under review

சிவராஜ்

From Tamil Wiki
சிவராஜ்

சிவராஜ் (குக்கூ சிவராஜ்) (ஜனவர் 25, 1980) சிவராஜ் தமிழகத்தில் செயல்பட்டுவரும் சமூகசேவகர். இலக்கியப்பணியாளர். காந்திய நம்பிக்கைகொண்டவர். மாற்றுக்கல்வியாளர். குக்கூ என்னும் கல்விச்சேவை அமைப்பையும் தன்னறம் என்னும் பதிப்பகத்தையும் நடத்துகிறார். குக்கூ காட்டுப்பள்ளி என்னும் மாற்றுக் கல்வி அமைப்பை நடத்திவருகிறார்

பிறப்பு, கல்வி

ஈரோடு மாவட்டம் அறச்சலூரில் ஜனவர் 25, 1980 அன்று குப்புசாமி, கண்ணம்மாள் இணையருக்கு பிறந்தார். நெசவுத்தொழில் செய்யும் குடும்பம். அறச்சலூர் அரசுப்பள்ளியில் கல்விகற்றார். பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லை. சிவராஜ் மணமாகாதவர்.

அரசியல் செயல்பாடுகள்

கவுத்திவேடியப்பன் மலை மீட்புப் போராட்டம் உள்ளிட்ட சூழலியல் சார்ந்த சில போராட்டங்களில் நண்பர்களுடன் இணைந்து பங்கெடுத்துக் கொண்டார். அதன்பின் காந்தியவழியை கற்று போராட்டத்திற்குப் பதிலாக கட்டியெழுப்பும் களச்செயல்பாடே உகந்தது என்று கண்டுகொண்டார். நேரடி அரசியல் செயல்பாடுகள் இப்போது இல்லை

அமைப்புச் செயல்பாடுகள்

சிவராஜ் குக்கூ என்னும் குழதைகளுக்கான அமைப்பை முதலில் தொடங்கினார். அதற்கு ஆதரவு உருவானபோது வெவ்வேறு நண்பர்களை இணைத்துக்கொண்டு பல களங்களில் பணியாற்றி வருகிறார்.

சிவராஜ்
குக்கூ குழந்தைகள் இயக்கம்

குழந்தைகளின் அகவுலகத்தில் மாறுதல்களை உருவாக்கிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் 2002-ல் 'குக்கூ குழந்தைகள் இயக்கம்’ துவங்கியது. மலைக்கிராமங்களில் நூலகங்கள் அமைத்தல், அரசுப்பள்ளிகளில் பல்வேறு கலைப் பயில்முகாம்களை நிகழ்த்துதல், சிறுசிறு நூல்கள் வெளியிடுதல் என முழுக்க குழந்தைகள் சார்ந்தும், சூழலியல் சார்ந்துமாக செயல்படுகிறதுகுக்கூ. கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவ்வாதுமலை அடிவாரத்தில், புளியானூர் கிராமத்தில் 'குக்கூ காட்டுப்பள்ளி’ செயல்படுகிறது. குழந்தைகளுக்கு கலைகள், கைத்தொழில்கள், இலக்கியம் வழியாக மாற்றுக்கல்வியை அளிப்பதே நோக்கம்

குக்கூ காட்டுப்பள்ளி

குக்கூ காட்டுப்பள்ளி சிவராஜ், பீட்டர் ஜெயராஜ் ஆகிய குக்கூ குழந்தைகள் வெளியினரால் 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இயற்கையோடு வாழ் இயற்கைக்குத் திரும்பு என்பதையே இலக்காகக் கொண்டு செயல்படுவது. பொம்மை உருவாக்குபவரான அரவிந்த் குப்தா இதை திறந்துவைத்தார்.

தும்பி சிறார் இதழ்

வண்ணங்கள் நிரம்பிய ஓவியக்கதையுலகை குறைந்த செலவில் கிராமத்துக் குழந்தைகளுக்கு தமிழில் வாசிக்க வகைசெய்யும் நோக்கத்துடன் 'தும்பி சிறார் மாத இதழ்’ தேர்ந்த அச்சுத் தரத்தில் துவங்கப்பட்டது. தமிழ், ஆங்கிலம் என இருமொழிக் கதைப்புத்தகமாக கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தும்பி வெளிவருகிறது (www.thumbigal.com)[1].

சிவராஜ்
தன்னறம் நூல்வெளி

காந்தியம், சூழலியல், தற்சார்பு, கல்வி, வேளாண்மை, இறைமை, வாழ்வியல், தத்துவம் மற்றும் குழந்தைகள் சார்ந்த புத்தகங்களை நற்தேர்ந்த வடிவமைப்புடன், உயரிய தரத்துடன் தமிழில் தொடர்ந்து அச்சுப்படுத்தும் கனவில் முளைத்தது 'தன்னறம் நூல்வெளி’. எழுத்தாளர் ஜெயமோகன் உள்ளிட்ட வெவ்வேறு முக்கியமான படைப்பாளிகளின் புத்தகங்கள் தன்னறம் பதிப்பகம் வாயிலாக வெளிவந்துள்ளது. 2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது (www.thannaram.in)[2].

ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கம்

தண்ணீர் பற்றாக்குறையுள்ள பகுதிகளில் அமைந்திருக்கும் பழங்கிணறுகளைத் தூர்வாரி, அவற்றை மீண்டும் பயன்பாட்டுக்கு உகந்த நீராதாரமாக மாற்றித்தரும் பொருட்டு உருவானதே ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கம். 2019-ல் தொடங்கப்பட்டது

தன்னறம் விருது

இலக்கியத்தில் செயல்படும் ஆளுமைகளைக் கௌரவிக்கும் முகமாக தன்னறம் அமைப்பு ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வருகிறது. ரூபாய் ஒருலட்சம் பரிசும் சிற்பமும் அடங்கியது இப்பரிசு. பரிசுபெறுபவர் பற்றி ஓர் ஆவணப்படமும் எடுக்கப்படும். 2020 முதல் அளிக்கப்படும் இவ்விருது யூமா வாசுகி (2021), தேவி பாரதி (2021) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது

முகம் விருது

குக்கூ அமைப்பால் பொதுப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு அளிக்கப்படும் விருது இது.

கொள்கைகள்

இளைய மனங்களுக்கு நேர்மறையான விடயங்களைக் கொண்டுசேர்க்கும் பொறுப்பும் விருப்பமுமே சமகாலத்தில் இன்றியமையாத தேவை என மனதிற்குப்படுகிறது. வாழ்விலிருந்து அந்நியப்படாத, இவ்வாழ்வை மீண்டும் மீண்டும் நம்பிகையோடு நேசிக்கச் செய்யும் அகவிசையைத் தருகிற எல்லா தத்துவங்களையும், ஆசான்களையும் உட்கிரகித்துக் கொள்வது தங்கள் அமைப்புகளின் கொள்கைகள் என்று சிவராஜ் குறிப்பிடுகிறார்.

விருதுகள்

குக்கூ சிவராஜுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான சிருஷ்டி சம்மான் விருது வழங்கப்பட்டது.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page