜாவானியர்கள் ஓட்டுநர்கள், காவலாளிகள், தோட்டக்காரர்கள், ஜாக்கிகள் மற்றும் வீட்டு வேலையாட்கள் போன்ற பிற தொழில்களில் பணிபுரிந்தனர். மலேசியாவில் பிறந்து வளர்ந்த ஜாவானியர்கள் மேல் நிலை கல்விப் பெற்று பல்துறைகளில் வேலை செய்து வருகின்றனர்.

சமய நம்பிக்கை

ஜாவா பழங்குடியினரில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள். அவர்களை அடுத்து கிறிஸ்துவர்கள், இந்துக்களும், புத்தமதம் தழுவியர்களும் உண்டு. ஜாவா மக்களின் சமயம் கெஜாவென். கெஜாவென் சமயம் ஆன்மவாதமும் இந்து-புத்த நம்பிக்கைகளும் கலந்த சமயமாகும்.

ஜாவா மக்களின் உப பிரிவுகள்

ஜாவா மக்கள் பல்வேறு பண்புகள், பழக்கவழக்கங்கள், மரபுகள், பேச்சுவழக்குகளால் வேறுபட்டுள்ளனர். அவர்களுள் பான்யுமாசான் (Banyumasan), சிரேபோனேசே (Cirebonese), மாதாராம் (Mataram), ஓசிங் (Osing), தெங்கெரேசெ (Tenggerese) ஆகிய பிரிவுகள் உள்ளன.

கலை

ஜாவா பழங்குடியினர் நிழற்கூத்துபோன்ற நிகழ்த்துக்கலையை உடையவர்கள். ஜாவா மக்களின் நிழற்கூத்துகள் பெரும்பாலும் இராமாயண, மகாபாரதக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கும். மத்திய-ஜாவாவின் இன்றைய ‘தியேட்டர்’ கலை கெட்டோப்ராக் ஆகும். கெட்டோப்ராக் ஜாவானிய வரலாறு, சீன மற்றும் அரேபிய கதைகளின் அடிப்படையில் நிகழ்த்தப்படுகிறது. கெட்ரோப்ராக் நகைச்சுவை மற்றும் மெலோடிராமாவை அடிப்படையாக கொண்டது.

ரியொங் நடனம்

ஜொகூர் மாநிலம், பத்து பஹாட் வட்டாரத்தில் வாழும் ஜாவா மக்கள் ரியாக் (Reog) எனும் நிகழ்த்துக்கலையை நடத்துகின்றனர். ரியாக் நடனம், பாரம்பரிய இசையும் மாயத்தன்மையும் உள்ளடக்கியது. ரியாக் விலங்குகளுடன் பேசக்கூடிய நபி சுலைமான் பற்றிய கதையைச் சொல்கிறது.

கட்டிடக்கலை

ஜாவானியர்கள் இந்து நினைவுச் சின்னங்கள், புத்த ஸ்தூபிகள், மடாலயம், அரண்மனை வளாகங்கள் மற்றும் மசூதிகள் வரை பல முக்கியமான கட்டிடங்களை ஜாவா, இந்தோனேசியாவில் உருவாக்கியுள்ளனர். ஜாவானியர்களின் பெரும்பாலான கட்டிடங்கள் 1006ல் மேராபி எரிமலை வெடித்ததால் மண்ணுக்குள் புதைந்தன. கட்டிடங்களின் எச்சங்களை ஜாவா மக்களின் பூர்விகமான மத்திய ஜாவாவில் காணலாம்.

பொரொபுடூர்
பிராம்பனான்

ஜாவானியர்கள் கட்டிய கோவில்களில் முக்கியமானது இந்துக் கோவிலான பிரம்பானான் மற்றும் புத்தக் கோவிலான போரோபுடூர். பிரம்பானான் தென் ஜாவாவில் அமைந்துள்ளது. பிரம்பானான் திரிமூர்த்திகளுக்கான கோவில். போரோபுடூர் மஹாயான புத்த கோவிலாகும். இரு கோவில்களும் ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளன. இரு கோவில்களும் யுனெஸ்கோ உலக பாரம்பரியத்தளமாக 1991ல் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

உணவு

ஜாவா மக்கள் அரிசி, வறுத்த காய்கறிகள், கருவாடு, தாஹு, டெம்பே (புளிக்கவைக்கப்பட்ட சோயாபீன்ஸ்), க்ருபுக் (மீன் அல்லது இறால்) மற்றும் சாம்பால் (மிளகாய்). காடோ-கடோ (வேர்க்கடலை சாஸுடன் உண்ணப்படும் வேகவைத்த காய்கறிகளின் சாலட்), சயுர் லோடே (காய்கறி மற்றும் தேங்காய்ப் பால்), பெர்கெடெல் (உருளைக்கிழங்கு பஜ்ஜி), மற்றும் சோட்டோ (கோழி, நூடுல்ஸ் மற்றும் பிற பொருட்களுடன் சூப்) ஆகியவை அடங்கும். பக்ஸோ (மீட்பால் சூப்), பக்மி (வறுத்த நூடுல்ஸ்) மற்றும் கேப் கே (வறுத்த இறைச்சி மற்றும் காய்கறிகள்) போன்ற சீன வம்சாவளியின் உணவுகள் மிகவும் பிரபலமாக உள்ளன. பொதுவான இனிப்புகள் கெதுக் (இளஞ்சிவப்பு, பச்சை அல்லது வெள்ளை நிறத்தில் வேகவைக்கப்பட்ட மரவள்ளிக்கிழங்கு உணவு) மற்றும் பல்வேறு கவுனி அரிசி தயாரிப்புகள் (ஜெனாங் டோடோல், கிளெபன் மற்றும் வாஜிக்).

உடை

ஜாவா ஆண்களும் பெண்களும் சாரோங் அணிவர். ஆண்கள் பிலாங்கொன் எனும் தலைப்பாகை அணிவர். பெண்கள், சாரோங், கெபாயா, செலேன்டாங் அணிவர்.

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.