first review completed

சில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Tag: Manual revert
Line 87: Line 87:
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{first review completed}}
{{first review completed}}
[[Category:நாவலாசிரியர்கள்]]

Revision as of 17:11, 13 April 2022

சில நேரங்களில் சில மனிதர்கள்

சில நேரங்களில் சில மனிதர்கள் [1970] எழுத்தாளர் த. ஜெயகாந்தன் எழுதிய நாவல். ஜெயகாந்தனின் சிறந்த நாவல் இது என விமர்சகர்களால் கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் பெண்கள் கல்வி கற்று வேலைக்காக வெளிவரத் தொடங்கிய காலமாற்றத்தின் பின்னணியில் ஒரு பெண் எதிர்கொள்ளும் சமூகச் சிக்கல்களையும் அகமனப் போராட்டங்களையும் சித்தரித்தது. கங்கா என்ற பதினேழு வயதான சிறுமிக்கு எதிர்பாராதவிதமாக ஏற்படும் பாலியல் அனுபவத்தைத் தொடர்ந்து அவள் வாழ்க்கை தடம் புரளும் கதை. கங்காவின் யதார்த்தமான, ஆன்மீகமான தேடல்களை, உளவியல் ரீதியான தடுமாற்றங்களைச் சொல்கிறது. கற்பு என்ற சமூகப் புரிதல் பற்றி விவாதங்களை உருவாக்கியது. 1970-ஆம் ஆண்டு தினமணி கதிரில் தொடராக வெளிவந்தது. ஜெயகாந்தன் நாவல்களிலேயே வெகுஜனரீதியாக அதிகமும் படிக்கப்பட்ட நாவல் இது. 1972-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருதை பெற்றது.

பதிப்பு

1968-ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் ஜெயகாந்தனின் ‘அக்கினி பிரவேசம்' சிறுகதை வெளிவந்து சர்ச்சையானதன் பின்னால் அந்தக் கதையின் முடிவை மாற்றக் கோரி அவருக்கு அநேக கடிதங்கள் வந்தன. ஜெயகாந்தன் ‘அக்கினி பிரவேசம்' கதாநாயகியின் குணச்சித்திரத்தை மாற்றாமல், முடிவை மட்டும் மாற்றி, அதன் பிறகான அவள் கதையை நாவலாக விரித்து எழுதினார்.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற அந்த நாவல் 1970-ஆம் ஆண்டு தினமணி கதிர் இதழில் ஓவியர் கோபுலுவின் படங்களோடு காலங்கள் மாறும் என்ற பெயரில் வெளியாகத் தொடங்கியது. பிறகு பெயர் மாற்றப்பட்டது. அப்போது தினமணி கதிரின் ஆசிரியரும் ஜெயகாந்தனின் நண்பருமான சாவி, பத்திரிக்கைகளுக்கான எல்லா நிர்ப்பந்தங்களையும் தளர்த்தி, அவர் அதை ஓர் அசல் இலக்கிய நாவலாக எழுத வேண்டும் என்று கோரினார். அவரை எழுத வைத்துப் பதிப்பித்தார்.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவல் நூல் வடிவில் 1970-ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி புத்தக நிலைய வெளியீடாக அவர்களது நூறாவது நூலாக வெளிவந்தது. 2004-ஆம் ஆண்டு காலச்சுவடு செம்பதிப்பாக அதன் கிளாசிக் வரிசையில் வெளியானது.

ஆசிரியர்

ஜெயகாந்தன் 1968-ஆம் ஆண்டு ஆனந்த விகடன் இதழில் ‘அக்கினிபிரவேசம்' என்ற சிறுகதையை எழுதினார். இந்தக்கதை மிகுந்த சர்ச்சைக்குள்ளாகியது. இந்த சிறுகதையிலிருந்து உருவான திரியே ‘சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற நாவலாக பரிணமித்தது.

‘அக்கினிபிரவேசம்’ கதையில் ஒரு மழை மாலையில் கல்லூரியிலிருந்து திரும்பி வரும் பதினேழு வயது சிறுமியின் அருகே ஒரு வாலிபன் தான் ஓட்டி வரும் காரை நிறுத்துகிறான். வீடு வரை கொண்டுவிடுவான் என்று நினைத்து அவள் ஏறிக் கொள்கிறாள். ஆனால் அவள் எதிர்பாராதவிதமாக அந்த வாலிபன் காரை தனியாக ஓர் இடத்திற்கு கொண்டு சென்று அவளை ஆட்கொள்கிறான். அழுதுகொண்டே சிறுமி வீடு வந்து சேர்கிறாள். ஒண்டிக்குடித்தனத்தில் வாழும் ஒடுக்கமான பிராமண விதவையான தாய் அவளை உடனே கிணற்றடிக்குக் கொண்டுபோய் தலையில் குடம் குடமாய் தண்ணீரை வாரி ஊற்றுகிறார். “யாருக்கும் விஷயம் தெரிய வேண்டாம், உனக்கும் அப்படி ஒன்றும் நடக்கவில்லை,” என்கிறாள். “இது தண்ணீர் இல்லை, அக்கினி என்று நினைத்துக்கொள், தீயில் குளித்து நீ சுத்திகரணமாகிவிட்டாய்" என்று சொல்லி தலையில் துண்டைப் போர்த்தி அவளை மீண்டும் வீட்டுக்குள் சேர்க்கிறார்.

கற்பு சார்ந்து தமிழ்ச்சமூகம் நம்பிவந்த ஒழுக்க மதிப்பீடுகளை நிலைகுலைத்ததாக இந்தக்கதை வெளிவந்த காலத்தில் அதிர்வலைகளை எழுப்பியது. ஆசாரவாத தரப்புகளிலிருந்து நிறைய எதிர்ப்புகள் வந்தன. ‘எனது மகளாக அவளை நினைத்து எழுதினேன். நீங்கள் உங்கள் மனைவியாக அவளை நினைக்கிறீர்களே’ என்று ஜெயகாந்தன் பதில் கூறினார். கதையின் முடிவை மாற்றி எழுதச் சொல்லி அவருக்குப் பல கோரிக்கைகள் வந்தன. இந்த கோரிக்கைகளுக்கு பதிலாக ஜெயகாந்தன் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவலை எழுதினார். ஒரு வேளை அந்தப் பெண்ணின் தாயார் அவளை மறுவார்ப்பு செய்து ஏற்கவில்லை என்றால் அவள் போக்கு எப்படி இருந்திருக்கும் என்ற கதையே ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலானது. இந்த நாவலின் நீட்சியாக ‘கங்கை எங்கே போகிறாள் என்ற நாவலை ஜெயகாந்தன் எழுதினார்.

கதைச்சுருக்கம்

அக்னிப்பிரவேசம்- விகடனில் வெளிவந்த வடிவம்

சென்னை நகரில் அதிகாரியாக வேலை பார்க்கும் திருமணமாகாத, முப்பது வயதைக்கடந்த கங்காவின் பார்வையில் சொல்லப்படுகிறது நாவல். வீட்டிலும், வெளியுலகிலும் சந்திக்கும் அனைத்து ஆண்களாலும் ஒரு பண்டப்பொருளாக பார்க்கப்படுகிறோம் என்ற கசப்புடன் கங்கா இருக்கிறாள்.

கங்காவுக்கு பதினேழு வயதாயிருந்த போது அக்கினிபிரவேசம் கதையின் நாயகியைப் போலவே ஓர் அனுபவம் நிகழ்கிறது. ஆனால் அழுது கொண்டே வீடு வந்து சேரும் கங்காவைக் கண்டதும் அவளுடைய அம்மா ஆர்ப்பாட்டப்படுத்தி ஊரைக் கூட்டுகிறார். அவளுடைய அண்ணன் கணேசன் அவளை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறான். தாய்மாமன் வெங்கடராமன் [வெங்கு மாமா] வீட்டில் தங்கி பட்டம் படித்து வேலைக்குப் போகிறாள்.

‘கெட்டுப் போனவள்' என்ற அடையாளம் கங்காவை சமூகரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பின்தொடர்கிறது. வெங்கு மாமாவின் ஆதரவிலிருக்கும் அவள் தொடர்ந்து அவர் சபலப் பேச்சுகளுக்கு ஆளாகிறாள். இது அவள் மனநிலையை பாதிக்கிறது. ஒரு கட்டத்தில் அவர் கங்காவின் தாய் கனகத்திடம் கங்கா தன்னை கெடுத்தவனையே தேடிக் கண்டுபிடித்து இவன்தான் என் புருஷன் என்று வாழட்டுமே, இந்து முறைப்படி அது காந்தர்வ மணம்தானே, என்று பேசுவதை கேட்டு அவனைத் தேடி அடைவதாக கங்கா முடிவு செய்கிறாள்.

சிறுமியாக இருந்த போது தன்னை காரில் ஏற்றிக் கொண்டு போன அந்த இளைஞனை கங்கா கண்டடைகிறாள். அவன் பெயர் பிரபு. இப்போது நடுவயது பணக்காரன். திருமணமாகி, ஒரு மகளுக்குத் தகப்பனான பின்பும், பொறுப்பில்லாத, குடி-பெண்கள் என்று ஊதாரித்தனமாக பணத்தை செலவிடுகின்ற, வெகுளியான குழந்தைத்தனமான ஆள் அவன் என்று கங்கா கண்டுகொள்கிறாள். அந்த மழை மாலையில் அவர்களுக்கு இடையே நடந்த சம்பவம் எத்தகையது, அது பலாத்காரமா, விருப்புடன் நடந்ததா என்று கங்கா அவனை கேட்கிறாள். அவனிடம் பதிலில்லை. எதற்கும் பொறுப்பேற்கக் கூடியவனல்ல அவன் என்ற புரிதலுக்கு கங்கா வருகிறாள். அதே சமயம் அவன் தீயவன் அல்ல, அவள் வாழ்க்கை அவ்வாறு ஆனதற்காக அவன் மிகவும் வருந்துவதையும் உணர்கிறாள்.

மெல்ல அவர்களுக்குள் ஒரு நட்பு உருவாகிறது. பிரபுவின் வெகுளித்தனத்துக்கு அருகே கங்கா தன்னை முதிர்ந்தவளாக, பலசாலியாக உணர்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாக அவனைத் தன் கணவனாக எண்ணத் தொடங்குகிறாள்.

ஆனால் பிரபு அவ்வுணர்வுகளை புரிந்து கொள்ளவில்லை. கங்காவின் அண்ணன் கணேசன் பிரபுவை சந்தித்து அந்த உறவு தொடர்ந்தால் அது கங்காவின் எதிர்காலத்தில் திருமணத்துக்கான சாத்தியத்தை பாதிக்கும் என்று சொல்ல, பிரபு அவளிடமிருந்து விலக ஆரம்பிக்கிறான். பதற்றத்தில் கங்கா அவனை தன்னுடன் வாழும்படி மன்றாடுகிறாள். பிரபு மறுக்கிறான். அவளிடமிருந்து முற்றாக விலகுகிறான். கங்கா மனம் திரிந்து குடிக்குள் இறங்கியவள் ஆகி தன்னைத் தானே அழித்துக்கொள்ளும் பாதையில் செல்லத் தொடங்குகிறாள்.

கதைமாந்தர்

  • கங்கா – கதைநாயகி. பிரபுவுடன் இளமையில் பாலுறவு கொள்ள நேர்ந்தவள்
  • கனகம் – கங்காவின் அம்மா
  • கணேசன் - கங்காவின் அண்ணன்
  • வெங்கு மாமா – கங்காவின் தாய்மாமா. அவளை படிக்கவைத்தவர். அவள்மேல் காமம்கொண்டவர்.
  • பிரபு – கங்காவை வல்லுறவுக்கு ஆளாக்கியவன், அவளை புரிந்துகொள்ளாதவன்
  • மஞ்சு – பிரபுவின் மகள்
  • பத்மா – பிரபுவின் மனைவி
  • விஸ்வநாதன் – கங்கா வல்லுறவு கொள்ளப்பட்ட செய்தியை கதையாக எழுதிய எழுத்தாளர்

உருவாக்கம்

ஆனந்த விகடனில் 1968-ல் வெளிவந்த ‘அக்கினிபிரவேசம்' சிறுகதையின் விரிவாக்கமாக இந்த நாவல் 1970-ஆம் ஆண்டு தினமணிக் கதிரில் வெளியானது. அக்கினிபிரவேசம் கதையில் கங்காவின் தாய் அவளை ஏற்றுக்கொள்ளும் முடிவு அன்றைய பொதுவாசகர் மத்தியில் சீற்றத்தை உருவாக்கியது. கற்பு நெறியை நிராகரித்து எழுதப்பட்ட சிறுகதை அது என விமர்சனம் எழுந்தது. முடிவை மாற்றி எழுத ஜெயகாந்தனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி கங்காவின் அம்மா அவளை ஏற்றுக்கொள்ளாத வகையில் கதையை அமைத்து விரித்து நாவலாக எழுதினார். அவருடைய நண்பர் சாவி ஆசிரியராக இருந்த தினமணி கதிர் இதழில் நாவல் வெளியானது.

அதே சமயம் அதன் பின்னான கதையின் போக்கில் எவ்விதமான வாசகர் சமரசமும் இருக்கக்கூடாது என்று ஜெயகாந்தன் கவனமாக இருந்தார். கதாபாத்திரங்களை அவரவர்களின் குணநலன்களின் படி பரிணமிக்கச்செய்து உரையாடவிட்டு நாவலின் முடிவை அடைந்ததாக தன் முன்னுரையில் குறிப்பிடுகிறார். ‘சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவல் கங்காவின் பரிபூரண வீழ்ச்சியில் முடிகிறது. இந்த முடிவும் பொது வாசகர்களுக்கு உவப்பானதாக இல்லை. கதாபாத்திரங்களின் இயல்பான நகர்வை பின் தொடர்ந்ததில் அந்த முடிவைத்தான் தான் எட்டியதாக எழுதுகிறார்.

நூல் பின்புலம்

‘காலங்கள் மாறும்' என்ற தலைப்பில் தொடராக வெளிவரத்தொடங்கிய ‘சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவல் தமிழ்ச் சமூகத்தில் ஒரு முக்கியமான காலகட்ட மாற்றத்தின் முனையில் இடம் பெறுகிறது. மரபாக தமிழ்ப்பெண்கள் தத்தம் ஜாதிப்புலங்களில் புழங்கி வீட்டுக்குள் வாழ்ந்து மறைந்து வந்த வேளையில் பெண்களுக்கான கல்வியும் வேலை வாய்ப்பும் அமைய அவர்கள் தங்கள் வீடுகளை ஜாதி ஆசாரங்களை விட்டு வெளிவரத் தொடங்கினார்கள். அந்த கால மாற்றத்தின் அலையில் சிக்குண்ட ஒரு தனி மனிதர் தன்னுள் உறைந்திருக்கும் கலாச்சார மதிப்பீடுகளையும் தன் சொந்த உளவியல் விசைகளையும் ஏற்றிகொள்ளும் விதத்தை ஆராயும் விதமாக நாவல் படைக்கப்பட்டுள்ளது.

நாவலின் நாயகி கங்கா பிராமண சமூகத்தைச் சேர்ந்தவளாக சித்தரிக்கப்படுகிறாள். அவர் பார்வையில் விரியும் மொத்த நாவலும் அவள் பேச்சுவழக்கிலேயே இடம் பெறுகிறது. 1970-ல் வெளியான நாவல் அந்த காலகட்டத்திலேயே இடம்பெறுவதாக அமைந்துள்ளது. அந்த காலத்தின் சென்னை நகரம், பிராமண ஒண்டுக்குடித்தன குடும்பம், அதன் மனிதர்கள் எல்லாம் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

இலக்கிய இடம், மதிப்பீடு

‘சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவல் வெளியான காலத்தில் சீரிய இலக்கிய விமர்சகர்களால் அதிகம் கவனத்திற்குள்ளாகாமல் இருந்தது. இதற்கு இரண்டு முக்கியமான காரணங்களை விமர்சகர்கள் சொல்கிறார்கள். ஒன்று, அது தினமணி கதிர் போன்ற வெகுஜன வாசகர்களை நோக்கி பதிக்கப்பட்ட இதழில் வெளியானது. இரண்டு, அன்றைய விமர்சகர்கள் நுட்பாமான விஷயங்களை பேசிய, அதிகம் கவனிக்கப்படாத படைப்புகளே இலக்கியம் என்ற நிலைப்பாட்டில் இருந்தனர்.

அதே சமயம் வெகுஜன வாசகர்கள் மத்தியில் நாவலுக்கு ஏகோபித்த வரவேற்பு என்பதும் அமையவில்லை. கற்பை இழந்த பெண்ணின் பிரச்சனைகளாகவே அந்த நாவல் வாசிக்கப்பட்டது. அந்த வாசகர்களுக்கு கங்காவின் முடிவில் இருந்த உக்கிரம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. முடிவை மாற்றச்சொல்லி ஜெயகாந்தனுக்குக் கடிதங்கள் எழுதினார்கள். ஜெயகாந்தன் தொடர்ந்து இந்த வகையான வாசகர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தார். கதைமாந்தரின் போக்குப்படிதான் கதை நிகழும், அதில் தான் சமரசம் செய்ய முடியாது என்று உறுதியாக இருந்தார். அகல்யையின் சபலத்தையும், சீதையின் படிதாண்டுதலையும் கணக்கில் கொள்ளாமல் இதிகாசம் இல்லை என்றார். ஒரு நாவல் வாசகருக்கு பிடித்தும், பிடிக்காமலும் இருக்க அந்த காலமும் சூழலும் கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்றும், இன்று புரிந்து கொள்ளப்படாத நாவல் நாளை புரிந்து கொள்ளப்படலாம் என்றும் அவர் நூல் முன்னுரையில் எழுதினார்.

பின்னாளில் அவர் முன்னறிவித்தபடியே அதற்கான வாசகர்கள் உருவாகி வந்தார்கள். விமர்சகர்களின் பார்வையில் இந்த நாவல் மறுவரையறை செய்யப்பட்டது. இது ஒரு யுகசந்தியின் கதை, ஒரு காலமாற்றத்தின் பின்னணியில் நிகழும் ஒரு பெண்ணின் கதை என்று விமர்சகர்கள் எழுதினார்கள். ஒரு பெண்ணின் உளவியலைச் சொல்லும் கதை மட்டும் அல்ல, அவள் தனித்தன்மையை, அவள் காதலைச் சொல்லும் கதை என்றார்கள். ஒரு பெண் தன் ஆணை கண்டுகொள்ளும் காதல் கதையாகவும் இது வாசிக்கப்பட்டது. அவள் பாலியல் உரிமையையும் தேடலையும் சொல்லும் கதை என்ற வாசிப்புகளும் உருவாயின. பெண்ணின் ஆதாரமான துயரையும் தனிமையையும் சித்திரித்த காவியங்களின், பேரிலக்கியங்களின் நிரையோடு ஒப்பிடப்பட்டது. அந்த வகையில் இது ஒரு கிளாசிக் என்று கருதப்படுகிறது.

சமூகத் தாக்கம்

சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் திருமணத்திற்கு முன்னால் ஒரு தமிழ்ப்பெண்ணுக்கு ஏற்படும் பாலியல் அனுபவம் பற்றியது. பெண்ணின் பாலியல் ஒழுக்கவியல் சார்ந்தே இந்த நாவலை ஒட்டிய ஆரம்பக்கட்ட விவாதங்கள் பலவும் அமைந்தன. குறிப்பாக தமிழ் கலாச்சார மனம் பேணி வரும் ‘கற்பு' என்ற விழுமியம் இந்த நாவல் வழியாக பார்க்கையில் என்னவாகிறது என்று விவாதிக்கப்பட்டு சர்ச்சையானது. கற்பிழந்த பெண்ணின் துயரங்கள் என்றே கங்காவின் கதை வாசிக்கப்பட்டது.

இந்த நாவலின் வாசிப்பில் பெரிதும் பேசப்பட்ட ஓர் அம்சம், கங்கா-பிரபுவுக்கு இடையே நடக்கும் பாலியல் உறவில் இருந்த சம்மதம், அல்லது சம்மதமில்லாமை. ஜெயகாந்தன் அந்த நிகழ்வை ஒற்றைப்படையாகச் சித்தரிக்கவில்லை. பிரபு கங்காவை வற்புறுத்துவதில்லை, வலுவால் வெல்வதில்லை. கங்காவை பேதையும் அறியாமையும் கொண்ட, ‘அம்மன் சிலை போன்ற' சிறுமியாக காட்டுகிறார். அதே சமயம் அவளுக்கு பிரபுவின் கார், அந்தச் சூழல் எல்லாமே புதுமையாகவும், சொகுசாகவும் இருப்பதாக எழுதுகிறார். நிகழ்வுக்குப்பின் கங்கா அழுது கொண்டே வீடு திரும்பினாலும் இறுதி வரை அவள் பிரபு அவளுக்குக் கொடுத்த சூயிங்கம்மை மென்று கொண்டிருக்கிறாள் என்று விமர்சகர்கள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். ஆகவே அந்த நிகழ்வு கங்காவின் சம்மதத்தோடு நடந்ததா இல்லையா என்பது நாவலில் ஒரு மௌனப்புள்ளி. அது நாவலுக்குள்ளேயே கங்காவின் உளவியலுக்கே பிடிகிடைக்காத புள்ளியாக இருக்கிறது.

2018-இல் தமிழ்நாட்டில் மீ டூ அலை எழுந்தபோது இந்த நாவலில் ‘சம்மதம்' கையாளப்பட்டவிதம், மீண்டும் விவாதிக்கப்பட்டது. நாவலில் கங்கா அத்தருணத்தில் பாலியல் உணர்வை அடைந்தாலும், அது விருப்பத்தையோ இணக்கத்தையோ சுட்டவேண்டிய அவசியமில்லை என்று கூறப்பட்டது. இதை ஒட்டி பின்-அமைப்பியல் பெண்ணிய அணுகுமுறையின் அடிப்படையில் நாவலை ஆராய்ந்து கட்டுரைகள் எழுதப்பட்டன.

திரைப்பட வடிவம்

சில நேரங்களில் சில மனிதர்கள் ஏ. பீம்சிங் இயக்கத்தில், லட்சுமி, ஸ்ரீகாந்த், நாகேஷ், சுந்தரிபாய், ஒய்.ஜி. பார்த்தசாரதி நடித்து 1975-ல் திரைப்படமாக வெளிவந்தது. இந்தத் திரைப்படத்தில் ஜெயகாந்தன் ஒரு பாடலையும் - "கண்டதைச் சொல்லுகிறேன்" - எழுதி உள்ளார்.

மொழியாக்கம்

ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்' கே.எஸ்.சுப்ரமணியனின் ஆங்கில மொழியாக்கத்தில் வெளியானது. Of Men and Moments - KS Subramanian

சி.ஏ.பாலன் மொழியாக்கத்தில் மலையாளத்தில் வெளிவந்துள்ளது [சில சமயங்களில் சில மனுஷ்யர்]

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.