செயின்ட் ஜோசப் தமிழ்ப்பள்ளி

From Tamil Wiki
Revision as of 06:12, 1 October 2023 by Saalini (talk | contribs) (Created page with "செயின்ட் ஜோசப் தமிழ்ப்பள்ளி கோலாலம்பூரின் ஜாலான் செந்தூலில் அமைந்துள்ளது. இப்பள்ளி செயின்ட் ஜோசப் தேவாலய வளாகத்திலேயே அமைந்துள்ளது. இப்பள்ளி பகுதி அரசாங்க உதவி பெறும் பள்ள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

செயின்ட் ஜோசப் தமிழ்ப்பள்ளி கோலாலம்பூரின் ஜாலான் செந்தூலில் அமைந்துள்ளது. இப்பள்ளி செயின்ட் ஜோசப் தேவாலய வளாகத்திலேயே அமைந்துள்ளது. இப்பள்ளி பகுதி அரசாங்க உதவி பெறும் பள்ளியாகும். கோலாலம்பூரில் பெண்கள் மட்டுமே பயிலும் ஒரே தமிழ்ப்பள்ளி இதுவாகும்.

வரலாறு

1823ஆம் ஆண்டு முதலே இப்பள்ளி அதிகாரப்பூர்வமற்ற நிலையில் மரத்தடியில் இயங்கி வந்துள்ளது.  செந்தூல் வட்டாரத்தில் ரயில்வே ஊழியர்களின் குழந்தைகளுக்கு செயின்ட் ஜோசப் தேவாலய வளாகத்தின் மரத்தினடியில் கன்னியாஸ்திரிகள் தமிழ் மொழி கற்றுத் தந்தனர். 1912 இல் செயின்ட் ஜோசப் தேவாலயத்தின் ஒரு பகுதி தீயில் சேதமுற்றது. இத்தேவாலயத்தைச் சீரமைக்கும்போது, குழந்தைகள் கல்வி பயில சிறிய பள்ளி அமைக்கப்பட்டது. மறு ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை  அதிகரித்தது. பாதிரியார் பிராங்கோய்ஸ் லே மாஹேக் (Fr. Francois Le Mahec) தேவாலய நிர்வாகத்தையும் பள்ளி நிர்வாகத்தையும் கன்னியாஸ்திரிகளிடம் (sisters Of Holy Infant Jesus) ஒப்படைத்தார்.

முறையான தொடக்கம்

செயின்ட் ஜோசப் தமிழ்ப்பள்ளி 1924 இல் முறையாகத் தொடங்கியது. 1924 இல் செயின்ட் ஜோசப் தமிழ்ப்பள்ளியின் முதல் தலைமையாசிரியராக சிஸ்டர் மார்த்தா சவரிமுத்து பணியாற்றினார். இவரைத் தொடர்ந்து ஐந்து கன்னியாஸ்திரிகள் பள்ளியின் தலைமைப் பொறுப்பிலிருந்தனர்.

புதிய கட்டடம்

புக்கிட் நானாஸ் கான்வென்ட் மிஷன் அளித்த நன்கொடையைக் கொண்டு அத்தாப்புக் கூரையுடன் ஐந்து வகுப்பறைகளைக் கொண்ட பலகைக் கட்டடமாக செயின்ட் ஜோசப் தமிழ்ப்பள்ளி  அமைக்கப்பட்டது. இப்பள்ளி   ஜப்பானியர் ஆட்சியின்போது சிறிது சீரமைக்கப்பட்டது. 1942 இல் இப்பள்ளியில் ஜப்பானியமொழி போதிப்பது கட்டாயமாக்கப்பட்டது. 1945 இல் ஆங்கிலேயரின் ஆட்சியின்போது கன்னியாஸ்திரிகள் ஆண் மாணவர்களையும் இப்பள்ளியில் சேர்த்துக்கொண்டனர். ஆண் மாணவர்களைக் கட்டுப்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொண்டதால் அவர்களை வேறு பள்ளிக்கு மாற்றிவிட்டு பெண் மாணவர்களுக்கானப் பள்ளியாக மட்டுமே செயல்படத்தொடங்கியது.

மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், 1956 இல் ஆஸ்திரேலியன் கத்தோலிக் நிவாரண சேவையகத்தால் செந்தூல் மக்களின் நலனுக்காகத்  தேவாலய வளாகத்திலேயே  கட்டப்பட்ட  தொழிற்கல்வி பயிற்சி மையக் கட்டிடத்தின் ஒரு பகுதியைப் பயன்படுத்த  இப்பள்ளிக்கு அனுமதி வழங்கப்பட்டது. 1988 இல் கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட தலைமையாசிரியராக சரஸ்வதி பொறுப்பேற்றார். இன்றளவும் செயின்ட் ஜோசப் தமிழ்ப்பள்ளி பழைய பலகைக் கட்டிடத்திலேயே இயங்கி வருகின்றது.

தலைமையாசிரியர்கள் பட்டியல்

பெயர் ஆண்டு
சிஸ்டர் செயின்ட் மார்க் 1912 - 1924
சிஸ்டர் மார்த்தா சவரிமுத்து 1924 - 1938
சிஸ்டர் ஜீன் 1939 - 1948
சிஸ்டர் ஜீன் மேரி 1949 - 1953
சிஸ்டர் கிளமெண்ட் 1954 - 1959
சிஸ்டர் பிலோமினா 1960 - 1963
சிஸ்டர் அந்தோணியேட் 1963 - 1988
பி.சரஸ்வதி 1988 - 1997
எஸ்.சோதிநாயகி 1998 - 2004
ந.காவேரியம்மா 2004 - 2012
பா.வளர்மதி 2012 - 2019
க.ராஜேஸ்வரி பிப்ரவரி 2019 - செப்டம்பர் 2019
மா.மணியரசி 2019 - தற்போதுவரை