being created

சுரேஷ்குமார இந்திரஜித்

From Tamil Wiki

This page is being created by muthu_kalimuthu

சுரேஷ்குமார இந்திரஜித்

சுரேஷ்குமார இந்திரஜித், தமிழ் சிறுகதை, நாவல், குருங்கதைகள் எழுத்தாளர். கட்டுரைகள், மதிப்புரைகள் எழுதுபவர்.

வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு, கல்வி

இயற்பெயர் என். ஆர். சுரேஷ்குமார். பிறந்த ஊர் இராமேஸ்வரம். பள்ளிப்படிப்பை முடித்தபின் மதுரைக்கு குடிபெயர்ந்தார். பியூசியை மதுரை நாகமலையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் படித்தார். இளங்கலை பொருளாதார பட்டப்படிப்பு மஜுரா கல்லூரியில். அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

தனி வாழ்க்கை

1979 முதல் எழுதி வருகிறார். தமிழக அரசில் தாசில்தாராக பணியாற்றி ஓய்வு பெற்றார். எழுத்து தவிர இசையில் மிகுந்த ஆர்வம் உடையவர். மணி அய்யர் பாடல்கள் அவருக்கு மிகவும் பிடித்தவை. 1983ல் திருமணம் ஆயிற்று. இரண்டு பெண் குழந்தைகள்.

பங்களிப்பு

இலக்கியம்

இளம் வயதில் ‘சந்திப்பு’ என்ற பெயரில் 1986ல் கூட்டங்கள் நடத்தியிருக்கிறார். முதல் கூட்டத்தில் ராஜமார்த்தாண்டனும் இரண்டாவது கூட்டத்தில் இவரும் பேசியுள்ளனர். சு.ரா. கலந்து கொண்ட பெரிய கூட்டமும் நடைபெற்றது. மாதத்தில் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த கூட்டங்கள் நடைபெற்றன.

80க்கும் மேற்பட்ட சிறுகதைகள், மற்றும் இரண்டு நாவல்கள் எழுதியுள்ளார். கொரோனா காலத்தில் சுமார் அறுபது குறுங்கதைகள் எழுதியுள்ளார். இவர் அதிகமாக எழுதிக் குவிக்கும் எழுத்தாளர் ரகமல்ல. ரொம்பவும் நிதானமாக இயங்கும் நவீன படைப்பாளி.

இவரது படைப்புலகத்துடன் உறவு கொள்ளும் எந்தவொரு தேர்ந்த வாசகரும் அவரவர் வாசிப்பு அனுபவம் சார்ந்து படைப்பனுபவங்களை வாசக அனுபவங்களாக தள மாற்றம் செய்ய முடியும்.

தன்னுடைய சிறுகதைக்கான களங்களாக ஆசிரியர் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பது பெரும்பாலும் காமமும் ஆண் பெண் உறவுகளின் சிக்கல்களும் தான். இதற்கு அப்பால் ஒரு உயர்ந்த கலைஞனின் நுண்ணுணர்வு காரணமாக நிராகரிக்கவே முடியாத சமூக அவலங்களும் அவருடைய சிறுகதைகளில் இடம்பெற்றுள்ளன.

ஜெயமோகன் ‘இடப்பக்க மூக்குத்தி’ தொகுப்பின் வெளியீட்டின்போது சுரேஷ்குமார இந்திரஜித் வரைபடம் மட்டுமே அளிக்கிறார், வாசகரே பயணித்து தங்களது இலக்குகளை அடைய வேண்டும், என்று கூறியுள்ளார்.

விருது

2020 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருது சுரேஷ்குமார இந்திர ஜித்துக்கு வழங்கப்பட்டது.

இலக்கிய இடம்

மிகக் குறைந்த சொற்களில் தன்னுடைய புனைவை வடிவமைத்துக் கொள்வது அவருடைய எழுத்து முறை. மற்ற எந்த வகையான பொதுமைப்படுத்தல்களையும் இவருடைய படைப்புலகில் நாம் காணமுடியாது. எல்லா வகையான கதை சொல்லும் முறைகளையும் தன்னுடைய சிறுகதைகளில் வெற்றிகரமாக அவர் கையாண்டிருக்கிறார். இது அவருடைய தனித்துவங்களில் ஒன்று. தமிழில் உருவாகியுள்ள எந்த படைப்பாளி வரிசையிலும் அவரை அத்தனை சுலபமாக பொருத்த முடியாது. அபாரமான அங்கதம் வெளிப்படும் சில கதைகள் உண்டு.

சுரேஷ்குமார இந்திரஜித்தின் அசலான பங்களிப்பு சிறுகதைகளில் தான். சிறுகதைகளின் எல்லையை முன்னகர்த்தியவர் என தயங்காமல் சொல்ல முடியும். நில காட்சியோ  புற விவரணையோ அற்ற கதை கூறும் முறை. மரபின் பின்புலம் மிக அரிதாகவே  வெளிப்படும். அவருடைய தத்துவ தளம். இருத்தலியல் சார்ந்தது.   கவித்துவமான படிமங்களும் மிக அரிதாகவே கையாளப்படும். உணர்ச்சிகரமான பயன்பாடுகள் நாடகீய உச்சங்கள் போன்றவையும் அவருடைய கதைகளில் அரிதுதான். எல்லைகள் என உள்ளவையே அவருடைய தனித்தன்மையாகவும் திகழ்கின்றன. கதைகூறு முறையில் இயல்பான இடைவெளிகளின் வழியாக அகத்தின் உள்ளே புதைந்திருப்பதை அவருடைய கதைகள் சுட்டிக்காட்டுபவை.

நூல் பட்டியல்

நாவல்கள்

  • கடலும் வண்ணத்துப்பூச்சியும்
  • அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்

சிறுகதை தொகுப்புகள்

  • அலையும் சிறகுகள்
  • மறைந்து திரியும் கிழவன்
  • மாபெரும் சூதாட்டம்
  • அவரவர் வழி
  • நானும் ஒருவன்
  • நடன மங்கை
  • நள்ளிரவில் சூரியன்
  • பின்நவீனத்துவவாதியின் மனைவி
  • பின்னணிப் பாடகர்

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.