சி.கே. சுப்பிரமணிய முதலியார்

From Tamil Wiki
Revision as of 16:03, 30 January 2022 by Ramya (talk | contribs)
சி.கே. சுப்பிரமணிய முதலியார்

சி.கே. சுப்பிரமணிய முதலியார் (சி.கே.எஸ்.) (சிவகவிமணி சுப்ரமணிய முதலியார்) (பிப்ரவரி 2, 1877-1961) இருபதாம் நூற்றாண்டில் சைவ சமய பக்தி நெறியைப் பரப்பும் பணியில் ஈடுபடுத்திக் கொண்ட தமிழறிஞர். பெரிய புராணத்திற்கு சி.கே.எஸ் எழுதிய விரிவுரை தமிழ் இலக்கியத்திற்கும், சைவ சமயத்திற்கும் இன்றியமையாததாகும்.

பிறப்பு,கல்வி

மாங்காட்டிலிருந்து குடியேறிய கொண்டல்கட்டி குடிநெல்விளையார் மரபைச் சேர்ந்த வக்கீல் கந்தசாமி முதலியாருக்கும் வடிவம்மாளுக்கும் மகனாக பிப்ரவரி 2, 1877இல் சிவகவிமணி சுப்ரமணிய முதலியார் பிறந்தார். சுப்பிரமணிய முதலியார் கோவையில் எஃப்.ஏயும் சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ.யும் முடித்த பின் சட்டப்படிப்பு படித்தார். அது UCS எனப்பட்டது.

தனிவாழ்க்கை

பி.ஏ படித்துக் கொண்டிருந்த காலத்தில் சேலம் கங்கைவல்லியின் மகளான மீனாட்சியம்மையைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குப் பிள்ளைப் பேரில்லை.

சுப்பிரமணிய முதலியார் கோவையில் 48 ஆண்டுகள் முழுநேர வக்கீலாக இருந்தார். 1903 முதல் 1951 வரை வழக்கறிஞராக இருந்தார்.1910இல் சுப்பிரமணிய முதலியார் அறநிலையப் பாதுகாப்புத் துறை உறுப்பினர், கோவை நகரசபை உறுப்பினர், 1920இல் துணைத் தலைவர், 1921இல் சென்னைப் பல்கலைக்கழக செனட் உறுப்பினர் என்னும் பொறுப்புகளையும் வகித்தார்.

இலக்கியவாழ்க்கை

1924இல் சுப்பிரமணிய முதலியார் முதலில் எழுதிய நூல் மாணிக்க வாசகர் அல்லது நீத்தார் பெருமை. 1930இல் இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய சொற்பொழிவு சேக்கிழார் நூல். இவை தவிர பெருங்கருணையம்மைப் பிள்ளைத் தமிழ், திருத்தொண்டர் புராணத்தில் முருகன், அர்த்தநாரீஸ்வரர் அல்லது மாதிரிக்கு பாதியின் கருவூர்த்தேவர், வாசீகர் அல்லது மெய்யுணர்தல் என்னும் சிறு நூல்களையும் ஆக்கியுள்ளார்.

இராமச்சந்திர ரெட்டியாருடன் இணைந்து கொங்குமலர் மாதப் பதாகை நடத்தியிருக்கிறார். கோவைத் தமிழ்ச் சங்கம் கண்டவர். தேவாரப் பாடசாலை வைத்து நடத்தியவர். சேக்கிழார் திருக்கூட்டம் என்ற அமைப்பினையும் ஏற்படுத்தியவர். சென்னைப் பல்கலைக் கழக தமிழ் மொழி ஆணையராகப் பணியாற்றியவர்.

சைவ இலக்கியம்

1934 முதல் 1953 வரை 19 ஆண்டுகள் செலவிட்டு சுப்பிரமணிய முதலியார் 63 நாயன்மார்களின் வரலாற்றை 5253 பாடல்களில் கூறும் பெரியபுராணம் முழுவதையும் உரையுடன் வெளியிட்டிருக்கிறார். சுப்பிரமணிய முதலியாரின் ஆராய்ச்சி உரை வெளிவர திருப்பனந்தாள், திருவாவடுதுறை, தருமபுரம் மடங்களும் சென்னை, அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களும் உதவியிருக்கின்றன. சுப்பிரமணிய முதலியார் 1935க்கு முன்பும் பின்னரும் கதிரேசன் செட்டியார், வ.உ.சி., வேங்கடசாமி நாட்டார் போன்றோர்களுடன் உரையாடியபோது கிடைத்த தகவல்களையும் இந்த உரையில் பயன்படுத்தியிருக்கிறார். அவர் காலத்தில் வெளிவந்த கல்வெட்டுகளையும் பல்லவ சோழ வரலாற்றையும் தன் உரை விளக்கத்தில் கொடுத்தார்.

நாயன்மார்கள் வாழ்ந்த ஊர்களுக்கு முதலியார் பயணம் செய்திருக்கிறார். நம்பியாரூரர், திருவெண்ணெய்நல்லூர் முதல் திருவாரூர் வரை சென்ற யாத்திரை வரைபடத்தை இவர் உருவாக்கியிருக்கிறார். தமிழகத்துக் கோவில்களில் உள்ள பெரிய புராணச் சிற்பங்களை அடையாளம் கண்டு கள ஆய்வு நடத்தித் தகவல்கள் சேகரித்து பதிப்பித்திருக்கிறார். 1958இல் சம்பந்த கருணாலயத் தம்புரான் என்னும் பெயருடன் ருத்திராட்சம் அணிந்து துறவியானார்.

நூல்பட்டியல்

செய்யுள்

  • திருப்புக் கொளியூர் அவினாசிப் பெருங்கருணையம்மைப் பிள்ளைத் தமிழ்
  • கந்தபுராண போற்றிக் கலிவெண்பா
  • திருப்பேரூர் ரெட்டை மணிமாலை
  • மருதங்கோவை

உரைநடை

  • மாணிக்க வாசகர் அல்லது நீத்தார் பெருமை (1924)
  • சேக்கிழார் நூல் (1930).
  • சேக்கிழாரும் சேயிழைக் கிழாரும்
  • செம்மணித்திரள்
  • திருத்தொண்டர் புராணத்தில் முருகன்
  • அர்த்தநாரீஸ்வரர் அல்லது மாதிரிக்கு பாதியின் கருவூர்த்தேவர்
  • வாசீகர் அல்லது மெய்யுணர்தல்

தேசிய விடுதலை

சுப்பிரமணிய முதலியார் சிறுவயதிலேயே காங்கிரஸ் நடவடிக்கைகளில் தீவிரமாக இருந்தார். சென்னையில் லால்மோகன் கோஷ் தலைமையில் நடந்த கூட்டத்தில் சுரேந்திரநாத் பானர்ஜி அவர் பேசியதைக் கேட்க சென்ற நிகழ்வை "பித்தன் ஒருவனின் சுயசரிதை” என்ற தன்வரலாற்று நாலில் கூறுகிறார். இந்நூல் 1956இல் எழுதப்பட்டு 2006இல் வெளிவந்தது. விபின் சந்திர பாலருக்குக் கோவையில் விழா கொண்டாடினார். சுதேசமித்திரன் ஆசிரியர் ஜி. சுப்பிரமணிய அய்யருக்குக் கோவையில் வரவேற்பு கொடுத்திருக்கிறார். அந்நியத்துணி பகிஷ்கரிப்பு இயக்கத்திலும் இவருக்குப் பங்கு உண்டு.

சுப்பிரமணிய முதலியாருக்கு அரவிந்தர், ஜி. சுப்பிரமணிய அய்யருடன் கடிதப் போக்குவரத்து உண்டு. ஆஷ் துரையை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றபோது, நீலகண்ட பிரம்மச்சாரி கொடுத்த தகவலின்படி சென்னைப் போலீசார் ஆகஸ்ட் 11, 1914இல் சுப்பிரமணிய முதலியாரின் வீட்டைச் சோதனை செய்தனர். வ.உ.சி. சிறையிலிருந்தபோது சுப்பிரமணிய முதலியார் பல உதவிகள் செய்திருக்கிறார். பிற்காலத்தில் சுப்பிரமணிய முதலியார் காங்கிரஸ் ஈடுபாடுகளைக் குறைத்துக்கொண்டார்.

விருதுகள்

  • இவருக்குச் சிவகவிமணி என்ற பட்டத்தை சென்னை மாகாண தமிழ்ச் சங்கம் அளித்தது.
  • திருமறை ஞான பானு என்ற பட்டம் மதுரை ஆதினத்தாரால் வழங்கப் பெற்றது.

இறுதிக்காலம்

இல்லற வாழ்வின் போதே சைவ நெறிக்கு ஏற்ப இவர் சிதம்பரம் முத்துக் குமாரக் குருக்களிடம் சிவ தீக்கை பெற்றார். இல்லற வாழ்வின் பிற்காலத்தில் இவர் அகத்துறவியாக வாழ்ந்தார். வாழ்வின் நிறைநிலையில் மதுரை ஆதீனத்தின் வழியாகப் புறத்துறவும் ஏற்றார். துறவு வாழ்வு மேற்கொண்டதும் இவர் சம்பந்த சரணாலயத் தம்பிரான் என்று ஞானப் பெயர் பெற்றார். ஜனவரி 24, 1961இல் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

உசாத்துணைகள்