சூ. இன்னாசி

From Tamil Wiki
Revision as of 17:45, 14 March 2023 by ASN (talk | contribs) (Page Created; Para Added; Image Added;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பேராசிரியர், எழுத்தாளர் சூ. இன்னாசி

சூ. இன்னாசி (சூசையாப் பிள்ளை இன்னாசி; செப்டம்பர் 13, 1934) எழுத்தாளர். ஆய்வாளர். சொற்பொழிவாளர். தமிழ் அறிஞர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். இலக்கண, இலக்கியங்களை ஆராய்ந்து பல நூல்களை எழுதினார். தனது இலக்கிய முயற்சிகளுக்காகத் தமிழக அரசின் விருது பெற்றார்.

பிறப்பு, கல்வி

சூசையாப் பிள்ளை இன்னாசி என்னும் சூ. இன்னாசி, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வயலோகம் என்ற சிற்றூரில்,  செப்டம்பர் 13, 1934 அன்று, சூசையாப் பிள்ளை-லூர்தம்மாள் இணையருக்குப் பிறந்தார். திருமயம் சத்தியமூர்த்தி ஆரம்பப் பாடசாலையில் தொடக்கக் கல்வி கற்றார். உயர்நிலைக் கல்வியை தேவகோட்டை டிபிரிட்டோ உயர்நிலைப் பள்ளியில படித்தார். புதுக்கோட்டை அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றார். தொடர்ந்து பயின்று வித்துவான் பட்டம் பெற்றார். தமிழில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வீரமாமுனிவரின் ’சதுரகராதி’ பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் புலத்தில் ஆய்வு செய்து முது முனைவர் (D.Litt) பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

சூ. இன்னாசி புதுக்கோட்டை மாவட்டப் பள்ளிகளில் சில ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் முதுகலைப் பேராசிரியராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றினார். 1983-ல், சென்னைப் பல்கலைக்கழகக்தின் கிறித்தவத் தமிழ் இலக்கியத் துறையில் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பொறுப்பேற்றார். 1993-ல், பணி ஓய்வுக்குப் பின்னும் பணி நீட்டிக்கப்பட்டு 1999 வரைபணியாற்றி ஓய்வு பெற்றார். மனைவி செசிலி மேரி.

பேராசிரியர் சூ. இன்னாசி புத்தகங்கள்

இலக்கிய வாழ்க்கை

சூ. இன்னாசி, கல்லூரி இதழ்களிலும், இலக்கிய ஆய்விதழ்களிலும் இலக்கியம் சார்ந்து பல கட்டுரைகளை எழுதினார். சென்னைப் பல்கலைக் கழகம் மூலம் பல நூல்களை வெளியிட்டார். ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டம் பெற வழிகாட்டியாகவச் செயல்பட்டார். கிறிதத்தவத் தமிழ் இலக்கியம் தொடர்பான கலைக் களஞ்சியத்தை உருவாக்கினார். இலக்கணம், மொழியியல்,  அகராதி, மொழிபெயர்ப்பு, கவிதை, நாடகம், புதினம், சிறுகதை, இதழியல் என்று இலக்கியத்தின் பல களங்களில் செயல்பட்டார்.

சூ. இன்னாசி, இங்கிலாந்து, ஜெர்மன், பிரான்ஸ், இத்தாலி, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். அங்கு நிகழ்ந்த கருத்தரங்குகளில் உரையாற்றினார். சிங்கப்பூர், மலேசியாவில் ‘சைவம்’ குறித்துச் சிறப்புரையாற்றினார்.

எழுத்து

சூ. இன்னாசி எழுதிய ‘கவிதைச் செல்வம்’ என்ற களஞ்சிய நூலில், கிறித்தவ அந்தாதி, அம்மானை, ஆற்றுப்படை, உலா, கலம்பகம்,காப்பியம், கீர்த்தனை, கும்மி, குறவஞ்சி, சதகம், சிந்து, தூது, தொகுப்பு, நாடகம், பதிகம், பள்ளு, பிள்ளைத்தமிழ், புலம்பல், மாலைகள், வண்ணம், வழிபாட்டுப் பாடல்கள், வாழ்வியல் விவிலியம் என அகரவரிசைப்படி வகைப்படுத்தித் தொகுத்தார். நூல்களை எழுதியவர், எழுதப்பட்ட ஆண்டு, வெளியிட்ட பதிப்பகம் போன்ற செய்திகளும் அத்தொகுப்பில் இடம் பெற்றன. கிறித்த இலக்கியங்கள், கிறித்தவ இதழ்கள் மற்றும் கிறித்தவ இலக்கியப் படைப்பாளிகள் பற்றிய விவரங்களை நூல்களாகத் தொகுத்தார். சென்னைப் பல்கலைக்கழகம் அவற்றை வெளியிட்டது. சூ. இன்னாசி ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். ஆங்கிலத்திலும் சில நூல்களை எழுதினார்.

பதிப்புலகம்

சூ. இன்னாசி, பல நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார். அவற்றில் சில முதல் பதிப்புகளாகவும் வேறு சில மறுபதிப்புகளாகவும் உருவாக்கம் பெற்றன.

விருதுகள்

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் பரிசு - திருத்தொண்டர் காப்பியம் நூலுக்காக.

மறைவு

சூ. இன்னாசி எப்போது மறைந்தார் என்பது குறித்த சரியான தரவுகள் கிடைக்கவில்லை.

நினைவு

சூ. இன்னாசியின் நினைவாக அவர் பெயரில் அறக்கட்டளை ஒன்று தொடங்கப்பட்டது. அதன் மூலம் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சொற்பொழிவுகள் நிகழ்த்தப் பெறுகின்றன.

‘சூ. இன்னாசி நூல்களில் சமுதாய முன்னேற்றக் கருத்துக்கள்' என்ற தலைப்பில் மாணவி கி. தீபா. ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். இவர் படைப்புகளைப் பற்றி ஆய்வு செய்து மாணவர்கள் சிலர் முனைவர் பட்டம் பெற்றனர்.

ஆவணம்

தமிழிணையம் மின்னூலகத்திலும் ஆர்கைவ் தளத்திலும் சூ. இன்னாசியின் நூல்கள் சில சேகரிக்கப்பட்டுள்ளன.

இலக்கிய இடம்

கல்லூரி மாணவர்களுக்குப் பயன்படும் இலக்கண, இலக்கிய ஆய்வு நூல்கள் மட்டுமல்லாது பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளையும் சூ. இன்னாசி படைத்தார். தனது இலக்கிய முயற்சிகளுக்காக, கிறித்தவ இலக்கிய வளர்ச்சிக்குப் பங்களித்த எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை வரிசையில், சூ. இன்னாசி மதிப்பிடப் படுகிறார்.