being created

சோலை சுந்தரபெருமாள்

From Tamil Wiki
சோலை சுந்தரபெருமாள் (1953 - 2021)

சோலை சுந்தரபெருமாள் (மே 09, 1953 - ஜனவரி 12, 2021) முற்போக்கு இலக்கிய எழுத்தாளர். பள்ளி ஆசிரியர். கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். தஞ்சை மாவட்ட விவசாயிகளின் வாழ்க்கைப்புலத்தை முற்போக்குப் பார்வையில் எழுதியவர்.

சோலை சுந்தரபெருமாள் (1953-2021) நன்றி- ஆனந்தவிகடன்

தனிவாழ்க்கை

சுந்தரபெருமாள் திருவாரூர் மாவட்டம் அம்மையப்பனுக்கு அருகில் உள்ள காவனூரில் மே 09,1953 ல் சுப்பிரமணியப்பிள்ளை - கமலம் தம்பதியருக்கு பிறந்தார். கல்விச்சான்றின்படி பிறந்த தேதி ஜனவரி 18, 1952. காவனூரின் பழைய பெயரான சோலையைத் தன் பெயரோடு சேர்த்துக்கொண்டார். மனைவி பத்மாவதி. ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

கல்வி, வேலை

பள்ளி அடிப்படைக் கல்விக்குப் பின் தொழிற்கல்வி ஆசிரியர் பயிற்சி முடித்திருந்த சுந்தரபெருமாள் அரசுப் பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியராகப் பணிபுரிந்தார். இளங்கலைக் கல்வியியலும் முதுகலைத் தமிழும் பயின்றார். பணியில் இருந்துகொண்டே தமிழ் இலக்கியம் முடித்தபின் வலிவலம் தேசிகர் பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றினார். சிறுவயதில் வறுமைசூழ் குடும்பப் பின்னணி. அப்பா ஸ்தபதி வேலைக்குச் செல்பவர். சிறு வயதில் சுந்தரபெருமாள் அப்பவுடன் சித்தாள் வேலைக்குச் சென்றார். பள்ளி வகுப்புகள் முடிந்த பிறகு ஜவுளிக் கடை, மளிகைக் கடைகளில் வேலை பார்த்து வந்தார்.

இலக்கியபணி

எண்பதுகளில் பிற்பகுதியில் தாமரை இதழில் சிறுகதைகள் எழுதத் தொடங்கிய சோலை சுந்தரபெருமாள் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்திலும் பின்னர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்திலும் இணைந்து பணியாற்றினார். தமுஎகசவின் மாநில செயற்குழு உறுப்பினராக சிறப்பான பங்களிப்பைச் செலுத்தியுள்ளார். சிறுகதைத் தொகுப்புகள் வழியாக நாவல் உலகத்திற்குள் பிரவேசித்த சோலை சுந்தரபெருமாள் ‘செந்நெல்’, ‘தப்பாட்டம்’, ‘மரக்கால்’ ‘தாண்டவபுரம்’ போன்ற நாவல்களின் மூலம் கூடுதல் கவனிப்புக்குள்ளானவர். தொடக்கத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்திலும், பின்னர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் செயல்பட்டார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில, மாவட்டத் தலைவர்களோடும், முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தோழர்களோடும் அணுக்கமாக இருந்தார்.

முதல் குறுநாவல் ‘மனசு’ 1987-ல் ‘கலைமகள்’ இதழில் வெளியாகி அமரர் இராம ரெத்தினம் நினைவுப் போட்டியில் பரிசுப் பெற்றது. இது ஒடுக்கப்பட்டு பண்ணை அடிமைகளாக இருந்த மக்களை குறிப்பாக பெண் எப்படி ஒடுக்கப்பட்டாள் என்பதை உள்ளடக்கமாக கொண்டது.

முதல் சிறுகதை 1989-ல் `தாமரை` இலக்கிய  இதழில் வெளிவந்தது.  தஞ்சை மண்ணுக்குப் பஞ்சம் பிழைக்க வந்து, சாலை அமைப்புப்பணியில் ஈடுபட்ட ஒட்டர் சமூகத் தொழிலாளிகளின் வாழ்வியலைப் பின்னணியாகக் கொண்ட சிறுகதை. அம்மாத இதழில் வெளிவந்த சிறந்த சிறுகதையாகத் தேர்வு பெற்று `ஈ.எஸ்.டி’ நினைவுப் பரிசினைப் பெற்றது.

கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலத்தின் ஊக்கத்தால் தொடர்ந்து ‘தாமரை’யில் எழுதினார். 1990-ல் ‘உறங்க மறந்த கும்பகர்ணர்கள்’ நாவலை ‘சுபமங்களா’ இதழ் சிறந்த நாவலாகப் பட்டியலிட்டது.

எழுதத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் அவருடைய பொன்னியின் காதலன் (மரபுக்கவிதை), ஓ செவ்வந்தி, நீரில் அழும் மீன்கள், மரத்தைத் தாங்கும் கிளைகள், கலியுகக் குற்றங்கள், நெறியைத் தொடாத நியாயங்கள் ஆகிய படைப்புக்களை ஒரு ரூபாய் விலையில் சின்னச் சின்ன வெளியீடுகளாக வெளியிட்டார்.

இலக்கிய அழகியல்

சோலை சுந்தரபெருமாள் வண்டல் மண் சார்ந்த குறிப்பிடத்தக்க இலக்கியப் படைப்பாளி. கீழத்தஞ்சை எனப்படும் நாகை-திருவாரூர் வட்டாரத்தின் விவசாய வாழ்க்கையை முழுமையாகச் சொல்லிவிடத் தொடர்ந்து முயன்றவர். சோலை சுந்தரபெருமாளின் எழுத்துக்கள் வண்டல் இலக்கியம் என்ற வகைமையின் அடையாளமாக இருந்தது.

தனக்குத் தெரிந்த மக்களையும், அவர்களது வாழ்க்கையையும் படைப்பாக்கியவர். தஞ்சைமாவட்ட வேளாண்மக்களின் வாழ்வியலையும், பண்பாட்டுக் கூறுகளையும் நுட்பமாக எழுதியவர்.  கீழ்வெண்மணியின் பின்னணியில் சோலைபெருமாள் எழுதிய ‘செந்நெல்’ மற்றும் ஞானசம்பந்தரை நினைவூட்டிய ‘தாண்டவபுரம்’ நூல்கள் ஒருசேர பாராட்டுகளையும் சர்ச்சைக்குரிய பல விமர்சனங்களையும் ஏற்படுத்தியவை. `செந்நெல்’ நாவல்,  2000 ம் ஆண்டு முதல் பாரதிதாசன் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மனோன்மணிசுந்தரம்பிள்ளை பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களிலும், தன்னாட்சிக் கல்லுரிகளிலும் இளங்கலை முதுகலை வகுப்புகளின் பாடத்திட்டத்தில் இடம் பெற்று இருந்தது.

ஆனால், பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டபோதும் ‘கொச்சையான மொழி’ என்று விமர்சிக்கப்பட்டது. நவீன இலக்கியப்பார்வையில் கீழ்வெண்மணி நிகழ்வு குறித்த இடதுசாரிப் பார்வையுடன் கூடிய செந்நெல் மட்டுமே குறிப்பிடத்தக்க படைப்பு. ஆனால் அதையும் ஓர் இலக்கிய ஆக்கமாக கருத்தில்கொள்வது கடினம், மார்க்ஸியர்களின் தரப்பு என்று எடுத்துக்கொள்ளலாம். அதில் வரும் உழைப்பாளி மக்களும் சரி, அப்பிரச்சினையும் சரி , வரையறைசெய்யப்பட்ட அச்சில் வார்த்தவையாகவே அதில் வெளிப்பட்டன என ஜெயமோகன் கூறுகிறார். ‘தாண்டவபுரம்’ நாவல் மதநலன் மட்டுமே முன்னிலைப் படுத்தி பிற மதங்கள் மீது வெறுப்பையும் பகைமையையும் மூட்டுகிறது, வெறுமே சீண்டும் நோக்கம் மட்டுமே கொண்டது என்கிற குற்றச்சாட்டும் உள்ளது.

இலக்கிய விமர்சகர் வெங்கட்சாமினாதன் குமுதம் தீபாவளி மலர் 2006 ல் தேர்வு செய்த தமிழில் வெளிவந்துள்ள சிறந்த பத்து நாவல்கள் தேர்வில் மாயூரம் வேதநாயகம்பிள்ளையின் `பிரதாப முதலியார் சரித்திரம்’ உடன் `செந்நெல்’ இடம் பெற்றது. மண்ணாசை சிறுகதை  1999 முதல் 2012 வரை தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் பத்தாம் வகுப்பு துணைப்பாட நூலில் இடம் பெற்றிருந்தது.

மறைவு

சோலை சுந்தரபெருமாள் உடல்நலக்குறைவு காரணமாக ஜனவரி 12, 2021 -ல் அம்மையப்பன் - காவனூரில் காலமானார்.

படைப்புகள்

கவிதைத்தொகுப்பு
  • தெற்கே ஓர் இமயம் (1986)
Image 27.png
நாவல்கள்
  • உறங்கமறந்த கும்பகர்ணர்கள் (1990)
  • ஒரே ஒரு ஊர்ல (1992)
  • நஞ்சை மனிதர்கள் (1998)
  • செந்நெல் (1999)
  • தப்பாட்டம் (2002)
  • பெருந்திணை (2005)
  • மரக்கால் (2007)
Image 22.png
  • தாண்டவபுரம் (2011)
  • பால்கட்டு (2014)
  • எல்லை பிடாரி (2015)
குறுநாவல்கள்
  • மனசு (1987)
  • குருமார்கள் (2006)
  • காத்திருக்கிறாள் (2016)
சிறுகதைத்தொகுப்பு
  • மண் உருவங்கள் (1991)
  • வண்டல் (1993)
  • ஓராண்காணி (1995)
  • ஒரு ஊரும் சில மனிதர்களும் (1996)
  • வட்டத்தை மீறி (2000)
  • மடையான்களும் சில காடைகளும் (2006)
  • குருமார்கள் (2006)
  • வெள்ளாடுகளும் சில கொடியாடுகளும் (2010)
  • கப்பல்காரர் வீடு (2014)
  • முத்துக்கள் பத்து (2015)
  • வண்டல் கதைகள் (2016)
கட்டுரைத் தொகுப்பு
  • தமிழ்மண்ணில் திருமணம் (2010)
  • மருதநிலமும் சில பட்டாம் பூச்சிகளும் (2011)
  • வண்டல் உணவுகள் (2014)
பதிப்பித்தவை
சிறுகதைகளின் தொகுப்பு
  • தஞ்சை சிறுகதைகள் (ஐம்பது படைப்பாளிகளின் சிறுகதைகள்) (1999)
  • தஞ்சை கதைக்களஞ்சியம் (உ.வே.சாமினாதய்யர் முதல் சிவக்குமார் முத்தைய்யா வரை) - 2000
  • வெண்மணியும் 44 பிடிசாம்பலும் - செந்நெல்’ நாவல் குறித்து வந்த விமார்சனங்களின் தொகுப்பு. (2001)
  • மூவாலூர் ராமாமிர்தம்மாள் அவர்களின் `தாசிகளின் மோசவலை’ அல்லது  `மதிபெற்ற மைனர்’- 2002
  • நாட்டுப்புறச்சிறுகதைகள் - காவனுhர், அம்மையப்பன் பகுதியில்  வாழ் கதைச்சொல்லிகளிடம் கேட்டுத் தொகுத்தது. (2008)
  • வாய்மொழி வரலாறு - கீழத்தஞ்சையை உள்ளடங்கிய  பகுதிகளில் மக்களுக்குப் பணியாற்றிய தலைவர்களின்  அனுபவப் பகிர்வு. (2010)
மொழிபெயர்ப்பு
  • செந்நெல் நாவலை முனைவர் தாமஸ் ஆங்கிலத்திலும் எல்.பி.சாமி மலையாளத்திலும் மொழிபெயர்த்துள்ளனர்.

விருதுகள்

  • சுபமங்களா இதழ் தேர்ந்தெடுத்த சிறந்த நாவல்கள் - 1990 - உறங்கமறந்த கும்பகர்ணர்கள்
  • பாரத ஸ்டேட் வங்கியும் தமிழ்நாடு எழுத்தாளர் வாரியமும் இணைந்து வழங்கிய விருது.- 1991
  • பாரதி நினைவு விருது - 1993- தமிழ்நாடு  கலை இலக்கியப்      பெருமன்றம் - என்.சி.பி.எச் நிறுவனம்
  • ஈ.எஸ்.டி நினைவு இலக்கிய விருது - 1993 - கோவை லில்லி தேவசிகாமணி அறக்கட்டளை
  • பாரத ஸ்டேட் வங்கியின் இலக்கிய விருது - 1993, 1996, 1999
  • திருப்பூர்   தமிழ்ச்சங்க   விருது - 1995
  • தமிழக அரசு விருது - தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு - 1999 - செந்நெல் நாவலுக்கு
  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் - பெருமாயி - குப்பண்ணன் நினைவு நாவல் விருது.

உசாத்துணை

  1. சோலை சுந்தரபெருமாள் : ஆளுமைக் குறிப்பு
  2. கருத்துரிமையும் இடதுசாரிகளும் - ஜெயமோகன்
  3. ‘படைப்பு மொழி நவீனப்படவேண்டும்!’ - சோலை சுந்தரபெருமாளின் நேர்காணல்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.