under review

சுரேஷ்குமார இந்திரஜித்

From Tamil Wiki
சுரேஷ்குமார இந்திரஜித்

சுரேஷ்குமார இந்திரஜித் (அக்டோபர் 5, 1953) தமிழில் எழுதி வரும் எழுத்தாளர். சிறுகதை, நாவல், குறுங்கதைகள், கட்டுரைகள், மதிப்புரைகள் எழுதி வருகிறார். ஆண் பெண் உறவுகளின் சிக்கல்கள், காமம், சமூக அவலங்கள் குறித்த கதைக்களங்களில் எழுதி வருபவர்.

பிறப்பு, கல்வி

சுரேஷ்குமார இந்திரஜித்

இயற்பெயர் என்.ஆர். சுரேஷ்குமார். சுரேஷ்குமார இந்திரஜித் ராமேஸ்வரத்தில் ராமநாதன், காந்திமதி இணையருக்கு அக்டோபர் 5, 1953-ல் பிறந்தார். பள்ளிப்படிப்பை முடித்தபின் மதுரைக்கு குடிபெயர்ந்தார். மதுரை நாகமலையில் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் புதுமுக வகுப்பு பயின்றார். மதுரை மஜுரா கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

சுரேஷ்குமார இந்திரஜித் 1983-ல் மல்லிகாவை திருமணம் செய்து கொண்டார். அபிநயா, ஶ்ரீஜனனி என இரு மகள்கள். தமிழக அரசில் தாசில்தாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கர்நாடக சங்கீதம் ரசனையுள்ளவர்.

இலக்கிய வாழ்க்கை

அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும் நாவல்

சுரேஷ்குமார இந்திரஜித் 1979 முதல் சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது முதல் தொகுப்பு 'அலையும் சிறகுகள்’ 1982-ல் வெளியானது.எழுத்தாளர் ஜெயகாந்தன் கதைகள் வழி புனைவுலகம் அறிமுகம் பெற்றார். 1986-ல்'சந்திப்பு’ என்ற பெயரில் மாதத்தில் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைகளில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தினார். முதல் கூட்டத்தில் ராஜமார்த்தாண்டனும், இரண்டாவது கூட்டத்தில் இவரும் பேசியுள்ளனர். சு.ரா. கலந்து கொண்ட பெரிய கூட்டமும் இதன் மூலம் நடைபெற்றது. 80-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் இரு நாவல்களையும் எழுதியுள்ளார். கொரோனா ஊரடங்கு காலத்தில் அறுபது குறுங்கதைகள் எழுதியுள்ளார். தொடர்ந்து சிறுகதை, நாவல், குறுங்கதைகள், கட்டுரைகள், மதிப்புரைகள் எழுதி வருகிறார்.

இலக்கிய இடம்

கடலும் வண்ணத்துப்பூச்சிகளும் நாவல்

இவரது படைப்புலகத்துடன் உறவு கொள்ளும் எந்தவொரு தேர்ந்த வாசகரும் அவரவர் வாசிப்பு அனுபவம் சார்ந்து படைப்பனுபவங்களை வாசக அனுபவங்களாக தள மாற்றம் செய்ய முடியும். தன்னுடைய சிறுகதைக்கான களங்களாக ஆசிரியர் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பது பெரும்பாலும் காமமும், ஆண் பெண் உறவுகளின் சிக்கல்களும்தான். இதற்கு அப்பால் ஒரு உயர்ந்த கலைஞனின் நுண்ணுணர்வு காரணமாக நிராகரிக்கவே முடியாத சமூக அவலங்களும் அவருடைய சிறுகதைகளில் இடம்பெற்றுள்ளன.

மிகக் குறைந்த சொற்களில் தன்னுடைய புனைவை வடிவமைத்துக் கொள்வது அவருடைய எழுத்து முறை. மற்ற எந்த வகையான பொதுமைப்படுத்தல்களையும் இவருடைய படைப்புலகில் காணமுடியாது. எல்லா வகையான கதை சொல்லும் முறைகளையும் தன்னுடைய சிறுகதைகளில் வெற்றிகரமாக அவர் கையாண்டிருக்கிறார். இது அவருடைய தனித்துவங்களில் ஒன்று. தமிழில் உருவாகியுள்ள எந்த படைப்பாளி வரிசையிலும் அவரை அத்தனை சுலபமாக பொருத்த முடியாது. அபாரமானஅங்கதம் வெளிப்படும் சிலகதைகள்உண்டு.

சுரேஷ்குமார இந்திரஜித்தின் அசலான பங்களிப்பு சிறுகதைகளில்தான். சிறுகதைகளின் எல்லையை முன்னகர்த்தியவர். நிலக் காட்சியோ,புற விவரணையோ அற்ற கதை கூறும் முறை. மரபின் பின்புலம் மிக அரிதாகவே வெளிப்படும். அவருடைய தத்துவ தளம், இருத்தலியல்சார்ந்தது. கவித்துவமான படிமங்களும் மிக அரிதாகவே கையாளப்படும். உணர்ச்சிகரமான பயன்பாடுகள், நாடகீயஉச்சங்கள் போன்றவையும் அவருடைய கதைகளில் அரிதுதான். எல்லைகள்எனஉள்ளவையே அவருடைய தனித்தன்மையாகவும் திகழ்கின்றன. கதைகூறுமுறையில்இயல்பான இடைவெளிகளின் வழியாகஅகத்தின்உள்ளே புதைந்திருப்பதை அவருடைய கதைகள்சுட்டிக்காட்டுபவை.

ஜெயமோகன் 'இடப்பக்க மூக்குத்தி’ தொகுப்பின் வெளியீட்டின்போது 'சுரேஷ்குமார இந்திரஜித் வரைபடம் மட்டுமே அளிக்கிறார், வாசகரே பயணித்து தங்களது இலக்குகளை அடைய வேண்டும்' என்று கூறியுள்ளார்.

விருது

  • 2020-ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருது
  • 2023 ஆம் ஆண்டுக்கான மா.அரங்கநாதன் விருது

நூல் பட்டியல்

நாவல்கள்
  • கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்
  • அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்
  • ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி
சிறுகதை தொகுப்புகள்
  • அலையும் சிறகுகள்
  • மறைந்து திரியும் கிழவன்
  • மாபெரும் சூதாட்டம்
  • அவரவர் வழி
  • நானும் ஒருவன்
  • நடன மங்கை
  • நள்ளிரவில் சூரியன்
  • பின்நவீனத்துவவாதியின் மனைவி
  • பின்னணிப் பாடகர்
  • இடப்பக்க மூக்குத்தி
  • ஒரு பெண் ஒரு சிறுவன் - இரண்டு கதைகள்

இணைப்புகள்


✅Finalised Page