first review completed

சி.சுப்ரமணிய பாரதியார்

From Tamil Wiki
Revision as of 04:31, 26 July 2022 by Jagadeesan.hongkong (talk | contribs) (spellcheck)
பாரதியார் - செல்லம்மாள்
பாரதியாரின் கையெழுத்து

சி.சுப்ரமணிய பாரதியார் (பாரதி, பாரதியார்) (டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) தமிழின் நவீனக் கவிஞர்களில் முதன்மையானவர். பாரதியாரை நவீன தமிழ் இலக்கியத்தின் தொடக்கப்புள்ளி என விமர்சகர்கள் கருதுகின்றனர். நவீனக் கவிதை, நவீன உரைநடை இலக்கியம், இதழியல் ஆகியவற்றில் முன்னோடி. தமிழிசை இயக்கத்தின் தொடக்கப்புள்ளிகளில் ஒருவர். இந்தியச் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டவர்.

பிறப்பு, கல்வி

சுப்ரமணியன் என்ற இயற்பெயர் கொண்ட பாரதியார் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயருக்கும், லட்சுமி அம்மாளுக்கும் மகனாக டிசம்பர் 11, 1882-ல் பிறந்தார். இயற்பெயர் சுப்பிரமணியன். அவருடைய ஐந்து வயதில் தாயார் காலமானார். லட்சுமி அம்மாள் மரணத்திற்கு பின் தந்தை வள்ளியம்மாள் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இளம் வயதிலேயே கவிதை எழுதும் திறமை பெற்ற பாரதி எட்டயபுரம் சமஸ்தானப் புலவர்கள் அவையில் எட்டயபுரம் ஜமீனிடமிருந்து “பாரதி” என்ற பட்டம் பெற்றார்.

1894 ஆம் ஆண்டு சின்னசாமி ஐயர் பாரதியை திருநெல்வேலியில் உள்ள “இந்துக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில்” சேர்த்தார். 1898 ஆம் ஆண்டு சின்னசாமி ஐயர் மரணம் அடைந்தார். அவரின் மறைவிற்கு பின் பாரதிக்கு அவரது அத்தை ருக்மணி அம்மாள் (குப்பம்மாள்) ஆதரவு கொடுத்தார். காசி அனுமன் ஹாட் அருகே உள்ள அத்தை வீட்டில் தங்கிப் படித்தார். பாரதி பனாரஸில் உள்ள ஜயநாராயன் கல்லூரியில் ஒன்பதாம் வகுப்பு சேர்ந்து படித்தார். 1899 - 1900 ஆண்டுகளில் பனாரஸில் டாக்டர் அனி பெஸ்ன்ட் கட்டிய இந்துக் கல்லூரியில் நுழைவுத் தேர்வு எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

தனிவாழ்க்கை

1897-ல் பாரதியார் பள்ளியில் படித்துகொண்டிருக்கும் போது செல்லம்மாவை திருமணம் செய்தார். மகள்கள் தங்கம்மாள், சகுந்தலா.

காசி இந்துக் கல்லூரியில் சமஸ்கிருதமும், இந்தியும் கற்றார். மேலும் போஜ்புரி, அவதி, பிரஜ்பாஷாவைக் கற்றுக் கொண்டார். அங்கே பல்கலைக்கழகத்தின் நூலகங்கள் மூலம் வில்லியம் வேர்ட்ஸ் வொர்த், ஷெல்லி, பைரன், ஷேக்ஸ்பியரின் நூல்கள் பாரதிக்கு அறிமுகமாயின.

காசியில் இருந்த போது 1899 - 1902 ஆண்டுகளில் பாரதி பால கங்காதர திலகர், லாலா லஜ்பதி ராய், பிபின் சந்தர்பால், டாக்டர் பகவான் தாஸ் போன்ற விடுதலைப் போராட்ட தேசிய தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்புகள் பாரதியார் பின்னாளில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடக் காரணமாக அமைந்தன.பிறகு எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார். 1904-ல் மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். இவரின் ஞானகுரு நிவேதிதா தேவி.

பாரதியார்

அரசியல் வாழ்க்கை

1904 நவம்பரில் சென்னைக்குச் சென்று சுதேச மித்திரன் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் சேர்ந்தார். அது முதல் அரசியல், சுதந்திரப் போராட்டம் பற்றிய பரிச்சயம் கிடைத்தது. 1904 முதல் 1908 வரை சென்னையில் பத்திரிகை ஆசிரியராக, மேடைப் பேச்சாளராக, மாநாட்டுப் பிரதிநிதியாக, சங்க அமைப்பாளராக, தீவிர இயக்கத்தாரோடு தொடர்பு கொண்டவராக வளர்ந்தார்.

பாரதியின் தேசபக்திப் பாடல்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப்பங்கு வகித்தது. பாரதியார் இந்திய பத்திரிகையின் மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல கட்டுரைகளை எழுதினார். பாரதியின் எழுச்சிக்கு, தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி “இந்தியா பத்திரிகைக்கு” தடை விதித்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது. இவரின் அரசியல்குரு திலகர்.

அரசியல் செயல்பாடுகள்
  • சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் பாடிய பிறகு, 1905-இல் காசியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பங்கெடுத்தார். அம்மாநாட்டில் லோகமான்ய பால கங்காதர திலகர், நிவேதிதா தேவி ஆகியோரைப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றார்.
  • 1906-ல் சென்னையில் பாலபாரத சபை என்ற சங்கத்தை அமைப்பதில் பங்காற்றினார்.
  • 1906-ல் திலகர் பிறந்த நாளைச் சென்னையில் கொண்டாடப் பாரதியார் பங்காற்றினார்.
  • 1906-ல் தான் பாரதிக்கும், வ.உ.சி -க்கும் நேரடித் தொடர்பு ஏற்பட்டது.
  • 1906, 1907-ல் சென்னையில் பல பொதுக் கூட்டங்களை நடத்தி, பாரதியார் அமைப்பாளராகவும், பேச்சாளராகவும் செயல்பட்டார்.
  • 1907-ல் விஜயவாடாவிற்குச் சென்று பிபின் சந்திர பாலைச் சந்தித்துச் சென்னையில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்க அழைத்து வந்தார்.
  • பஞ்சாப் மாநிலத்தில் பத்திரிகைத் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து ஒரு கூட்டத்தில் பாரதியார் பேசினார்.
  • 1907-ல் சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்கப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திலகரையும், திலகர் கட்சியையும் ஆதரித்துப் பல கட்டுரைகளை எழுதினார்.
  • 1908-இல் இலட்சுமணய்யா என்ற சுதந்திரப் போராட்ட வீரர் விடுதலையாகி வெளியில் வந்தவுடன் அவரை வரவேற்று, பாராட்டுக்கூட்டம் நடத்தி, பரிசு வழங்கினார்.
  • 1911-ல் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷ் துரையை மணியாச்சி ரயில் சந்திப்பில் வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்ற தனிநபர் கொலைவழி முறையைப் பாரதியார் ஏற்கவில்லை.
  • 1911-ல் வ.உ.சி. கைது செய்யப் பட்டதைக் கண்டித்துப் பேசினார்.
  • ஆகஸ்ட் 21, 1908-ல் ‘இந்தியா’ பத்திரிகையில் பாரதியார் எழுதிய பல கட்டுரைகளுக்காக பிரிடிஷ் அரசாங்கம் அவரை கைது செய்ய ஆணையிட்டபோது பாண்டிச்சேரி சென்றார். 1908 ஆகஸ்டு 21 முதல் 1918 நவம்பர் 24 வரை பாண்டிச்சேரியில் இருந்தார். வ.ரா, பாரதிதாசன், அரவிந்தர் ஆகியோருடன் நெருங்கிப் பழகினார்.
  • புரட்சி, பொதுவுடைமையைப் பற்றியும் பாரதி சுயமான கருத்தைக் கொண்டிருந்தார். லெனினைப் பாராட்டி, ரஷ்யப்புரட்சியை வரவேற்ற பாரதியார், ’ரஷ்ய முறைகள் இந்தியாவுக்குப் பொருந்தா’ என்று எழுதினார்.
  • 1918-ஆம் ஆண்டு பாரதியார் இந்தியாவுக்குத் திரும்பிவிட முயன்றபோது வில்லியனூருக்கருகில் கைது செய்யப்பட்டுக் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அன்னிபெசண்ட், சுதேச மித்திரன் அதிபர், சி.பி.ராமசாமி அய்யர், அன்றைய சென்னை காவல் துறைத் துணைக்கமிஷனர் ஆகியோர் முறையீட்டின் பேரில் பாரதியார் நிபந்தனையுடன் விடுவிக்கப் பட்டதாகத் தெரிகிறது.

சமூக சிந்தனை

தன் பூணூலை துறந்தார். வ.ரா. வையும் பூணூலை எடுத்துவிடச் செய்தார். கனகலிங்கம் என்ற தாழ்த்தப்பட்ட சகோதரனுக்குப் பூணூல் அணிவித்தார். பிராமணன் யார் என்பதற்குப் பாரதியார் வஜ்ரசூசி என்ற சாத்திரத்தை ஆதாரம் காட்டி, பிறப்பால் பிராமணன் இல்லை என்றார். ‘நந்தனைப்போல ஒரு பார்ப்பான் இந்த நானிலத்தில் கண்டதில்லை’ என்றார். கலப்பு மணம் நடப்பதை வரவேற்றார். ‘பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும்; கல்வி பயில, பதவிகள் வகிக்க உரிமை வேண்டும்; விரும்பிய மணாளனை மணந்துகொள்ள முழு உரிமை வேண்டும்; மனம் கசந்தால் விவாக ரத்துச் செய்ய உரிமை வேண்டும்; கணவன் இறந்து போனால், விதவைக்கோலம் பூணாது மறுமணம் செய்து கொள்ள உரிமை வேண்டும்’ என்று எழுதினார். விதவைகள் மறுமணம் குறித்துக் காந்தியடிகள் தயக்கம் காட்டியபோது அதை எதிர்த்து எழுதினார்.

இலக்கிய வாழ்க்கை

சிறு வயதிலேயே பாரதியாருக்கு தமிழ்மொழி மீது பற்றும், புலமையும் இருந்தது. ஏழு வயதிலிருந்து கவிதைகள் எழுதத் தொடங்கினார். 1905-06-ல் ஷெல்லிதாஸ் என்ற புனைப்பெயரில் பாரதியார் எழுதிய ’துளஸீபாயி’ என்ற சிறுகதை அவர் ஆசிரியராக இருந்த சக்ரவர்த்தினி இதழில் இடைவெளிவிட்டு வெளிவந்தது. பாரதியாரே தமிழின் முதல் சிறுகதை ஆசிரியர் என்று கருதும் இலக்கிய ஆய்வாளர்கள் உள்ளனர்.

’காந்தாமணி சிறுகதை’ பாரதியின் சிறந்த உரை நடைத்திறனுக்குச் சான்று. 1912-ல் கீதையை தமிழில் மொழிபெயர்த்தார். இவரின் முதல் பாடல் ’தனிமை இரக்கம்’ விவேகபானு இதழில் 1904-ல் வெளிவந்தது. பாரதியின் முதல் கவிதை தொகுதி ’சுதேச கீதங்கள்’. தாகூரின் பதினொரு சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்தார். தமிழில் முதன் முதலில் கருத்துப்படங்கள் வெளியிட்டார். கவிதைகள், சிறுகதைகள், உரைநடைகள், நாடகம் என அவர் எழுதிய யாவுமே நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி என்பதைச் சுட்டுகிறது.

புனைப்பெயர்கள்
  • காளிதாசன்
  • சக்திதாசன்
  • சாவித்திரி
  • ஷெல்லிதாசன்
  • நித்திய தீரர்
  • ஓர் உத்தம தேசாபிமானி
சிறப்பு பெயர்கள்
  • மகாகவி
  • மக்கள் கவிஞர்
  • வரககவி
  • தேசியக்கவி
  • விடுதலைக்கவி
  • அமரக்கவி
  • முன்னறி புலவன்
  • தமிழ்க்கவி
  • உலககவி
  • தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி
  • பாட்டுக்கொரு புலவன் பாரதி
  • நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா
  • காடு கமழும் கற்பூரச் சொற்கோ
  • புதுக்கவிதையின் முன்னோடி
  • பைந்தமிழ் தேர்பாகன்
  • சிந்துக்குத் தந்தை
  • மீசை கவிஞன்
  • முண்டாசு கவிஞன்

இலக்கிய இடம்

நவீன எழுத்தாளனுக்குரிய ஆளுமை கொண்ட முன்னோடி பாரதி. இன்றுவரை அவரது தனிப்பட்ட இயல்பு நவீன எழுத்தாளர்களுக்கு ஊக்கமூட்டும் முன்னுதாரணமாக உள்ளது. புத்திலக்கியத்தின் பெரும்பாலான வடிவங்களில் முன்னோடிச் சோதனைகளை பாரதி நிகழ்த்திப் பார்த்தார். பாரதி உரை நடையில் பேசுவது போலவே எழுதினார். அதற்காக மரபான இலக்கணங்களை மீறினார். நவீன உரைநடை பிறக்கக் காரணமானவர் பாரதி.

இதழியல் வாழ்க்கை

  • சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராக, நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றினார். தன் வாழ்நாளின் இறுதியில் ஆகஸ்ட் 1920 - செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்
  • சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழில் ஆகஸ்ட் 1905 முதல் ஆகஸ்ட் 1906வரை பணியாற்றினார்
  • இந்தியா என்ற வார இதழில் மே 1905 முதல் 1906வரை ஆசிரியராகப் பணியாற்றினார்.
  • புதுச்சேரி அக்டோபர் 19, 1908 – மே 17, 1910 ஆசிரியராகப் பணியாற்றினார். (பார்க்க: இந்தியா இதழ்)
  • சூரியோதயம் (1910) ஆசிரியராகப் பணியாற்றினார்.
  • கர்மயோகி டிசம்பர் 1909–1910 ஆசிரியராகப் பணியாற்றினார்.
  • தர்மம் பிப்ரவரி 1910 ஆசிரியராகப் பணியாற்றினார்.
  • பால பாரதா யங் இண்டியா (ஆங்கில இதழ்) ஆசிரியராகப் பணியாற்றினார்.
  • ஆங்கில அரசால் தடை செய்யப்பட்ட பாரதியின் "இந்தியா" பத்திரிகை புதுவையில் வெளியானது.

1905-ல் இந்தியா பத்திரிகை வழி உலகில் முதன் முதலில் கேலிச்சித்திரங்களை அறிமுகப்படுத்தினார். முதன்முதலில் தமிழ்ப் பத்திரிகையில் தமிழ் ஆண்டு மாதம் குறித்தவர், தமிழ் எண்களைப் பயன்படுத்தியவர்(இந்தியா, விஜயா இதழ்).

பாரதியார் நினைவு இல்லம்

நினைவுச் சின்னங்கள்

  • எட்டயபுரத்திலும், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியிலும் பாரதியார் வாழ்ந்த இடத்தை பாரதியாரின் நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசு மாற்றி இன்று வரை பொதுமக்களின் பார்வைக்காக பராமரித்து வருகிறது.
  • எட்டயபுரத்தில், பாரதியின் நினைவாக மணிமண்டபம் அமைக்கப்பட்டு, திருவுருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.

மறைவு

1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோது, எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டார். செப்டம்பர் 11, 1921-ல் தனது 39 ஆவது வயதில் காலமானார்.

நூல்கள் பட்டியல்

கவிதை
  • கண்ணன் பாட்டு
  • குயில் பாட்டு
  • பாஞ்சாலி சபதம்
  • பாப்பா பாட்டு
  • விநாயகர் நான்மணிமாலை
  • பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி
  • பாரததேவியின் திருத்தசாங்கம்
  • காட்சி (வசன கவிதை)
  • புதிய ஆத்திச்சூடி
  • தேசிய கீதங்கள்
  • ஞானப் பாடல்கள்
  • தோத்திரப் பாடல்கள்
  • விடுதலைப் பாடல்கள்
  • வசனகவிதை: காட்சி
உரைநடை நூல்கள்
  • ஞானரதம் (தமிழின் முதல் உரைநடை காவியம்)
  • தராசு
  • சந்திரிகையின் கதை
  • மாதர்
  • கலைகள்
சிறுகதைகள்
  • காந்தாமணி
  • ஸ்வர்ண குமாரி
  • சின்ன சங்கரன் கதை
  • ஆறில் ஒரு பங்கு
  • பூலோக ரம்பை
  • திண்டிம சாஸ்திரி
  • கதைக்கொத்து (சிறுகதை தொகுப்பு)
  • நவந்திரக் கதைகள்
  • பொன் வால் நரி
  • கதைக்கொத்து(சிறுகதை தொகுப்பு)
  • சின்னஞ்சிறு கிளியே
நாடக நூல்
  • ஜெகசித்திரம்
பிற
  • சுயசரிதை (பாரதியார்)
  • பாரதி அறுபத்தாறு
  • பாரதியார் பகவத் கீதை(பேருரை)
  • பதஞ்சலியோக சூத்திரம்
  • நவதந்திரக்கதைகள்இந்தியா
  • உத்தம வாழ்க்கை சுதந்திரச்சங்கு
  • ஹிந்து தர்மம் (காந்தி உபதேசங்கள்)
  • பகவத் கீதை
ஆங்கில நூல்
  • THE FOX WITH THE GOLDEN TAIL
மொழிபெயர்ப்பு நூல்
  • புதிய கட்சியின் கோட்பாடுகள் (திலகருக்கு ஆதரவாக)
  • பஞ்ச வியாசங்கள் (தாகூர் கவிதைகள்)
  • ஜீவவாக்கு (ஜகதீஸ் சந்திர போஸ் பற்றியது)

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.