being created

ஜானகி அம்மாள்

From Tamil Wiki
Revision as of 15:10, 20 June 2022 by Suchitra (talk | contribs)
ஜானகி அம்மாள்

ஜானகி அம்மாள் (இ.கெ.ஜானகி அம்மால், இடவலத்து கக்காட்டு ஜானகி அம்மாள்) ஒரு தாவரவியல் ஆய்வாளர். மரபினக் கலப்பில் ஆராய்ச்சி செய்து புதிய தாவர வகைகளை உருவாக்கியவர். கோவை கரும்பு உற்பத்தி மையத்தில் நவீன கரும்பு வகைகளை கண்டடைந்தது ஜானகி அம்மாளின் முக்கிய பங்களிப்பு. சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றார். நாட்டார் சமூகங்கள் மரபாக தாவரங்களை உபயோகிக்கும் முறைகளில் ஜானகி அம்மாள் ஆர்வம் கொண்டிருந்தார். கேரளத்தின் மழைக்காடுகளில் கிடைக்கும் அரியவகை மருத்துவ மூலிகைகள் மற்றும் தாவரங்களை கண்டெடுத்து அவற்றை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். அறிவியலை மக்கள் இயக்கமாக கொண்டுசெல்வதில் நம்பிக்கை கொண்ட ஜானகி அம்மாள் 1970-ல் கேரளத்தின் அமைதி பள்ளத்தாக்கு தேசிய பூங்காவின் ஒரு பகுதியில் நீர்மின் நிலையம் அமைக்க யோசனை வந்தபோது மூத்த ஆய்வாளராக முன்னின்று அதை எதிர்த்து குரல் கொடுத்தார்.

வாழ்க்கை

ஜானகி அம்மாள் நவம்பர் 4, 1897 அன்று கேரளம் தலச்சேரியில் திவான் பகதூர் இடவலத்து கட்டாட்டு கிருஷ்ணனுக்கும் தேவி குருவாயிக்கும் பிறந்தார். இடவலத்து கக்காட்டு கிருஷ்ணன் (இ.கே. கிருஷ்ணன், 1841-1907) தந்தை வழியில் வைத்தியர்களாக இருந்த செழிப்பான தீய்யர் (ஈழவ) குடியில் பிறந்தவர். சென்னை நீதிமன்றத்தில் துணைநீதிபதியாக பணிபுரிந்தார். பின்னாளில் தலச்சேரி நீதிமன்றத்தில் ஆங்கில எழுத்தராக இருந்தார். மலபாரின் துணை ஆணையராகவும் திவானாகவும் இருந்து ஓய்வு பெற்றார். இ.கே. கிருஷ்ணன் இயற்கையில் ஆர்வம் கொண்டிருந்தார். வீட்டில் அறிய வகை தாவரங்கள் கொண்ட தோட்டம் வைத்திருந்தார். வட மலபார் பகுதியின் பறவைகளை பற்றி இரண்டு நூல்களை எழுதினார். ஜானகி அம்மாளுக்கு தாவரங்களில் ஆர்வம் உண்டாக முக்கிய காரணமாக அமைந்தார்.

ஜானகி அம்மாளின் தாயார் தேவி குருவாயி (1864-1941) திருவிதாங்கூரில் ‘ரெஸிடெண்ட்' பதவியில் இருக்கை கொண்டிருந்த ஜான் சைல்ட் ஹானிங்டன் என்ற பிரிட்டிஷ் அதிகாரிக்கும் ஒரு ஈழவ பெண்ணுக்கும் மண உறவுக்கு வெளியே பிறந்த மகள். ஜான் சைல்ட் ஹானிங்டனும் தாவரங்களில் ஈடுபாடு கொண்டவர். இந்தியாவிலிருந்து அறியவகை தாவரங்களை பதப்படுத்தி லண்டலில் உள்ள  உலகின் மிகப்பெரிய தாவர பாதுகாப்பகமான கியூ தோட்டத்துக்கு (Kew Gardens) அனுப்பி வைத்தார். ஜான் ஹானிங்க்டனுக்கு அவர் மனைவியில் பிறந்த ஃபிராங்க் ஹானிங்டனும் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு அதிகாரி, பூச்சிகளை பற்றி முக்கிய ஆய்வுகள் செய்தவர். ஜானகி அம்மாளின் தாய் மாமனான இவரும் அவர் அறிவியல் ஆர்வத்தில் செல்வாக்கு செலுத்தினார்.

திருமணம் செய்துகொள்ளாத ஜானகி அம்மாள் 1984-ஆம் ஆண்டு தன் 87-ஆவது வயதில் மறைந்தார்.

கல்வி

பெண்கள் கல்வி கற்பதே அரிதாக இருந்த காலத்தில் பெண்களில் உயர்கல்வி மற்றும் நுண்கலை ஈடுபாட்டை ஊக்கப்படுத்திய குடும்பத்தில் ஜானகி அம்மாள் பிறந்தார். தந்தைக்கு தாவரங்கள் மற்றும் பறவைகளில் இருந்த ஆர்வத்தால் தூண்டப்பட்ட ஜானகி அம்மாள் இளம் வயதிலேயே தாவரவியலில் ஈர்க்கப்பட்டார். தலச்சேரி சேக்ரட் ஹார்ட் பள்ளியில் ஆரம்ப கல்வி முடித்த ஜானகி அம்மாள் சென்னை ராணி மேரி கல்லூரியில் தாவரவியலில் இளங்கலை பட்டமும் சென்னை மாநிலக் கல்லூரியில் ஹானர்ஸ் பட்டமும் பெற்றார்.

1924-ஆம் ஆண்டு பார்பூர் உதவித்தொகையுடன் ஜானகி அம்மாளுக்கு அமெரிக்காவில் படித்து ஆய்வு செய்ய வாய்ப்பு கிடைத்தது. ஆசிய மாணவர்கள் அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் படிக்க லெவி பார்பூர் என்ற கொடையாளரால் நிறுவப்பட்ட ஊக்கத்தொகை இது. 1925-ஆம் ஆண்டு மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும்  1931-ஆம் ஆண்டு அதே பல்கலைக்கழகத்தில் தாவரவியலில் முனைவர் பட்டமும் டி.எஸ்.சி பட்டமும் பெற்றார். ஹார்லி ஹாரிஸ் பார்ட்லியின் மேற்பார்வயில் முனைவர் பட்ட ஆய்வை மெற்கொண்டார். Nicandra physalodes என்ற பூக்கும் தாவரத்தின் நிறப்புரிகளில் [குரோமோசோம்] ஆய்வு செய்தார்.  ‘Chromosome Studies in Nicandra Physaloides’ என்ற அவர் முனைவர் பட்ட ஆய்வேடு 1932-ஆம் ஆண்டு பிரசுரமானது. அமெரிக்காவில் தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண் ஜானகி அம்மாள்.

பணிவாழ்க்கை

இளங்கலை பட்டம் பெற்ற பின் சிறிது காலமும், முதுகலை பட்டம் பெற்ற பின் சிறிது காலமும் ஜானகி அம்மாள் சென்னையின் பெண்கள் கிறிஸ்துவக் கல்லூரியில் ஆசிரியராக பணி புரிந்தார். முனைவர் பட்டம் பெற்ற பிறகு இந்தியா திரும்பிய ஜானகி அம்மாள் 1932 முதல் 1934 வரை திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராக பணியாற்றினார்.

1934-ல் கோவை சென்ற ஜானகி அம்மாள் அங்கே இருந்த கரும்பு உற்பத்தி மையத்தில் மரபணு ஆராய்ச்சியாளராக பணிபுரிந்தார். சார்லெஸ் ஆல்ஃப்ரெட் பார்பருடன் இணைந்து கரும்பு செடியில் மரபின கலப்பு ஆய்வுகளை மேற்கொண்டார். புதிய வகை கரும்புகள், புல்லினங்கள் முதலியவற்றை உருவாக்கினார். ஆனால் அவர் ஜாதியும் அவர் திருமணமாகாத பெண் என்பதும் அவருக்கு பணியிடத்தில் சிக்கல்களை உருவாக்கியதாக அவர் வாழ்க்கை வரலாறை எழுதியவர்கள் சொல்கிறார்கள். 1939-ஆம் ஆண்டு இங்கிலாந்து எடின்பரோவுக்கு ஒரு ஆய்வுகூடுகைக்காக சென்ற ஜானகி அம்மாள் அங்கே போர் அறிவிக்கப்பட்டபோது இந்தியா திரும்ப இயலாமல் ஆனால். போர் முடியும் வரை அங்கேயே பணியாற்ற முடிவு செய்தார்.

1940-ஆம் ஆண்டு லண்டன் சென்று 1945 வரை ஜான் இன்னெஸ் தோட்டக்கலை மையத்தில் துணை ஆய்வாளராக பணிபுரிந்தார். 1945 முதல் 1951 வரை விச்லே நகரத்தில் உள்ள [Royal Horticultural Society] யில் மரபணு ஆய்வாளராக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் முக்கிய மரபணு ஆராய்ச்சியாளர்களான சி.டி.டார்லிங்டன் மற்றும் ஜே.பீ.எஸ் ஹால்டேனுடன் ஜானகி அம்மாளுக்கு அறிமுகம் ஏற்பட்டது. சி.டி.டார்லிங்டனுடன் இணைந்து தாவரங்களின் நிறப்புரி வகைமைகளை பட்டியலிடும் ‘Chromosomal Atlas of Plants’ என்ற நூலை எழுதினார்.

1951-ல் ஜானகி அம்மாள் அப்போதைய இந்திய பிரதமரான ஜவகர்லால் நேருவை ஒரு விமான பயணத்தில் எதிர்பாராதவிதமாக சந்தித்தார். அவர் ஜானகி அம்மாளை இந்தியாவுக்கு திரும்பி இந்திய தாவரவியல் சர்வே அமைப்பை சீரமைக்கும்படி கேட்டுக்கொண்டார். ஜானகி அம்மாள் ஒப்புக்கொண்டார். 1952-ஆம் ஆண்டு அக்டோபர் 14-ஆம் தேதி இந்திய தாவரவியல் சர்வே அமைப்பின் விசேஷ அதிகாரியாக பணியேற்றுக்கொண்டார். அந்த அமைப்பின் இயக்குனரானார்.

அதன் பிறகு வெவ்வேறு இந்திய அரசுப் பணிகளில் இருந்தார். அலகாபாத் மத்திய தாவர ஆய்வகத் தலைவர், ஜம்மு மண்டல ஆராய்ச்சி ஆய்வக சிறப்பு அலுவலர் உள்ளிட்ட இந்திய அரசுப் பணிகளிலும், சிறிது காலம் டிராம்பே அணு ஆராய்ச்சி ஆய்வகத்திலும் பணிபுரிந்தார். 1970-ல் சென்னைக்கு வந்தார். சென்னை பல்கலைக்கழக தாவரவியல் உயர் ஆய்வு மையத்தில் இணைந்து, மதுரவாயல் கள ஆய்வகத்தில் 1984-ல் தான் மறையும் வரை பணியாற்றினார்.

அறிவியல் பங்களிப்புகள்

ஜானகி அம்மாள் கல்லூரியில் தாவரவியல் படித்தார். பின்னர் தாவரங்களின் மரபணு அமைப்பு சார்ந்து, குறிப்பாக நிறப்புரி (குரோமோசோம்) அமைப்பு சார்ந்து ஆய்வு மேற்கொண்டார். குரோமோசோம்களின் அமைப்பை ஆராய்ந்து குறிப்பிட்ட தாவரகங்களை இணைத்து கலந்து புது வகை தாவரங்களை உருவாக்கினார்.

ஜானகி அம்மாள் கோவை கரும்பு உற்பத்தி மையத்தில் பணியை தொடங்கியபோது உலகத்திலுள்ள இனிப்புமிக்க கரும்புச்செடி Saccharum officianarum என்ற வகை, இது இந்தோனேசியாவிலும் இதற கிழக்காசிய தீவுகளிலும் விளைந்தது. இந்தியா அதை பெரும் விலையில் இறக்குமதி செய்துகொண்டிருந்தது. அதே அளவு இனிப்புக் கொண்ட, இந்தியாவின் வெப்பச்சூழலில் அதிகம் மகசூல் ஆகக்கூடிய கரும்புப் பயிரை உருவாக்குவது அப்போது பெரிய தேவையாக இருந்தது. கரும்புத்தாவரத்தின் சில உயிரணுக்களில் நிறப்புரிகள் வழக்கதை விட அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. இவை ஒன்றுடன் ஒன்று சேர்ந்து புதிய வகை நிறப்புரிகளை உருவாக்கும் போது  வழக்கத்தை விட அதிக குணவேறுபாடு கொண்ட செடிகள் உருவாவதற்கான சாத்தியங்கள் உண்டாகிறது. நிறப்புரிப்பன்மை (polyploidy) என்று சொல்லப்படும் இந்தப் பண்பை பயன்படுத்தி ஜானகி அம்மாள் பல வகையான கரும்புச்செடிகளை உருவாக்கினார். அதில் சில வகைகள் அதிக கரும்பும், மிக இனிப்பான சாறும், இந்திய நிலைக்கு ஏற்றவையாகவும் இருந்தன. இதே வகையில் இவர் புதியவகை கத்திரிக்காய்களை உருவாக்கினார். அதில் ஒரு வகைக்கு ‘ஜானகி பிரிஞ்சால்' என்று அவர் பெயரே சூட்டப்பட்டது. இங்கிலாந்தில் அவர் உருவாக்கிய மாக்னோலியா மலர் வகைக்கு Magnolia kobus ‘Janaki Ammal’ என்று பெயர் சூட்டப்பட்டது.

நாட்டார் சமூகங்கள் மரபாக தாவரங்களை உபயோகிக்கும் முறைகளில் ஜானகி அம்மாள் எப்போதும் ஆர்வம் கொண்டிருந்தார் [நாட்டுத்தாவரவியல் - ethnobotany]. காட்டில் வாழும் சமூகங்களோடு உரையாடி வெவ்வேறு காட்டுத்தாவரங்களின் முக்கியத்துவத்தை அறிந்துகொண்டார். கேரளத்தின் மழைக்காடுகளில் கிடைக்கும் அரியவகை மருத்துவ மூலிகைகள் மற்றும் தாவரங்களை கண்டெடுத்தார். வெண்கோஷ்டம் போன்ற மூலிகைச் செடிகளின் பயன்பாடு குறித்து ஆராய்ந்தார். அவற்றின் முக்கியத்துவத்தை பற்றி தொடர்ந்து பேசி அவற்றை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

ஜானகி அம்மாளின் அறிவியல் ஆர்வத்தை ஒரு வார்த்தையில் பன்முகத்தன்மை (diversity) மீதான ஆர்வம் என்று சொல்லலாம். ஆரம்ப காலத்தில் பல வகையான புதிய தாவரங்களை ஆய்வுகூடத்தில் உருவாக்கினார். அவர் ஆய்வுகள் இயற்கை பரிணாமத்தில் புதிய உயிர் வகைப்பாடுகள் எவ்வாறு உருவாகின்றன என்று விளக்கும் வகையில் இருந்தன. பின்னர், காட்டில் இயற்கையாக உள்ள பன்முகத்தன்மையை ஆராயத்தொடங்கினார். கேரளத்திலும், வடகிழக்கிலும் இமயமலைக் காடுகளிலும் உள்ள அரியப்படாத தாவரங்களை கண்டடைந்து. அவற்றின் நிறப்புரிகளை ஆராய்ந்தார். இந்தியாவின் வடகிழக்கு சீன மற்றும் மலாய் தாவரங்கள் முயங்கும் பகுதி. அவற்றுடன் இந்திய மைய நிலத் தாவரங்கள் இணையும் போது புதிய வகைகளுக்கான சாத்தியங்கள் பற்பல மடங்கு அதிகரித்ததாக கூறினார்.

கௌரவங்கள்

ஜான்கி அம்மாள் 1935ஆம் ஆண்டி இந்திய அறிவியல் கழகத்தின் ‘ஃபெல்லோ’ பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் உறுப்பினராக 1957-ல் ஆனார். 1956ஆம் ஆண்டு மிச்சிகன் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ எல்.எல்.டி பட்டம் அளித்தது. இந்திய அரசின் பத்மஶ்ரீ விருது 1977-ல் அளிக்கப்பட்டது. அவர் மறைவுக்குப் பிறகு, 2000-ஆம் ஆண்டில், மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்புத்துறை இவர் பெயரில் தாவர வகைத்தொகுப்புக்கான தேசிய விருது ஒன்றை அறிவித்தது.

சூழலியல் பங்களிப்புகள்

மறைவு

ஜானகி அம்மாள் 1984-ஆண்டு -ஆம் தேதி தனது 87-ஆவது வயதில் மறைந்தார்.

பண்பாட்டு முக்கியத்துவம்

ஒரு சதவிகிதத்துக்கும் கீழான இந்தியபெண்களே எழுதப்படிக்கக்கற்ற காலகட்டத்தில் ஜானகி அம்மாளின் சாதனைகள் அரிதானவை. ஆய்வுக்கூடத்தைத் தாண்டி ஜானகி அம்மாள் இயற்கையிலும் சூழியலிலும் காட்டு இன மக்களின் மரபார்ந்த பழக்கங்களிலும் ஆர்வம் கொண்டிருந்தார். ஒற்றைப்படையான அறிவியல் எழுச்சிக்கு மாறாக இயற்கையுடனான இசைவை வலியுறுத்தினார். இந்த அம்சங்கள் அவரை ஒரு முக்கியமான பண்பாட்டு ஆளுமையாக ஆக்குகிறது.

உசாத்துணை

  1. https://scientificwomen.net/women/ammal-janaki-111
  2. https://www.smithsonianmag.com/science-nature/pioneering-female-botanist-who-sweetened-nation-and-saved-valley-180972765/
  3. https://archive.org/details/in.gov.ignca.5089/page/n361/mode/2up
  4. https://journals.sagepub.com/doi/abs/10.1177/007327531305100302?journalCode=hosa
  5. https://thewire.in/science/janaki-ammal-magnolia-edathil
  6. https://iiim.res.in/herbarium/edavaleth-kakkat-janaki-ammal.htm
  7. https://thewire.in/science/janaki-ammal-magnolia-kobus
  8. https://bengaluru.sciencegallery.com/phytopia/exhibits/janaki-ammal
  9. https://www.ias.ac.in/article/fulltext/jgen/096/05/0827-0836
  10. https://www.hindutamil.in/news/blogs/64163-10.html


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.