under review

சு. அர்த்தநாரீச வர்மா

From Tamil Wiki
Revision as of 11:09, 7 February 2024 by Boobathi (talk | contribs)
அர்த்தநாரீச வர்மா
சேலம் சு. அர்த்தநாரீச வர்மா

சு. அர்த்தநாரீச வர்மா, (சேலம் சு. அர்த்தநாரீச வர்மா;ராஜரிஷி அர்த்தநாரீச வர்மா;கவிச்சிங்கம் அர்த்தநாரீச வர்மா;வரகவி அர்த்தநாரீச வர்மா) (ஜூலை 27, 1874-டிசம்பர் 7, 1964) கவிஞர், எழுத்தாளர். பத்திரிகை ஆசிரியர், சமூகப் போராளி. சுதந்திரப் போராட்டங்களில் கலந்துகொண்டார். சமூகம், சமயம் சார்ந்து பல நூல்களை எழுதினார். பல இதழ்களை நடத்தினார்.

பிறப்பு, கல்வி

சு. அர்த்தநாரீச வர்மா, சேலத்தில் உள்ள சுகவனத்தில், சுகவன நாயகர்-இலக்குமி அம்மையார் இணையருக்கு மகனாகப் பிறந்தார். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஆரம்பக் கல்வி பயின்றார். மெட்ரிகுலேஷன் படிப்பை நிறைவு செய்தார். திருப்பூந்துருத்தி, இந்திரபீடத்தில் சைவக் கல்வி பயின்றார். சிவயோகி கரபாத்திர சுவாமிகளிடம் தீட்சை பெற்றார். தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சம்ஸ்கிருத மொழிகளைக் கற்றறிந்தார். சோதிடம், சித்த மருத்துவம், கர்நாடக இசை கற்றார்.

தனி வாழ்க்கை

சு. அர்த்தநாரீச வர்மா, பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார் என்று ‘வன்னிகுலமித்ரன்’ நான்காவது மலரிலும், திருமணமானவர் என்று ’சங்க காவியம்’ நூல் குறிப்பிலும், இரு முறை மணம் செய்து கொண்டவர் என்று க்ஷத்ரியன் இதழ்க் குறிப்பிலும் மாறுபட்ட தகவல்கள் காணப்படுகின்றன.

இலக்கிய வாழ்க்கை

சு. அர்த்தநாரீச வர்மா, தனது இளம்வயதில் விநாயகர் மீது கொண்ட பக்தியால், ’சுந்தர விநாயகர் பதிகம்’ என்ற நூலை இயற்றினார். 1909-ல் சேரமான் வரலாற்றை வெளியிட்டார். ‘ஸ்ரீ வன்னி வம்ஸப்ராகாசிகை’ என்னும் நூலை வெளியிட்டார். தொடர்ந்து பல நூல்களை எழுதினார்.

தமிழ் மன்னன் இதழ்

இதழியல்

சு. அர்த்தநாரீச வர்மா, 1912-ஆம் வருடம் சேலம் சுதேசாபிமானி அச்சுக்கூடத்தில் மேலாளராகப் பணியாற்றினார். அச்சுத் தொழிலில் தேர்ந்தவரானார். வன்னிய குல மக்களுக்கு ஒழுக்கமும் அறிவுரைகளும் கற்பிக்கும் செய்யுள்களும் கட்டுரைகளும் எழுதினார். ’வன்னியர் அல்லது தமிழ்நாட்டு சத்திரியர்' எனும் நூல் வெளிவரக் காரணமானார். தொடர்ந்து ’க்ஷத்ரியன்’ என்ற இதழுக்கு ஆசிரியராகப் பணியாற்றினார். அது நின்று போன பின், ‘க்ஷத்ரிய சிகாமணி' என்ற இதழுக்கு ஆசிரியரானார். ‘வீரபாரதி' என்னும் காங்கிரஸ் ஆதரவு வாரம் மும்முறை இதழைத் தொடங்கி நடத்தினார். பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறையால் அவ்விதழ் நின்று போனது. பின் பல ஆண்டுகளுக்குப் பின், 1959-ல், தனது 85-ஆம் வயதில் ’தமிழ் மன்னன்’ என்ற இதழை ஆரம்பித்து நடத்தினார்.

க்ஷத்ரியன் இதழ்

கோயமுத்தூரைச் சேர்ந்த பூபதி பழனியப்ப நாயகர், அர்த்தநாரீச வர்மாவை ஆசிரியராகக் கொண்டு ’க்ஷத்ரியன்’ இதழைத் தொடங்கினார். வன்னியர் என்றழைக்கப்படும் தமிழ்நாட்டு க்ஷத்ரிய குலத்தின் முன்னேற்றத்திற்காக இவ்விதழ் தொடங்கப்பெற்றது. சு. அர்த்தநாரீச வர்மா, பூபதி பழனியப்ப நாயகரின் மறைவுக்குப் பின் 'க்ஷத்ரியன்' இதழை, வார இதழாக்கி 1923 முதல் 1941 வரை நடத்தினார். பொருளாதாரப் பிரச்சனையால் இதழ் நின்று போனது. பத்தாண்டுகளுக்குப் பின் 1951 முதல் அவ்விதழ் மீண்டும் வெளிவந்தது. க்ஷத்ரியன் இதழ் 17 தொகுப்புகளாக வெளிவந்துள்ளது. (க்ஷத்ரியன்)

பாரதி மீது இரங்கற்பா

சு. அர்த்தநாரீச வர்மா, பாரதியார் இறந்த போது, அவருக்கு சுதேசமித்திரன் இதழில் இரங்கற்பா எழுதினார்.

இடியோறு எதிர்ந்து படவர வென்னச்
செந்தமிழ் மாது நொந்து வருந்தவும்
இசைத்தமிழ் வாணர் அசையா தழுங்கவும்
நேற்று நின்னுடலுயிர் வேற்றுமை கண்ட
கூற்றுவ னென்னும் மாற்றலன் நின்னுயிர்
பருகின னன்றி யுருகின னின்றே
தமிழ்ச்சுவை யின்பஞ் சற்று மறியான்
அமிழ்தின் றேறல் அதுவென வறியான்
ஒப்பிலா பாரதி சுப்பர மணியநின்
நாட்டுப் பாட்டின் நலஞ்சிறி துணரான்
கண்ணன் பாட்டின் கருத்தைத் தேறான்
வீரச் சுவையதில் விளங்குவ துணர்கிலான்
நேர மின்னும் நெருங்கிலை யுண்டான்
நினைக்க நினைக்க நெட்டுயிர்ப் பெடுக்கும்
வினைவிளை காலம் வேறில்லை
பினையும் பிறப்பாய் பெறுவாய் பணியே!

அரசியல் பணிகள்

சுதந்திரப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட சு. அர்த்தநாரீச வர்மா, 1907-ல், சேலத்தில், ஸ்ரீ கழறிற்றறிவார் சபையை நிறுவினார். கழறிற்றறிவார் சபை மூலம் சிவனடியார்களை ஆதரித்தார். ஆர்வமுள்ள இளைஞர்களைக் காங்கிரஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்த்தார். இச்சபை சேலம் மாவட்ட வன்னிய குல க்ஷத்திரிய சங்கமாகவும் செயல்பட்டது. தனது இதழ்களில் ஆங்கில அரசாட்சிக்கு எதிராகவும், காந்தியின் இயக்கத்தை ஆதரித்தும் பல கட்டுரைகளை, கவிதைகளை எழுதினார். 1934-ல், திருவண்ணாமலைக்கு காந்தி வந்த போது, மக்கள் சார்பில் பாராட்டுப் பத்திரம் வழங்கி, காந்தியின் பணிகளை ஆதரித்தார். டாக்டர் வரதராஜுலு நாயுடு நடத்திய குருகுலப் போராட்டத்தை எதிர்த்து வ.வே.சு. ஐயருக்கு ஆதரவாக அர்த்தநாரீச வர்மா செயல்பட்டார். மதுவிலக்கை வலியுறுத்தி, தமிழகம் முழுதும் பிரசாரம் செய்தார். சுதந்திரப் போரில் பல இளைஞர்களை ஊக்குவித்து ஈடுபடுத்தினார்.

சு. அர்த்தநாரீச வர்மா நினைவிடம்

மறைவு

சு. அர்த்தநாரீச வர்மா உடல் நலக் குறைவால் டிசம்பர் 7, 1964 அன்று, தனது 90- ஆம் வயதில் காலமானார். அவரது சமாதி திருவண்ணாமலை ஈசான்ய மடத்தின் அருகே அமைந்துள்ளது.

ஆவணம்

சு. அர்த்தநாரீச வர்மாவின் வாழ்க்கையை த. பழமலய் (உ. பலராமனுடன் இணைந்து), முனைவர் அ.ம. சத்தியமூர்த்தி, கவிஞர் சக்தி உள்ளிட்ட சிலர் நூல்களாக எழுதி ஆவணப்படுத்தியுள்ளனர். சு. அர்த்தநாரீச வர்மாவின் நூல்கள் சில மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளன. சு. அர்த்தநாரீச வர்மா நடத்திய ஷத்ரியன் இதழ்கள் முழு தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது. அர்த்த நாரீச வர்மா நடத்திய வீரபாரதி இதழ் தொகுப்பாக வெளிவந்துள்ளது.

நினைவு

சு. அர்த்தநாரீச வர்மாவின் வாழ்க்கை ஆவணப்படமாக வெளிவந்துள்ளது. ‘கவிச்சிங்கம் ராஜரிஷி தியாகி சு. அர்த்தநாரீச வர்மா பண்பாட்டுப் பேரவை' என்ற அமைப்பு பல நற்பணிகளை முன்னெடுக்கிறது. ’தேசியகவி இராஜரிஷி அர்த்தநாரீச வர்மா’ என்ற அறக்கட்டளை அமைப்பு இயங்கி வருகிறது.

வரலாற்று இடம்

தேசபக்தியும் தெய்வபக்தியும் கொண்டு சமூக உயர்வுக்கு உழைத்தவர் அர்த்தநாரீச வர்மா. குறிப்பாக வன்னிய குல மக்களின் வாழ்க்கை உயர்வுக்காகப் பாடுபட்டார். அதற்காகப் பல நூல்களை எழுதினார். வன்னிய குலத்தின் சிறப்பை, வரலாற்றைப் பல நூல்களாக எழுதினார். “அர்த்தநாரீசுவர வர்மா அவர்கள் தம் பெருஞ்செல்வத்தை தரும மார்க்கத்தில் மக்களை உயர்த்துவதற்காகச் செலவிட்டு மிகப்பெரும் பணி செய்து வந்தார். தாழ்ந்தவர்களை உயர்த்துவது சமூகச் சீர்திருத்தம்; உயர்ந்தவர்களைத் தாழ்த்துவது சமூகப் பணியல்ல என்பதை நன்கு உணர்ந்த மகான். அடக்கத்தையும், தெய்வ பக்தியையும் சத்திய வாழ்க்கையையும் பெரிதாக மதித்த ஒருவர்” என்று ராஜாஜி, அர்த்தநாரீச வர்மாவின் மறைவின்போது குறிப்பிட்டார்.

சு. அர்த்தநாரீச வர்மா நூல்கள்

நூல்கள்

  • சங்க மகா காவியம்
  • அரசர் குல ஆச்சாரச் சிந்து
  • கதர் பாட்டு
  • கரிகாற் சோழன்
  • குலத்து உபதேசம்
  • குலமாதர் கொப்பிப் பாட்டு
  • மதுவிலக்குச் சிந்து
  • ஸ்ரீவன்னி குலோத்கர்ஷ தீபிகை
  • ஷத்ரிய சூடாமணி
  • ஷத்ரிய தீபம்
  • சம்புவராயர் வரலாறு
  • சாணார் வரலாறு
  • சாதி சங்கிரக சாரம்
  • ஜாதி பேதங்கள்
  • செய்தித் திரட்டு
  • படையாட்சிப் பாட்டு
  • பத்து உபதேசங்கள்
  • பள்ளியர் பரத்துவம்
  • வாலிபர் கீதம்
  • மன்னர் குல வாலிபர் கீதம்
  • கொடிப்பாட்டு
  • மழவரோதயம்
  • ஒற்றுமைப் பாடல்
  • மாணவரில்ல மணிமாலை
  • ஸ்ரீ வன்னி வம்ஸ ப்ரகாசிகை
  • வன்னியர் அல்லது தமிழ்நாட்டு ஷத்ரியர்
  • பராசர ஸ்மிருதி (மூலமும் உரையும்)
  • பகவத் கீதா விலாசம்
  • ஜாதி தத்வ நிரூபணம்
  • லோகாந்தரம்
  • ஜீவனும் ஈசனும்
  • விதிமதி விளக்கம்

உசாத்துணை


✅Finalised Page