under review

தமிழினி

From Tamil Wiki
சிவகாமி ஜெயக்குமார்

சிவகாமி ஜெயக்குமார் (தமிழினி) (ஏப்ரல் 23, 1972 - அக்டோபர் 18, 2015) ஈழத்துப் பெண் எழுத்தாளர், நாடகக் கலைஞர், களச்செயல்பாட்டாளர். விடுதலைப்புலிகளின் மகளிர் அணி அரசியல் பிரிவுத் தலைவி.

வாழ்க்கைக் குறிப்பு

சிவகாமி ஜெயக்குமார் இலங்கை கிளிநொச்சி பரந்தனில் சுப்பிரமணியம், சின்னம்மா இணையருக்குப் பிறந்தார். பரந்தன் இந்து மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றார்.

ஈழவிடுதலைப் போராட்டம்

சிவகாமி ஜெயக்குமார் 1991-ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்தார். விடுதலைப்புலிகளின் மகளிர் அணி அரசியல் பிரிவுத் தலைவியாக இருந்தார். தமிழினி எனும் பெயரால் அறியப்பட்டார். 2009-ல் இறுதிப் போருக்குப் பின்னர் அகதி முகாமில் இருந்த தமிழினி ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையில் இருந்தார். அதன்பின் ஒரு வருடம் புனர்வாழ்வளிக்கப்பட்டு 2013-ல் விடுதலையானார். இயக்கச் செயற்பாடுகளில் இருந்த போதே நாடக பிரதியாக்கம் செய்து நாடகங்களை வடிமைத்தார். போராளியாக செயற்பட்ட தமிழினி பெண்களுக்கான பல செயற்றிட்டங்களையும் வேலைத் திட்டங்களையும் முன்னெடுத்தார். பெண்களால் நடத்தப்பட்ட தும்புத் தொழிற்சாலை மற்றும் விவசாயப் பண்ணை ஆகியவற்றுக்கு பொறுப்பாளராகவும் செயல்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

கட்டுரை, கவிதை, கதைகள் எழுதினார். இவரின் ஆக்கங்கள் விடுதலைப்புலிகளின் சுதந்திரப்பறவைகள், வெளிச்சம், நாற்று, ஈழநாதம் ஆகியவற்றில் வெளிவந்தன. சிறையில் இருந்த காலங்களிலும் தனது எழுத்தை நிறுத்தாமல் தொடர்ந்து எழுத்துத்துறையில் ஈடுபட்டார் தமிழினி. விடுதலைப் புலிகளின் பெண்கள் சஞ்சிகையான சுதந்திர பறவைகளின் ஆசிரியர் பீடத்தின் அங்கத்தவராகவும் இருந்தார். ஓர் கூர்வாளின் நிழலில் என்னும் இவரின் நூல் சிங்களத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.

மறைவு

சிவகாமி ஜெயக்குமார் அக்டோபர் 18, 2015-ல் புற்றுநோய் காரணமாக காலமானார்.

நூல் பட்டியல்

  • ஓர் கூர்வாளின் நிழலில்

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.