under review

சி.பி. ஞானமணி

From Tamil Wiki
Revision as of 15:53, 8 July 2023 by Madhusaml (talk | contribs)
சி.பி. ஞானமணி

சி.பி. ஞானமணி (ரெவரண்ட் சி.பி. ஞானமணி; பரமசகாயம் ஞானமணி; சி.பி. ஞானமணி ஐயர்; மே 29, 1868 - அக்டோபர் 22, 1922) கிறித்தவ மத போதகர். கவிஞர். இறையியல் சிந்தனையாளர். திருநெல்வேலி, சென்னை, குன்னூர், திருச்சி என்று தமிழகத்தின் பல இடங்களில் ஆயர் பணியாற்றினார். இயேசு கிறிஸ்து மீது பல கீர்த்தனைகளை இயற்றினார். ‘அன்பே பிரதானம் சகோதர அன்பே பிரதானம்’ என்னும் ஞானமணியின் கீர்த்தனை புகழ் பெற்ற ஒன்று.

பிறப்பு, கல்வி

சி.பி. ஞானமணி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிருபாபுரத்தில், மே 29, 1868 அன்று வச்சிரமணி கிறிஸ்தியான் உபதேசியார் - சங்கை வடிவு இணையருக்குப் பிறந்தார். பள்ளிக் கல்வியை தமிழகத்திலும், இலங்கையிலும் கற்றார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள சர்ச் மிஷனரி சன்மார்க்க மிஷனரிகளால் நடத்தப்பட்டு வந்த இறையியல் பள்ளியில் சேர்ந்து பயின்று இறையியல் (Lincontiate in Theology) பட்டம் பெற்றார். 1900 ஆம் ஆண்டு குருப் பட்டம் பெற்றார்.

மனைவி ஞான சௌந்தரியுடன் சி.பி. ஞானமணி

தனி வாழ்க்கை

சி.பி. ஞானமணி, உதகமண்டலம் கெய்ட்டியில் உள்ள பேசில் மிஷன் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். மணமானவர். மனைவி: ஞானசௌந்தரி அம்மாள். மகன்கள்: சி.டி. ஞானமணி, தேவவரம், தேவசுந்தரம். மகள்கள்: கிரேஸ் நேசம்மாள், சோபியா, கமலா, சுகுணா.

மதப்பணிகள்

சி.பி. ஞானமணி, இங்கிலாந்து திருச்சபையின் திருநெல்வேலி ஆதினத்தின் கீழ் இறைப்பணியாற்றினார். பின்பு இலங்கை யாழ்ப்பாணத்திற்கு கிறிஸ்துவின் கொள்கைகளைப் பரப்புவதற்காக அனுப்பி வைக்கப்பட்டார். குரு பட்டம் பெற்ற பின் போதகராகவும், ஆயராகவும் செயல்பட்டார். கீழ்காணும் இடங்களில் ஆயராகப் பணியாற்றினார்.

  • குன்னூர் தூய யோவான் ஆலயம், நீலகிரி
  • முதலூர் தூய மிகாவேல் ஆலயம், தூத்துக்குடி
  • தூய பாட்ரிக் ஆலயம், போலாரம்
  • கிறித்துவ ஆலயம், செகந்திராபாத்
  • தூய தோமா ஆலயம், சென்னை
  • நல்மேய்ப்பர் ஆலயம், மயிலாப்பூர்
  • தூய பவுல் ஆலயம், வேப்பேரி, சென்னை
  • சகல பரிசுத்தவான்கள் ஆலயம், புத்தூர், திருச்சி
தமிழ் இலக்கணச் சிந்தாமணி - ஞானமணி நூல்

இலக்கிய வாழ்க்கை

சி.பி. ஞானமணி, 1895-ல், மாணவர்கள் பயன்பெறும் வகையில், எளிய தமிழில், ‘தமிழ் இலக்கணச் சிந்தாமணி’ என்னும் நூலை எழுதினார். இது அக்காலத்துப் பள்ளி மாணவர்களுக்குப் பாடல் நூலாக வைக்கப்பட்டது. சிற்றிலக்கியங்கள், கவிதை நூல்கள் பலவற்றை எழுதினார்.

இதழியல்

சி.பி. ஞானமணி, 1918-ல், தமிழ்ச் சபை தீபிகை என்ற இதழைத் தொடங்கி நடத்தினார்.

கீர்த்தனைகள்

சி.பி. ஞானமணி, ‘இன்பக் கீர்த்தனைகள்’ என்ற தலைப்பில் இயேசுவின் மீது பல கீர்த்தனைகளை இயற்றினார்.

- போன்ற கிறிஸ்தவக் கீர்த்தனைகள் மக்களின் வரவேற்பைப் பெற்றன.

சி.பி. ஞானமணி நினைவுக் கல்

மறைவு

சி.பி. ஞானமணி, அக்டோபர் 22, 1922 அன்று காலமானார். அவரது நினைவுக் கல் திருச்சி புத்தூர் கல்லறைத் தோட்டத்தில் அமைந்துள்ளது.

மதிப்பீடு

சி.பி. ஞானமணி, திருநெல்வேலியில் கிறிஸ்தவம் வளர்த்த முன்னோடி போதகர்களில் ஒருவர். பல்வேறு எதிர்ப்புகளை எதிர்கொண்டு கிறிஸ்தவம் வளர்த்தார். இலக்கிய, இலக்கணப் புலமை பெற்றிருந்த ஞானமணி, மாணவர்களுக்காக எளிய தமிழில் எழுதிய இலக்கண உரை விளக்க நூல், பள்ளி மாணவர்களுக்குப் பாட நூலாக வைக்கப்பட்டது. கிறிஸ்தவத் தமிழ்க் கீர்த்தனைகளை இயற்றிய முன்னோடிக் கவிஞர்களுள் ஒருவராக சி.பி. ஞானமணி மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

வரலாறு
  • டம்பாச்சாரி சரித்திரம் (கெட்ட குமாரன் உவமை)
  • கர்த்தராகிய கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளும் ஏழு வார்த்தைகளும்
கவிதை நூல்கள்
  • மரக்கல முனிவர் கவிதை (நோவாவின் சரித்திரம்)
  • மச்சமுனி முனிவர் கவிதை (யோனாவின் சரித்திரம்)
  • ஐஸ்வரியவான் - லாசரு உவமான நிர்விசாரி கவிதை
  • யவீருவின் மகள் உயிரோடு எழுப்பின கவிதை
கீர்த்தனை நூல்கள்
  • ஜெபக்குறன்மாலை
  • ஸ்நானமுனி சரிதை
  • கானானிய ஸ்திரீ யென்ற நல்லதாய் நற் ஜெபக்கவிதை
  • கிறிஸ்துமஸ் கீதம்
இலக்கண நூல்
  • தமிழ் இலக்கணச் சிந்தாமணி
  • தமிழ் இலக்கண சாரசங்கிரகம்

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.