under review

சே. இராஜாராமன்

From Tamil Wiki
Revision as of 21:47, 11 July 2023 by Madhusaml (talk | contribs) (Finalized)
சே. இராஜாராமன் (நீச்சல்காரன்)

சே. இராஜாராமன் (நீச்சல்காரன்). தமிழ் எழுத்தாளர். கணிப்பொறியியல் சார்ந்தும் நவீன தொழில்நுட்பங்கள் சார்ந்தும் எழுதுபவர். தமிழில் கணினி வழி எழுத்து உருவாக்கத்திற்கான மென்பொருட்களை உருவாக்கியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சே. இராஜாராமன் மதுரையில் 1988ல் பிறந்தார். கே.சி.ஏ.ஏ.அருணாச்சலம் பள்ளி (KACA Arunachalam Higher Secondary School)யில் பள்ளிக்கல்வியை முடித்தார். மதுரை யாதவாக்கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்றார்.

சென்னையிலுள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

எழுத்துப்பணிகள்

நீச்சல்காரன் 2010 முதல் இணைய இதழ்களுக்கும் அச்சு இதழ்களுக்கும் எழுதிவருகிறார். பன்னாட்டு மாத இதழான வலைத்தமிழின் ஆசிரியர் குழு உறுப்பினர். தமிழ் விக்கிபீடியா திட்டங்களில் தன்னார்வலராக எழுதி வருகிறார். புனைவுகளை மணல்வீடு, கணினி சார்ந்த எழுத்துக்களை எதிர்நீச்சல். சமூகம் சார்ந்த கருத்துகளை முத்துக்குளியல் ஆகிய வலைப்பக்கங்களில் எழுதுகிறார். நியூஸ்18, திண்ணை, வல்லமை, சொல்வனம், சிறகு, அதீதம், தமிழோவியம், வார்ப்பு, கீற்று, தமிழ் இந்து, முத்து கமலம் போன்ற இணைய இதழ்களில் எழுதுகிறார். தமிழ் கம்ப்யூட்டர், விஜயபாரதம் வார இதழ், வெற்றிநடை மாத இதழ், அருவி காலண்டிதழ் ஆகியவற்றில் எழுதியுள்ளார். மானிட்டர் உலகம் என்னும் நூல் வெளிவந்துள்ளது.

தமிழ் கணினி பங்களிப்புகள்

நீச்சல்காரன் கணினித்தமிழுக்கு பங்களிப்பாற்றியவர். நாவி எனும் சந்திப்பிழை திருத்தும் கருவி, வாணி எனும் பிழை திருத்தும் கருவி, ஓவன் எனும் ஒருங்குறி மாற்றிக் கருவி, சுளகு எனும் எழுத்தாக்கக் கருவி, மென்கோலம் - பல்குறியீட்டு எழுதிக் கருவி, நோக்கர் எனும் செயலி, வாணி தொகுப்பகராதி செயலி ஆகியவற்றைத் தமிழில் உருவாக்கி, அதனைத் தமிழ் ஆர்வலர்கள் பயன்பாட்டுக்காக நீச்சல்காரன் எனும் வலைத்தளம் வழியாக இலவசமாக வழங்கி வருகிறார். (நீச்சல்காரன் மென்பொருட்கள் இணைப்பு)

விருதுகள்

  • தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெற்ற முதலமைச்சர் கணினித் தமிழ் விருது (2019)
  • வல்லமையாளர் விருது (2015)
  • கனடாவிலுள்ள தமிழ் இலக்கியத் தோட்ட அமைப்பின் தமிழ் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது (2015)
  • 2022 டிஜிட்-ஆல் விருது

நூல்கள்

  • மானிட்டர் உலகம்

உசாத்துணை


✅Finalised Page