being created

சு. குணசேகரன்

From Tamil Wiki
Revision as of 19:09, 1 May 2023 by Saalini (talk | contribs) (Created page with "thumb|316x316px சு. குணசேகரன் ஒரு மலேசிய எழுத்தாளர். இவர் கவிதை, சிறுகதை, கட்டுரைகள் எழுதியுள்ளார். இடைநிலைப்பள்ளியில் இலக்கியப்பாட வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பை வ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சு. குணசேகரன்.jpg

சு. குணசேகரன் ஒரு மலேசிய எழுத்தாளர். இவர் கவிதை, சிறுகதை, கட்டுரைகள் எழுதியுள்ளார். இடைநிலைப்பள்ளியில் இலக்கியப்பாட வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பை வழங்கியவர்.

பிறப்பு, கல்வி

சு. குணசேகரன்  ஜூலை 2, 1954இல் மலாக்காவிலுள்ள ஆயர் மோலேக்கில் சுருட்டையா - சுப்பம்மா இணையருக்குப் பிறந்தார். நான்கு சகோதரிகளும் நான்கு சகோதரர்களும் கொண்ட குடும்பத்தில் சு. குணசேகரன் நான்காவது பிள்ளையாவார்.

சு. குணசேகரன் தன் ஆரம்பக்கல்வியை புக்கிட் லிந்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தொடங்கினார். புக்கிட் லிந்தாங் தோட்டம் மலாயாவில் நிறுவப்பட்ட இரண்டாவது ரப்பர்த் தோட்டமாகும். சு. குணசேகரன் ஐந்தாம் படிவம்வரை மலாக்காவின் துன் துவா இடைநிலைப்பள்ளியில் பயின்றார். 1977 முதல் 1979 வரை ஸ்ரீகோத்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில்  பயிற்சி பெற்றார். மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் தொலைதூர பட்டப்படிப்பை மேற்கொண்டு இளங்கலைப்பட்டம் பெற்றார். 1999இல் இன்ஸ்டிடியூட் அமினுடின் பாக்கியில் பள்ளித் தலைமைத்துவப் பட்டயக்கல்வியை முடித்த பின்னர் 2000 - 2001இல் மலாயப் பல்கலைக்கழகத்தில் இடைநிலைப் பள்ளிகளுக்கான முதல்வர் துறைக்கல்வியில் முதுகலைப்பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

சு. குணசேகரன் 1974லிருந்து மூன்றாண்டுகள் ஜாசின் தமிழ்ப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். பயிற்சிக்குப்பின் ஜாசின், குபு தமிழ்ப்பள்ளிகளில் பணிபுரிந்தார். சு. குணசேகரன் 1988 முதல் 1991 வரை மலாக்காவிலுள்ள டைமன் ஜூபிலி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றார். 1992இல் மலாக்கா மெத்தடிஸ்ட் இடைநிலைப்பள்ளி, பின்னர் செயின்ட் டேவிட் இடைநிலைப்பள்ளிகளில் மாணவர் நலத்துணைத் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஆகஸ்ட் 1, 2013இல் பணிஓய்வு பெற்றார். 2008லிருந்து 2013 வரை மலாக்கா பொதுப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கு  இளங்கலைப் பயிற்சி விரிவுரையாளராகப் பணியாற்றினார். பணிஓய்வுக்குப்பின் மலாக்கா யயாசன் அனைத்துலகக் கல்லூரியில் பகுதிநேர விரிவுரையாளராக பணியாற்றினார்.

சு. குணசேகரன் சரஸ்வதியை நவம்பர் 11, 1979இல் மணம்புரிந்தார். இவர்களுக்கு மோகனஜோதி என்ற மகளும் செந்தில்நாதன் என்ற மகனும் உள்ளனர்.

இலக்கிய வாழ்க்கை

சு. குணசேகரன் 2.jpg

சு. குணசேகரன் 1980ஆம் ஆண்டு முதல் இளமணி எனும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதத் தொடங்கினார். சு. குணசேகரன் அறிவியல் பல்கலைக்கழகத்தில் மேற்கல்வியைத் தொடர்ந்தபோது, அப்போது அங்குப் பணியாற்றிக்கொண்டிருந்த பேராசிரியர் ரெ. கார்த்திகேசுவின் அறிமுகம் கிடைத்தது. இவரின் நட்பு சு. குணசேகரனின் இலக்கிய ஆர்வத்தை மேலும் வளர்த்தது. மலேசியாவின் மூத்தக் கவிஞர்கள் முரசு நெடுமாறன், பாதாசன் இருவரின் வழிகாட்டுதலும் சு. குணசேகரனின் கவிதை எழுதும்  திறனை வளம்பெறச் செய்தது.  2010இல் பட்டினத்துப்பூக்கள் எனும் கவிதை நூலை வெளியிட்டார். இவர் இயற்றிய ஏழு பாடல்களுடன் தென்றல் எனும் இசைக்குறுந்தட்டையும் வெளியீடு செய்துள்ளார்.

கல்விப்பணிகள்

  • 1983 – 1991    : ஆரம்பப் பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டத்தின் சிறப்புப் பயிற்றுனர்
  • 2003 – 2010    : இடைநிலைப்பள்ளித் தமிழ்மொழிக்கான சிறப்புப் பயிற்றுனர்
  • 2003 – 2013 : மலேசிய தேர்வுக்கழகத்தின் ஐந்தாம் படிவத் தமிழ்மொழிப் பாட வினாத்தயாரிப்புக்குழு உறுப்பினர்

பிற ஈடுபாடு

சு. குணசேகரன் படிவம் நான்கு, ஐந்து தமிழ் இலக்கியப்பாடத்தை மாணவர்களுக்கு இலவசமாக நடத்திவருகின்றார். மாணவர்களுக்கான சிறுகதை பயிலரங்குகளும் நடத்தி வருவதோடு தமிழ்மொழிப் பாடநூல்கள்,பயிற்சி நூல்களையும் தயாரித்துவருகின்றார். சு. குணசேகரன் தன்முனைப்புப் பேச்சாளராகவும் விளங்குகின்றார்.

கருத்தரங்குகள்

சு. குணசேகரன் தமிழ்மொழி தொடர்பான கருத்தரங்குகள், மாநாடுகளில் ஆய்வுக்கட்டுரைகளும் படைத்துள்ளார். 2015இல் தென்னாப்பிரிக்காவின் டர்பனிலுள்ள கவர்ஸ்தான் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழ்மொழிக்கற்றல் தொடர்பான பயிற்சி வழங்கினார். தமிழ்நாடு பழனியாண்டவர் மகளிர்க் கலைக்கல்லூரியில் முப்பெரும் பன்னாட்டுக் கருத்தரங்கில் 'மலேசியாவில் தமிழ்க்கல்வியும் பண்பாடும்' எனும் தலைப்பில் கட்டுரை சமர்ப்பித்தார். 2017இல் தமிழ்நாடு காரைக்குடி அழகப்பா கல்லூரிக் கருத்தரங்கில் 'மலாக்கா வரலாற்று மாநிலத்தில் மலாக்கா செட்டிகள் சமூகத்தின் வரலாறு, பண்பாடு, கலைகள்' எனும் கட்டுரையைப் படைத்தார். 2018இல் கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய தமிழ் மணிமன்ற மாநாட்டில் 'மலேசியாவில் ஆரம்ப, இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்மொழிக் கற்றலும் கற்பித்தலும் - நடைமுறைச் சிக்கல்களும்' என்ற கட்டுரையை வழங்கினார்.

இலக்கியச் செயல்பாடுகள்

சு. குணசேகரன் உறவுகளை நாடி ஒரு தமிழ்ப்பயணம் எனும் நூலை எழுதியுள்ளார். மொரிஷியஸ், தென் அமெரிக்காவுக்கு தான் மேற்கொண்ட பயணங்களின் அனுபவத் தொகுப்பாக இதனை எழுதியுள்ளார்.

சு. குணசேகரன் 3.jpg

மலாயப் பல்கலைக்கழக இந்திய ஆய்வுத்துறையும் தமிழ்நாட்டின் வானதி பதிப்பகமும் இணைந்து மலேசிய எழுத்தாளர்களின் நூல்களை வெளியீடு செய்தபோது மலாக்கா தமிழர் சங்கத்தின் மூத்த தலைவர் சமுதாயத்தொண்டர் தங்கசாமி குறித்த நூலை சு.குணசேகரன் எழுதியுள்ளார்.

பிப்ரவரி 27, 2022ல் மலேசியத்  தமிழ் மணிமன்றமும் மலேசியத் தமிழ் காப்பகமும் இணைந்து நடத்திய தேசிய அளவிலான மரபுக்கவிதை எழுதும் போட்டியின் ஏற்பாட்டுக்குழுச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.

சு. குணசேகரன் எழுதிய காலத்தை வென்ற கலாம் என்ற நூல் ஏப்ரல் 2, 2023ல் ஜெயபக்தி பதிப்பக மண்டபத்தில் வெளியீடு கண்டது.

கலைத்துறை

சு. குணசேகரன் பாடுவதில் ஆர்வம் கொண்டவர். 1978ல் சந்திரா சூர்யாவின் தயாரிப்பில் வெளியான 'பெந்தாஸ் வாரியா' எனும் கலைத்திறன் போட்டியில் முதல் பரிசை வென்றுள்ளார். இவர் தொடர்ந்து மலேசிய வானொலியின் தமிழ்ப்பிரிவில் ஒலிபரப்பான 'கலப்படம்' நிகழ்ச்சிகளிலும் கலைநிகழ்ச்சிகளிலும் பாடியுள்ளார். வானொலி நாடகங்களிலும் சு.குணசேகரன் நடித்துள்ளார்.

வானொலிப்பணி

சு. குணசேகரன் மலேசிய வானொலியின் மலாக்கா வட்டார ஒலிபரப்பில் பகுதிநேர அறிவிப்பாளராகவும் இருந்துவந்தார். சு. குணசேகரன் அதிகமாக விளையாட்டுச் செய்திப்பிரிவில் தன் பங்களிப்பை வழங்கியுள்ளார்.

பொது இயக்கம்

சு. குணசேகரன் மலாக்கா தமிழர் சங்கத்தின் துணைத்தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார்.

இலக்கிய இடம்

சு. குணசேகரன் இலக்கியப் பாடவளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பு செய்தவராக அறியப்படுகிறார்.

விருதுகள்

  • PJK  மலாக்கா மாநில அரசு விருது, 1988
  • PBB மலாக்கா மாநில அரசு  விருது, 1991
  • PKT மலாக்கா மாநில அரசு விருது, 2008
  • BCM மலாக்கா மாநில அரசு விருது, 2016  
  • ஆசிரியர் திலகம் மலாக்கா மாநிலக் கல்வி இலாகா 2018

நூல்கள்

  • பட்டினத்துப் பூக்கள் (கவிதைத் தொகுப்பு), 2010
  • தமிழ்ச் சமுதாயத் தொண்டர் மு.தங்கசாமி, கலைஞன் பதிப்பகம், 2016
  • மலேசியா, மொரிஷியஸ், தென்னாப்ரிக்கத் தமிழர்களின் சமூக, கலை, பண்பாட்டு உறவுப் பயணம் (பயண நூல்), 2017
  • தமிழ்நாடு சமூக உறவுப் பயணம் (பயண நூல்), 2017
  • காலத்தை வென்ற அப்துல் காலம், ஜெயபக்தி பதிப்பகம், 2023


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.