ஜப்பானிய ‘லாக்கப்பில்’ ஏழு தினங்கள்

From Tamil Wiki
Revision as of 15:28, 3 August 2022 by Parimitaa KM (talk | contribs) (Created page with "மலாயாவில் இரண்டாம் உலகப்போர் முடியும் தருவாயில் எழுத்தாளர் சி.வீ. குப்புசாமி ஜப்பானிய இராணுவத்தால் சிறையினுள் அடைக்கப்பட்ட நேரடி அனுபவங்களைக் கட்டுரையாக எழுதியுள்ளார். இரு...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மலாயாவில் இரண்டாம் உலகப்போர் முடியும் தருவாயில் எழுத்தாளர் சி.வீ. குப்புசாமி ஜப்பானிய இராணுவத்தால் சிறையினுள் அடைக்கப்பட்ட நேரடி அனுபவங்களைக் கட்டுரையாக எழுதியுள்ளார். இருண்ட காலம் என ஆய்வாளர்களால் வரையறை செய்யப்பட்ட இந்தக் காலக்கட்டத்தில் இவரின் படைப்பு மலேசிய தமிழ் இலக்கியத்திற்குப் புத்துணர்ச்சியளிக்கும் நூலாக அமைந்தது.

நூல் உருவான பின்னணி

புதுமலர்ச்சி பிரசுராலயம் 1946ல் சி.வி குப்புசாமியிடம் அவரது ஜப்பானிய காவல் முகாமில் இருந்த சம்பவங்களை ஆவணப்படுத்த கோரியிருந்தனர். அதற்கிணங்க, ஜப்பானிய கடுங்கோல் ஆட்சிக்கு நிதர்சன பதிவாக சி.வி. குப்புசாமியின் சிறை-சித்திரவதை அனுப கட்டுரை நூலாக எழுதியுள்ளார்.

உள்ளடக்கம்

இந்த நூல் மொத்தம் 10 பாகங்களைக் கொண்டது. முதல் எட்டு பாகம் சிறை அனுபவங்களையும் இறுதி இரண்டு பாகம் ஜப்பானிய திமிராட்சியையும் சிறைபட்ட காரணத்தையும் துல்லியமான விவரணைகளுடன் எழுதப்பட்டுள்ளன.

இரகசிய போலீசின் லஷணமும் தடியடி தர்பாரும் - 25.2.1943

வியாழக்கிழமை பிற்பகலில், காரியாலயத்தில் பணிபுரிந்துக் கொண்டிருந்த சி.வி. குப்புசாமியிடம் பத்திரிகையைப் பற்றி பேச வேண்டுமென இரு ஜப்பானியர்கள் அவரைச் சந்தித்தனர். ஜப்பானிரியருக்கு விரோதமாக ஏதும் எழுதியுள்ளாரா என்ற தீவிர விசாரணை செய்கின்றனர்; அடிக்கின்றனர்.

‘லாக்கப்’ – 25.2.1943

சிறையினுள் இருக்கும் மற்ற கைதிகளைப் பார்த்து, அணுகி அவர்களின் சிறையினுள் அடைக்கப்பட்ட காரணங்களையும் அடைக்கப்பட்டிருக்கும் காலத்தையும் அவர்கள் பட்ட துன்பங்களையும் கேட்டு அறிந்துக்கொள்கிறார். மேலும் அங்குள்ள உணவு பழக்கத்தையும் விரிவாக இப்பகுதியில் பதிவு செய்துள்ளார். குப்புசாமி பட்டினி கிடக்கிறார்.

இரண்டாம் நாள் – 26.2.1943

ஜப்பானிய சிப்பாய்கள் கைதிகளிடம் உணவு கொடுக்கும் முறையும் உணவின் புலனனுபவமும், கைதிகளின் பசிப்பிணியும் நுணுக்கமாக எழுதப்பட்டுள்ளது. இரண்டாவது நாளும் சி.வி.குப்புசாமி உணவுண்ணாமல் பிடிவாதமாக இருப்பது பதிவாகியுள்ளது.

மூன்றாம் நாள் - 27.2.1943

ஜப்பானியர்களுக்கு எதிராக அவதூறு எழுதியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டதை அறிகிறார். குற்றத்தை அவர் மறுக்கவும் கசையடி, மின்சார சக்தியைப் பிடிக்க செய்வதும், வாய் வழியாக தண்ணீர்க் குழாயிலிருந்து வயிற்றுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது என வதை படுகிறார். அன்றும் உணவை உட்கொள்ளாமல் பட்டினியாக உறங்குகிறார்.

நான்காம் நாள் -28.2.1943

அவர் பிரிட்டிஷ் உளவாளி என்றும், ஜப்பானியருக்கு எதிராக வதந்திகளைக் கிளப்புவர் என்றும் குற்றம் சுமத்தப்படுகிறார். அவர் அத்தனையும் பொய், தான் எழுதியதை ஜப்பானிய தணிக்கையாளர்களால் கவனிக்கப்பட்ட பின்னரே பிரசூரமாகிறதென வாதிடுகிறார். பிரம்படிகளும், குத்துகளும், மின்சாரக் கம்பிகளில் தொங்கவிடுவதுமென ஜப்பானியர்கள் சி.வி குப்புசாமியின் மேல் வன்முறையைப் பிரயோகிக்கின்றனர். தனது உண்மையை நிலைபடுத்து அன்றும் பட்டினி கிடக்கிறார்.

ஐந்தாம் நாள் -1.3.1943

அன்றைய விசாரணையில் இராணுவம் தங்கள் பக்கம் சாட்சி இருப்பதாகக் கூறுகிறது. அந்தச் சாட்சி ஒரு வகுப்புவாத போர்வையைப் போர்த்திக் கொண்டு வம்பு செய்யும், ஏழைகளின் பணத்தை சுரண்டும், பின் ஜப்பானிய இராணுவ காவலுக்கு [எம்.பி] உளவு சொல்லிக் கொண்டிருக்கும் ஒருவர் என அறிகிறார். அவருக்கும் சி.வி குப்புசாமிக்கும் அரசியல் கருத்து வேறுபாடு உள்ளதையும் குறிப்பிடுகிறார்.

ஆறாம் நாள் - 2.3.1943

அன்று விசாரணையை நயமாகத் தொடங்கிய ஜப்பானியர்கள் பின்னர் வன்முறையைப் பிரயோகிக்கின்றனர். ஒரு கடிதத்தில் ஆசிரியரின் பெருவிரல் குறியைப் பெற்றுக்கொள்கின்றனர். அன்றைய நாளின் தண்டனைகள் மற்ற நாட்களை விட கொடுரமாக இருந்ததாகப் பதிவு செய்துள்ளார்.

ஏழாம் நாள் - 3.3.1943

சி. வீ. குப்புசாமி குற்றவாளி அல்ல என நிரூபணம் ஆகிறது. அவர் விடுவிக்கப்படுகிறார். நடந்த தவறுக்கு ஜப்பானிய இராணுவம் மன்னிப்புக் கேட்கிறது.

சிறைப்பட்டதன் காரணமும் விடுதலையும்

ஆசிரியர் கைது செய்யப்பட்டது, ஜப்பானியர் ஆட்சி மலாயாவில் சரிந்துக்கொண்டிருந்த காலம். சாமானிய மக்கள் ஜப்பானியரின் திமிராட்சியை நன்கு உணர்ந்து அவர்களைப் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்திய காலம். பலர் ஜப்பானியரிகளின் ஒற்றர்களாக செயல்பட்ட காலம். அப்படி ஒரு ஒற்றனின் பொய்யால் சி.வீ.குப்புசாமி கைது செய்யப்பட்டார்.

ஜப்பானிய கெஸ்டாபோ – நானறிந்தமட்டில்

ஆசிரியரை இரு ஜப்பானியர்கள் அழைத்துச் சென்ற பிற்பாடு, ஆசிரியரின் மேலதிகாரி இராணுவ காவலரிடம் புகார் கொடுக்கிறார். இங்கு, இவாகுவாரோ கிக்கான் (பிரசூராலயம் நிறுவியிருந்த இலாக்கா மேற்பார்வையாளர், ஜப்பானியர்) தன்னை சிறையிலிருந்து மீட்டெடுத்ததன் காரணங்களை அலசுகிறார்.

ஜப்பானிய திமிராட்சி காலகட்த்தில் மலாயா இந்தியர்களின் ஒட்டு மொத்த நிலைமையையும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ஜப்பானுக்கெதிரான மலாயா விடுதலை படைத்திரட்டலும், அதில் இந்தியர்களின் பங்களிப்பையும் எழுதியுள்ளார்.

இலக்கிய மதிப்பீடு

இந்நூல் சுய அனுபவமாக இருந்தாலும் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியர்களின் கோர முகத்தைக் காட்டும் ஆவணமாகத் திகழ்கிறது. ஜப்பானிய சிறை தண்டனைகளான சவர்க்கார தண்ணீரை கொடுத்து ‘உண்மையை’ வரவழைக்கும் விசாரணை, மின்கம்பி பிடிக்கும் விசாரணை, சிறையினுள் மனித தன்மையின்றி நடந்துக்கொள்ளும் விதம், தலைகளைச் சீவி நடு வீதியில் வைக்கும் கொடூரம் என பலவற்றை சி. வீ. குப்புசாமி தன் நேரடி அனுபவத்தில் நுணுக்கமாகச் சித்தரித்துள்ளார். எனவே, இது நாவல் கொடுக்கும் அனுபவத்திற்கு நெருக்கமாக உள்ளது.

உசாத்துணை

சி.வி குப்புசாமி

ஜப்பானிய ‘லாக்கப்பில்’ ஏழு தினங்கள் பகுதி 1

ஜப்பானிய ‘லாக்கப்பில்’ ஏழு தினங்கள் பகுதி 2