under review

செல்வக்கேசவராய முதலியார்

From Tamil Wiki
செல்வக்கேசவராய முதலியார்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.


செல்வக்கேசவராய முதலியார் (Selva Kesavaraya Mudhaliyar, 1864-1921) பதிப்பாசிரியர், ஆராய்ச்சியாளர் உரைநடையாளர், இலக்கண அறிஞர், வரலாற்று நூலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், தொகுப்பாளர் என்னும் பன்முகத் தன்மை உடைய தமிழறிஞர். மாணவர்களுக்காகவே உரைநடை நூல்களை எழுதிய ஆசிரியர்.

தனி வாழ்க்கை

கேசவ சுப்பராய முதலியாருக்கும் பாக்கியம் அம்மாவிற்கும் 1864ம் ஆண்டு சென்னையில் ’திருமணம்’ என்ற ஊரில் செல்வக் கேசவராய முதலியார் பிறந்தார். பின்னாளில் அவர் பெயருக்குப் முன்னொட்டாக “திருமணம்” தொடர்ந்தது. தந்தை பரம்பரைச் செல்வந்தர், பச்சையப்பன் கல்லூரித் தமிழ் ஆசிரியர், சொந்தமாக அச்சுப்புத்தகங்களையும் ஏடுகளையும் வைத்திருந்திருந்தார். மனைவி வேதவள்ளி. பரிமேலழகர், நச்சினார்க்கினியர், சேனாவரையார் ஆகிய மூன்று மகன்கள்.

மொழிப்புலமை

கேசவராயர் முதலில் தந்தையிடம் தமிழ் படித்தார். பள்ளியில் ஆங்கிலம் கற்றார். பச்சையப்பன் கல்லூரியில் எப்.ஏ, பி.ஏ. முடித்தார். அப்போது தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்திருந்தார். பின் சென்னை ராஜதானிக் கல்லூரியில் தமிழ் சிறப்புப் பாடமாக எடுத்து எம்.ஏ. பட்டம் பெற்றார். துணை மொழியாக மலையாளத்தைக் கற்றுக்கொண்டார். இதே காலத்தில் தெலுங்கையும் படித்தார். சென்னை ராஜதானிக் கல்லூரியில் முதல் தமிழ் எம்.ஏ. பட்டம் பெற்றவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

பணி

எம்.ஏ. முடித்தபின்பு அரசு வேலைக்கு முயற்சித்தார் (1888). கிடைக்கும் தறுவாயில் இவரது தந்தை ஆசிரியப் பணியே உகந்தது என்று கூறியதால் பச்சையப்பன் கல்லூரியில் ஆசிரியப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் (1888) அப்போது ரூபாய் 30 தான் சம்பளம். தமிழாசிரியர்களுக்குச் சம்பளம் குறைவான காலம் அது. பின்னர் இவர் ரூ.250 சம்பளம் வாங்கியிருக்கிறார். கல்லூரியில் வேலை கிடைத்த பின்பு திருமணம் ஊரிலிருந்து சன்னை, பெரம்பூரில் குடியேறினார்.

இலக்கிய வாழ்க்கை

பதிப்பாசிரியர், ஆராய்ச்சியாளர் உரைநடையாளர், இலக்கண அறிஞர், வரலாற்று நூலாசிரியர் மொழிபெயர்ப்பாளர், தொகுப்பாளர் என்னும் பன்முகத் தன்மை உடையவர் இவர். கல்லூரியில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்தவர். தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் ரா.பி. சேதுப்பிள்ளை இருவரும் இவரது மாணவர்கள்.

இலக்கிய இடம்

மாணவர்களுக்காகவே உரைநடை நூல்களை எழுதியவர். நல்ல நூல்களை மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியவர். இவரைச் சிறந்த ஆய்வாளர் எனக் கூறமுடியாவிட்டாலும் நல்ல மொழிநடையில் உரைநடை நூல்களைத் தந்தவர் என அ.கா பெருமாள் அவர்கள் “தமிழறிஞர்கள்” புத்தகத்தில் கூறுகிறார். சிறந்த பதிப்பாளர் என்ற பெருமைக்குரியவர்.

புகழ்

  • ஆங்கிலப் புலமைக்காகவும், அவர் எழுதிய தமிழ் உரைநடை நூல்களுக்காகவும் தாம் வாழ்ந்த காலத்தில் பாராட்டப்பட்டிருக்கிறார்.
  • பச்சையப்பன் கல்லூரியின் சிறந்த பேராசிரியர் என்னும் பெயரைப் பெற்றவர்.

பதிப்பித்த நூல்கள்

ஆறு பண்டைய இலக்கியங்களைப் பதிப்பித்திருக்கிறார். 14 உரைநடை நூல்களை எழுதியிருக்கிறார். இவர் பதிப்பித்த நூல்களில் ஆசாரக்கோவை (1893). அறநெறிச்சாரம் (1905), பழமொழி நானூறு (1917), முதுமொழிக்காஞ்சி ஆகிய நான்கு நூல்களும் முழுமையான பதிப்புகள். லோபாக்கியானம், அரிச்சந்திர புராணம் இரண்டும் சுருக்கப் பதிப்புகள். பாடத்திட்டத்தில் வைப்பதற்காக வெளியிடப் பட்டவை. இவற்றில் தேர்ந்தெடுத்த பாடல்களும் பதவுரையும் சிறு முகவுரையும் உள்ளன. இவை ஆராய்ச்சிப் பதிப்புகளல்ல. இவரது பதிப்புகளுக்கு ஆ. சிங்காரவேலு முதலியார், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பராய செட்டியார் ஆகியோர் உதவியிருக்கின்றனர்.

பதிப்பு முறை சிறப்புகள்

பொதுவாக இவரது பதிப்பில் பதவுரை, அரும்பதவுரை, கருத்துரை, மேற்கோள் காட்டல், பாடபேதம், இலக்கணக் குறிப்பு, வரலாற்றுக் குறிப்பு ஆகியன இருக்கும். பழைய உரை இருந்தால் அதையும் கொடுக்க வேண்டும் என்பது இவரது பதிப்பு முறை.

சிரமங்கள்

தன் பதிப்பு நூல்களை எல்லாம் சென்னை, வேப்பேரி எஸ்.பி.இ.கே. அச்சுக்கூடத்தில் சொந்தப் பணத்தில் அச்சடித்திருக்கிறார். இதிலுள்ள சிரமமும் நஷ்டமும் இவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. ஆசாரக்கோவை பதிப்பில், "பண்டைத் தமிழ்ப் பனுவல்களைப் பதிப்பிப்பதென்றால் கையிலுள்ள பொருளைக் கொண்டுபோய் நட்டாற்றில் வலிய எறிந்துவிட்டு வெறுங்கையை வீசிக்கொண்டு வீடுபோய் சேர்வதே முடிவான பொருள் என்பதுணர்ந்து எச்சரிக்கையாய் இருப்பார்க்கு இன்னலொன்றும் இல்லை..." என்று கூறியிருக்கிறார் (1893). இப்படி எல்லாம் தமிழ்ப் புத்தகங்களை அச்சிடுவதால் பொருள் இழப்பு ஏற்படும் என்பதை அறிந்துதான் இந்த முயற்சியில் ஈடுபட்டதாகவும் எழுதியிருக்கிறார்.

பதிப்புத் தேவை

சார்லஸ் கோவர் என்பவர் பதிப்பித்த (1871) Folk Songs of South India என்னும் நூலில் பழம் பாடல்களை Folk Songs வரிசையில் சேர்த்திருந்தார். மக்கள் அன்றாடம் பின்பற்ற வேண்டிய நடைமுறைப் பழக்கங்களைக் கூறுவது என்ற உள்ளடக்க முறையில் ஆசாரக்கோவைப் பாடல்களும் இந்த நூலில் சேர்க்கப்பட்டிருந்தது. இது நாட்டார் தன்மையுடன் கூடியது என்று அவர் கணித்ததும் ஒரு காரணம். ஒரு பழந்தமிழ் நூலை நாட்டரியல் நூலோடு சேர்த்தது கண்டு பதிப்பின் தேவையை செல்வகேசவ முதலியார் உணர்ந்தார்.

பதிப்பித்த நூல்களின் சிறப்பு

ஆசாரக்கோவை

ஆசாரக்கோவை 1850ல் முதலில் அச்சாகியது. முதலில் இந்நூலைப் பதிப்பித்தவர் இதற்கு நச்சினார்க்கினியர் உரை செய்துள்ளார் என்கிறார்; இதுவே பழைய உரை என்றும் கூறுகிறார். இந்தக் கருத்தை முதலியார் மறுத்து இவ்வுரையை இயற்றியவர் யார் என்பது தெரியவில்லை ஆனால் இது பழைய உரை என்கிறார்.

ஆசாரக்கோவையை இவர் நீதி நூலாக மட்டும் கருதவில்லை சமூகப் பண்பாட்டில் நிலவிய பல பழக்கவழக்கங்களையும் நம்பிக்கைகளையும் தொகுத்த முதல் தொகுப்பாகவும் கருதினார். அதோடு பண்டை அரசினர் ஒப்புக்கொண்ட நடைமுறை வழக்கம் இவை என்றும் ஆசாரக்கோவை ஆசிரியர் கருதியதை இவர் சுட்டுகிறார். இப்பார்வையே இவரைப் பிற தமிழறிஞர்களிடமிருந்து பிரித்துக்காட்டுகிறதும்என்றாலும் முதலியாரின் உரை சில இடங்களில் பழைய உரையை ஒத்திருக்கிறது.

பழமொழி நானூறு

பழமொழி நானூறு நூலின் மூலத்தை முதலில் திருச்சி ஆறுமுகம் நயினார் பதிப்பித்திருக்கிறார் (1904). செல்வகேசவராயர் 1917இல் இரண்டாம் முறையாக இதைச் செம்பதிப்பாக வெளிக்கொண்டு வந்தார். முதலியாரின் தந்தை இந்நூலின் சுவடியைச் சேகரித்து வைத்திருக்கிறார். இந்நூல் பண்டை இலக்கியம், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று என்னும் பொதுத்தன்மையைத் தாண்டி சமூகச் சார்புடன் பார்த்து இதைப் பதிப்பித்திருக்கிறார். பழமொழி நானூறு பதிப்பில், இந்நூலாசிரியர் புராணங்கள், காவியங்களிலிருந்தும் பண்டை இலக்கியங்களிலிருந்தும் விஷயங்களை எடுத்துக்கொண்டுள்ளார் என்று கூறியதுடன் இவற்றைப் பட்டியலிட்டிருக்கிறார். பிற பிரதிகளில் காணப்படாத பாடல் ஒன்று முதலியாரின் பதிப்பில் உள்ளது. இப்பாடலை மூல ஏட்டிலிருந்தே பெற்றிருக்கிறார். பழமொழி நானூறு பதிப்பில் இவர் ஆங்கிலப் பழமொழிகளையும், அவற்றிற்குச் சமமான தமிழ் பழமொழிகளையும் கொடுத்திருக்கிறார். இப்பதிப்பில் பல பாடபேதங்களும் கூறுகிறார்.

முதுமொழிக்காஞ்சி

சங்கம் மருவிய காலத்தில் மக்களின் பண்பாடு அழியும் நிலையில் இருந்தபோது அதைப் பாதுகாத்து மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட நூல் முதுமொழிக்காஞ்சி. இதை 1919இல் முதலியார் பதிப்பித்துள்ளார். இந்த நூலிலும் சார்லஸ் கோவூர் தொகுத்த முதுமொழிக்காஞ்சிப் பாடல் பகுதிகளைக் கொடுத்துள்ளார்.

அறநெறிச் சாரம்

அறநெறிச் சாரத்தை முதலில் 1905லும் பின் செம்பதிப்பாக 1912லும் பதிப்பித்துள்ளார். இதற்குத் திருமயிலை சண்முகக் கவிராயரி தாள் பிரதியையும், சிங்காரவேலு முதலியாரிடம் ஓலைப்பிரதியையும், காஞ்சிபுரம் சமணர்கள் சிலரிடம் ஓலைப் பிரதிகளையும் பெற்றிருக்கிறார். இந்நூலின் முறைவைப்பைக் உறித்து எழுத முதலியாருக்கு அருங்கலச் செப்பு நூல் உதவியிருக்கிறது. இப்பதிப்பின்வழி வாக்கர் என்பவரால் அறநெறிச்சாரம், நீதிமொழித் திரட்டு என்னும் தலைப்பில் பதிப்பிக்கப்பட்ட செய்தியும், இதற்கு ஆங்கில மொழிபெயர்ப்பு இருந்ததும் தெரிகிறது.

உரைநடை நூல்கள்

செல்வகேசவராயர் எழுதிய உரைநடை நூல்கள் ராபின்சன் குருசோ (1915), திருவள்ளுவர் (1920), அபிநவக்கதைகள் (1921), வியாசமஞ்சரி அல்லது நற்புத்திபோதம் (1921), பஞ்சலட்சணம் (1922), ஜெயங் கொண்டானின் கலிங்கத்துப்பரணி, கதாசங்கிரதம் (1928), அக்பர் (1931), தமிழ் வியாசங்கள் (1945), கண்ணகி சரித்திரம் (1947), கம்ப நாடர், தமிழ்மொழி வரலாறு, குசேலர் சரித்திரம் ஆகியன.

தன் உரைநடையில் ஆங்கிலமொழியின் செல்வாக்கு உண்டு என்கிறார். "தான் கூறப்புகுந்த விஷயங்களுக்கேற்ப ஒருவனுடைய நடை ஒருநூலில் ஒருவிதமாயும் வேறொன்றில் வேறு ஒருவிதமாயும் இருக்கும்” என்பது இவரது கருத்து. இவரது மொழிநடை எளியது. வடமொழிச் சொற்களை இவர் வேண்டுமென்றே ஒதுக்கவில்லை. அபூர்வமாய்த் தன் சமகால வழக்கில் இல்லாத சொற்களையும் இவர் கையாண்டுள்ளார் (எ.கா. விற்பன்னர்).

ஆய்வாளர்

"தமிழிற்குக் கதி கம்பனும் திருவள்ளுவனும்” என்று கூறிய முதலியார் இருவரைப் பற்றியும் தனி நூல் எழுதியுள்ளார். இவை கல்லூரி மாணவர்களை மனதில் வைத்து எழுதப்பட்ட புத்தகங்கள். கம்ப நாடர் என்ற நூல் முதலில் 1909இல் வெளியானது. இதன் மறுபதிப்பு 1926இல் வந்தது. முதல் பதிப்பில் ஆங்கில முகவுரை உண்டு. கம்பரைப் பற்றியும் அவர் இயற்றிய ராமாயணம் பற்றியும் மாணவருக்கு விளக்கவே இந்நூல் எழுதப்பட்டதாக முதல் பதிப்பில் கூறுகிறார். நூறு பக்கமுள்ள சிறுநூல் இது. முதலியார் தொண்டைமண்டல சதகம், சோழ மண்டல சதகம், பாண்டி மண்டல சதகம், தமிழ் நாவலர் சரிதை என்னும் நூல்களிலிருந்தும் வாய்மொழியாகப் பேசப்பட்ட செய்திகளிலிருந்தும் கம்பரின் வாழ்க்கையை உருவாக்கியிருக்கிறார்.

முதலியார் கூறும் கம்பர் முழுமையானவரல்லர். உருவாக்கப்பட்டவர் தான். கம்பரின் காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டு என்ற இவரது கணிப்பைப் பின்னர் வந்த ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்ளுகின்றனர். கம்பர் வடமொழியை மட்டுமல்ல சூளாமணி, சிந்தாமணி திருக்குறள் எனப் பல தமிழ் நூல்களையும் ஆழ்ந்து படித்தவர் என்பதையும் ஆதாரபூர்வமாக இவர் இந்நூலில் கூறுகிறார்.

திருவள்ளுவரின் காலத்தையும் திறத்தையும் ஆராய்வது திருவள்ளுவர் என்ற நூல். முதலியாரின் கருத்துப்படி தொல்காப்பியரின் சமகாலத்தவர் வள்ளுவர். தமிழில் பண்டை நூல்களுக்கு எல்லாம் முற்பட்டது குறள் என்பது இவரது கருத்து. வள்ளுவர் வைணவர் என்பதற்கு இந்நூலில் ஆதாரம் காட்டுகிறார்.

பிற படைப்புகள்

கண்ணகியின் சரிதம், கலிங்கத்துப்பரணி கதா சங்கிரகம் ஆகிய இரண்டு நூல்களும் சிலப்பதிகாரம், கலிங்கத்துப் பரணி ஆகிய இரண்டு நூல்களின் சுருக்கம்தான். இரண்டுமே மாணவர்களுக்காக எழுதப்பட்டவை என்றாலும் கலிங்கத்துப் பரணியின் காலம் கலிங்கப்போர் நடந்த காலம் (கி.பி. 11ஆம் நூற்றாண்டின் கடைசிப் பகுதி) பற்றிய ஆய்வு இதில் உள்ளது. கண்ணகி சரித்திரம் என்ற நூலில் கண்ணகி கோவலனுடன் வான ஊர்தி ஏறிய இடம் சேலம் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு என்கிறார்.

வியாசமஞ்சரி என்ற கட்டுரைத் தொகுதியில் திமிரி சபாபதி முதலியார் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுதிய கட்டுரைகளை எளிய நடையில் தருகிறார். இது சிறுவர்களுக்காக எழுதப்பட்டது. காலையில் எழுதல், கடவுளைத் தொழுதல் கற்றல், சினேகம் செய்தல் என்னும் பல விஷயங்கள் பற்ற அறிவுரைகள் இந்நூலில் உள்ளன. முதலியாரின் அபிநவக் கதைகள் நூலில் கற்பலங்கார தனபாலன், கோமளம், சுப்பையர், கிருஷ்ணன், ஆஷாடபூதி என்னும் ஆறு கதைகள் உள்ளன. இதில் சுப்பையர் கதை சுவையானது. சென்னையில் ஒரு சந்தை தீப்பற்றிய போது ஒரு காணாமல் போய்விட்டான். நெருப்பில் இறந்துவிட்டான் என்று நினைத்து அவனது உறவினர்கள் உத்தர கிரியை நடத்திவிட்டனர். இதன் பிறகு சில நாட்கள் கழித்து அந்த ஆள் திரும்பிவந்தான். இதனால் வந்த விளைவைக் கதை வர்ணிக்கிறது.

”இராபின்சன் குருசோ” ஆங்கில நாவலின் சுருக்கத்தை முதலியார் மட்டுமல்ல வேறுசிலரும் வெளியிட்டிருக்கின்றனர். (குருசாமிப் பிள்ளையின் ராபின்சன் குருசோ). முதலியார் மாணவர்களின் நலன் கருதி இந்நூலை எழுதியதாக முதல் பதிப்பில் கூறுகிறார். இது பாடத்திட்டத்திலும் இருந்தது.

அக்பர் என்ற நூல் முகலாயச் சக்கரவர்த்தி அக்பரின் வரலாற்றைக் கூறுவது. இது நிகழ்ச்சித் தொகுப்பாக இருப்பதால் படிக்கத் தூண்டுவது. இந்நூல் அக்பரின் வரலாற்றை மட்டுமல்ல மொத்த முகலாய வரலாற்றையும் கூறுவது. பஞ்சலட்சணம் ஐந்திலக்கணங்களைக் கூறும் நூல். இதுவும் மாணவர்களுக்காக எழுதப்பட்டது.

படைப்புகள்

பதிப்பித்த நூல்கள்

  • ஆசாரக்கோவை (1893).
  • அறநெறிச்சாரம் (1905),
  • பழமொழி நானூறு (1917),
  • முதுமொழிக்காஞ்சி
  • லோபாக்கியானம்,
  • அரிச்சந்திர புராணம்

உரைநடை நூல்கள்

  • ராபின்சன் குருசோ (1915),
  • திருவள்ளுவர் (1920),
  • அபிநவக்கதைகள் (1921),
  • வியாசமஞ்சரி
  • நற்புத்திபோதம் (1921),
  • பஞ்சலட்சணம் (1922),
  • ஜெயங் கொண்டானின் கலிங்கத்துப்பரணி,
  • கதாசங்கிரதம் (1928),
  • அக்பர் (1931),
  • தமிழ் வியாசங்கள் (1945),
  • கண்ணகி சரித்திரம் (1947),
  • கம்ப நாடர்,
  • தமிழ்மொழி வரலாறு,
  • குசேலர் சரித்திரம்

பிற

  • தமிழிற்குக் கதி கம்பனும் திருவள்ளுவனும்
  • கலிங்கத்துப்பரணி கதா சங்கிரகம்
  • தனபாலன்,
  • கோமளம்,
  • சுப்பையர்,
  • கிருஷ்ணன்,
  • ஆஷாடபூதி

உசாத்துணைகள்

அ.கா. பெருமாள்: ”தமிழறிஞர்கள்” புத்தகம்


Template:Stub page