under review

சி.மாசிலாமணி

From Tamil Wiki
Revision as of 10:55, 13 June 2023 by Madhusaml (talk | contribs) (Finalised)

சி.மாசிலாமணி (Rev. C. Masillamani) (1833-10 ஆகஸ்ட் 1898) கிறிஸ்தவ போதகர், கவிஞர், எழுத்தாளர். நாகர்கோயில் வட்டாரத்தில் லண்டன் மிஷன் அமைப்பின் போதகராக மதப்பணி ஆற்றினார்.

பிறப்பு, கல்வி

மாசிலாமணி நாகர்கோயிலை அடித்த மைலாடி என்னும் ஊரில் 1833ல் பிறந்தார். அவருடைய தாத்தா மகாராஜன் வேதமாணிக்கம் போதகர் ரிங்கல்தௌபேயால் குமரிமாவட்டத்தில் முதன்முதலாக சீர்திருத்தக் கிறிஸ்தவத்திற்கு மாற்றப்பட்டவர். சி.மாசிலாமணிக்கு 25 மே 1851ல் ரெவெ.சார்ல்ஸ் மால்ட் (Revd. Charles Mault) திருமுழுக்கு அளித்தார். சார்ல்ஸ் மால்ட் ராபர்ட் கால்ட்வெல்லின் மனைவியின் தந்தை.

மாசிலாமணி நாகர்கோயில் லண்டன்மிஷன் குருத்துவப் பள்ளியில் 1844 முதல் 1852 வரை மதக்கல்வி பயின்றார். 13 பெப்ரவரி 1866ல் குருத்துவப் பட்டம் பெற்றார். குருத்துவப்பட்டம் பெற்ற முதல் அணி இந்தியர்களில் அவரும் ஒருவர்.

தனிவாழ்க்கை

மாசிலாமணி எஸ்தர் ஃபேன்னி பரமானந்தத்தை 19 மார்ச் 1855ல் மணர்ந்தார். எஸ்தர் நாகர்கோயில் ஹோம் சர்ச்சின் முதல் இந்திய டீக்கனாக இருந்த டேனியல் பரமானந்தத்தின் மகள். எஸ்தர் 1870 மறைந்தார். மாசிலாமணி எஸ்தரின் தங்கை ஜோகொபெட் ஃபேன்னி பரமானந்தத்தை 1872ல் மணந்தார். அவர்களுக்கு பத்து குழந்தைகள். புகழ்பெற்ற கிறிஸ்தவ வரலாற்றாசிரியரான சி.எம் ஆகூர் அவர்களில் ஒருவர்.

மதப்பணி

மாசிலாமணி பூதப்பாண்டி அருகே டென்னிஸ்புரம் என்னும் ஊரில் 1866 முதல் 1886 வரை போதகராக பணிபுரிந்தார். மாசிலாமணி லண்டன் மிஷன் அமைப்புடன் கருத்துவேறுபாடு கொண்டு 1886ல் போதகர் பணியை உதறி சென்னையில் குடியேறினார். ஆன்மிகநூல் வெளியீட்டகம், அமெரிக்கா ( Scriptural Publication Society, Yarmouth, Maine, U.S.A)வின் முகவராக பணியாற்றினார். மைலாடியின் ஜான் பார்மர் போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றினார்.

இலக்கியப்பணி

மாசிலாமணி தொடர்ச்சியாக வரலாறு, மதம், சமூகப்பதிவுகள் ஆகிய களங்களில் கட்டுரைகளும் நூல்களும் எழுதி எழுதினார். 316 கட்டுரைகள் அவர் எழுதியதாக ஆய்வாளர் பாபு மனோகரன் குறிப்பிடுகிறார். தமிழில் 59 கவிதைநூல்களை எழுதியிருக்கிறார். சிலுவைத்தியானம், தேவாரப்பெட்டி, ஆத்மநிவேதனம் கிறிஸ்துவே சமஸ்தமும், ஜீவாமிர்தகாரம், திருச்சிலுவை அந்தாதி, ஞானாமிர்தச் சுனை போன்றவை குறிப்பிடத்தக்க படைப்புகள். பிராமணர்களின் ஆதிக்கத்தை மறுக்கும் பிராமணத்துவ நிராகரணம் போன்ற பூசல்நூல்களையும் எழுதியிருக்கிறார். கிறிஸ்தவ தத்துவங்களை விளக்கும் சத்திய பிரகாசிகை என்னும் 622 பக்கம் கொண்ட அவருடைய பெரியநூல் 1892ல் வெளியாகியது. மாசிலாமணி கிறிஸ்தவ இதழ்கள் பலவற்றை நடத்தினார். அவருடைய பெரும்பாலான எழுத்துக்கள் அவர் நடத்திய இதழ்களில் வெளிவந்தன.

மறைவு

1898ல் மாசிலாமணி திருவனந்தபுரம் திரும்பி அங்கே லண்டன் மிஷன் ஆலயத்தில் உரையாற்றினார். அங்கிருந்து நாகர்கோயிலுக்கு செல்லும் வழியில் 10 ஆகஸ்ட் 1898ல் மறைந்தார். அவருடைய உடல் லண்டன்மிஷன் ஹோம் சர்ச் கல்லறைத்தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

நூல்கள்

  • சிலுவைத்தியானம்
  • தேவாரப்பெட்டி
  • ஆத்மநிவேதனம்
  • கிறிஸ்துவே சமஸ்தமும்
  • ஜீவாமிர்தகாரம்
  • திருச்சிலுவை அந்தாதி
  • ஞானாமிர்தச் சுனை
  • பிராமணத்துவ நிராகரணம்
  • சத்திய பிரகாசிகை

வரலாற்று இடம்

குமரிமாவட்டத்தில் சீர்திருத்த கிறிஸ்தவம் வேரூன்ற பாடுபட்ட முன்னோடி போதகர். கிறிஸ்தவ இலக்கியத்திலும் மதசிந்தனையிலும் பங்களிப்பாற்றியவர்

உசாத்துணை


✅Finalised Page