சி.கா. செந்திவேல்

From Tamil Wiki
Revision as of 20:55, 7 January 2023 by Ramya (talk | contribs) (Created page with "சி.கா. செந்திவேல் (நவம்பர் 23, 1943) எழுத்தாளர் சமூக செயற்பாட்டாளர். == வாழ்க்கைக் குறிப்பு == சி.கா. செந்திவேல் இலங்கை யாழ்ப்பாணம், சிறுப்பிட்டியில் காசிப்பிள்ளை, நாகம்மா இணையருக்கு ந...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சி.கா. செந்திவேல் (நவம்பர் 23, 1943) எழுத்தாளர் சமூக செயற்பாட்டாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

சி.கா. செந்திவேல் இலங்கை யாழ்ப்பாணம், சிறுப்பிட்டியில் காசிப்பிள்ளை, நாகம்மா இணையருக்கு நவம்பர் 23, 1943இல் பிறந்தார். புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியில் கல்வி பயின்றார்.

அரசியல் வாழ்க்கை

இவர் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளாராக உள்ளார். இவர் தனது 23 வயதில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தீண்டாமைக்கு எதிரான ஒக்டோபர் எழுச்சி அணிவகுப்பில் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து சாதிய அடக்குமுறை மற்றும் அனைத்து அடக்குமுறைகளுக்கு எதிராகவும் பல பேராட்டங்களை முன்னெடுத்துள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

சி.கா. செந்திவேல் “இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்” நூலை இராவணாவுடன் (ந. இரவீந்திரன்) இணைந்து எழுதினார். 1989இல் முதல்பதிப்பும் 2007இல் இரண்டாவது பதிப்பும் வெளிவந்தது. சமூகவிஞ்ஞான நோக்கில் “மனிதரும் சமூக வாழ்வும்” எனும் நூலை 1994இல் எழுதினார். 1995இல் “இலங்கை இடதுசாரி இயக்கத்தின் ஐம்பது ஆண்டுகள்” எனும் இடதுசாரி இயக்க வரலாற்று நூலை எழுதினார். 2013இல் “வடபுலத்துப் பொதுவுடமை இயக்கமும் தோழர் கார்த்திகேசனும்” எனும் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதினார். தொடர்ந்து 2014இல் “தோழர் மணியம் நினைவுகள்” நூலை புதிய ஜனநாயக மாக்சிய லெனினிய கட்சியின் நிறுவகரான சுப்புரமணியம், கே.ஏ அவர்களின் 25வது ஆண்டு நினைவு தினத்தில் வெளிக்கொணர்ந்தார். புதியபூமியில் எழுதிவந்த “வட்டுக்கோட்டை முதல் முல்லைத்தீவு வரை” எனும் இவரது நூல் 2018இல் புதியநீதி வெளியீடாக வெளிவந்து. இலங்கையில் பலபாகங்களிலும் புலம்பெயர்தேசங்களிலும் அறிமுக நிகழ்வுகள் பல இடம்பெற்றன. பின்னர் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது. 1995இல் வெளிவந்த “கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தோழர் சண்முகதாசன்” எனும் சிறு நூலில் அவர் பற்றி கட்டுரை எழுதியுள்ளார். 2002இல் வெளிவந்த “பெண்விடுதலையும் சமூக விடுதலையும்” எனும் நூலிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார். புதிய பூமி, புதிய நீதி எனும் அரசியல் தத்துவார்த்த பத்திரிகையில் ஆசிரியராக இருந்து பலகட்டுரைகள் எழுதினார். செம்பதாகை எனும் தத்துவார்த்த ஏட்டிலும் தேசிய பத்திரிகைகளிலும் புனைபெயர்களில் அரசியல் விமர்சன கட்டுரைகள் எழுதினார்.

நூல் பட்டியல்

  • இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்
  • மனிதரும் சமூக வாழ்வும்
  • இலங்கை இடதுசாரி இயக்கத்தின் ஐம்பது ஆண்டுகள்
  • வடபுலத்துப் பொதுவுடமை இயக்கமும் தோழர் கார்த்திகேசனும்
  • தோழர் மணியம் நினைவுகள்
  • வட்டுக்கோட்டை முதல் முல்லைத்தீவு வரை
  • கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தோழர் சண்முகதாசன்
  • பெண்விடுதலையும் சமூக விடுதலையும்

உசாத்துணை

  • ஆளுமை:செந்திவேல், சி. கா: noolaham