சிற்ப சாத்திரங்களில் சிவ தாண்டவ மூர்த்தங்கள்

From Tamil Wiki
Revision as of 21:09, 13 April 2022 by Navingssv (talk | contribs) (Created page with "thumb|''ஊர்த்துவ தாண்டவம்'' ஸ்ரீ தத்துவநிதி, பரத சூடாமணி, பரதசார சங்கிரகம், சிற்ப ரத்தினமும் காசியப சிற்ப நூலும் சிவ தாண்டவங்களை வெவ்வேறு வகையில் வகைப்படுத்த...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ஊர்த்துவ தாண்டவம்

ஸ்ரீ தத்துவநிதி, பரத சூடாமணி, பரதசார சங்கிரகம், சிற்ப ரத்தினமும் காசியப சிற்ப நூலும் சிவ தாண்டவங்களை வெவ்வேறு வகையில் வகைப்படுத்துகின்றன. இந்த பக்கத்தில் அந்த தாண்டவங்களையும் அவற்றின் விளக்கங்களையும் காணலாம்.

சிற்ப சாஸ்திர நூல்கள்

ஸ்ரீ தத்துவநிதி
ஆனந்த தாண்டவம்

இந்நூல் ஏழு வகை சிவ தாண்டவங்களைக் குறிப்பிடுகின்றன.

  • ஆனந்தத் தாண்டவம்
  • சந்தியா தாண்டவம்
  • உமா தாண்டவம்
  • கெரி தாண்டவம்
  • காளிகா தாண்டவம்
  • திரிபுர தாண்டவம்
  • சங்கார தாண்டவம்
பரத சூடாமணி

இந்நூல் பஞ்ச கிருத்தியத் தாண்டவங்களை சிவபெருமான் ஆடினார் என்று குறிப்பிடுகிறது. இப்பெயர்கள் தாண்டவங்களின் பயன்களைப் பற்றியும் அவற்றின் சுவைகளைப் பற்றியும் விளைந்தன.

  • அகோர தாண்டவம்
  • ஊர்த்துவ தாண்டவம்
  • ஆச்சர்ய தாண்டவம்
  • ஆனந்தத் தாண்டவம்
  • செந்தர்ய தாண்டவம்
பரதசார சங்கிரகம்

ஐந்து தாண்டவங்களாக,

  • அற்புதத் தாண்டவம்
  • அநவரத தாண்டவம்
  • ஆனந்தத் தாண்டவம்
  • பிரளய தாண்டவம்
  • சங்கார தாண்டவம்

ஆகியவற்றை இந்நூல் குறிப்பிடுகிறது.

சிற்ப ரத்தினமும், காசியப சிற்ப நூலும்

இந்நூல் ஒன்பது வகைத் தாண்டவங்களின் இலக்கணங்களைக் குறிப்பிடுகின்றது. ச. தண்டபாணி தேசிகர் தம் இந்து சமயக் கடவுளின் திருவுருவங்கள் நூலில் இத்தாண்டவங்களுக்கு இசைந்த பெயர்களைத் தருகிறார்.

  • முதல் வகை நடனத்தில் சிவன் நான்கு கைகளுடன் இருப்பார். முன் இடக்கை தண்ட முத்திரையிலும், பின் இடக்கை தீ ஏந்தியும், முன் வலக்கை அபய முத்திரையிலும், பின் வலக்கையில் உடுக்கையும் அமையப் பெற்றிருக்கும். இதில் பின் இடக்கையில் தீயை ஏந்தி இருக்கலாம் அல்லது தீயை வைத்திருக்கும் பாத்திரத்தை ஏந்தியிருக்கலாம். வலக்கால் சிறிது வளைந்து முயலகன் முதுகின் மீது இருக்க இடக்கால் தூக்கிய நிலையில் காணப்படும். தலையில் உள்ள சடைமகுடத்தில் கொன்றை, ஊமத்தம் போன்ற மலர்களும், பாம்பும், அணிகலன்களும், மண்டையோடும், மூன்றாம் பிறை திங்களும் இருக்கும். நடனம் ஆடுவதால் சடை முடியினின்று இரு புறமும் 5,6,7 அல்லது 11 சடைகள் பறப்பதைப் போன்று காட்டப்படும். அவ்வாறு பறக்கும் சடைகள் நேராக அல்லது வளைந்தும் இருக்கும். இவ்வகை தாண்டவ வடிவத்தில் சிவன் மலர்ந்த முகத்துடன் முழுநீறு பூசிய மேனியுமாக இருப்பார். புலித்தோல் ஆடை அணிந்து அடியில் முயலகனை கொண்டிருப்பார். முயலகன் முகம் சிவபெருமானது காலடியில் வலப் புறமாக இருக்கும்படி சிவபெருமான் காலடியில் படுத்து இருக்க வேண்டும். முயலகன் பாம்போடு விளையாடிக் கொண்டிருக்க, சிவன் அன்னை பார்வதியை இடப்புறம் கொண்டிருப்பார். இதுவே ஆனந்த நடனத்திற்கு உரிய அமைப்பு.
  • இரண்டாவது வகை நடனத்தில் சிவபெருமானது சடையில் கங்கை கூப்பிய கைகளுடன் வலப்புறமாகக் காட்டப்பட வேண்டும். இதனை கங்கா விசர்சன தாண்டவம் என்கின்றனர்.
  • மூன்றாவது வகை நடனத்தில் சிவபெருமானது இடக்கால் முயலகன் மீது இருக்க வலக் கால் தூக்கிய நிலையில் இருக்கும். இதனைக் கால் மாறி ஆடிய தாண்டவம் என்பர்.
  • நான்காவது வகை நடனத்தில் சிவனது கிரீட மகுடத்தைச் சுற்றிச் சடை வட்டமாகக் காண்பிக்கப்பட்டிருக்கும். இரண்டு, மூன்று மற்றும் நான்காவது வகை நடனம் முதல் வகையிலிருந்து சிறிது தான் வேறுபட்டிருக்கும்.
  • ஐந்தாவது வகை நடனத்தில் வலக் கால் தலையில் அணிந்துள்ள முடிவரை தூக்கி இருக்க இடக்கால் வளைந்து முயலகன் மீது இருக்கும். சிவபெருமான் எட்டுக் கைகள் கொண்டிருப்பார். வலக் கைகள் மூன்றில் சூலம், பாசம், உருக்கை இருக்க நான்காவது வலக்கையில் அபய முத்திரை ஏந்தியிருப்பார். இடக் கைகள் முன்றில் கபாலம், தீ, மணி இருக்க நான்காவது கை கச முத்திரையில் இருக்கும்.
  • ஆறாவது வகை நடனத்தில் சிவபெருமான் 16 கைகளுடன் இருப்பார். வலக் கை ஒன்று அபய முத்திரையில் இருக்க மற்ற கைகளில் உடுக்கை, வச்சிரம், சூலம், பாசம் ஆகியவை இருக்கும். இடக் கை ஒன்று கச முத்திரையில் இருக்க ஏனையவற்றில் தீ, வளையம், மணி, கத்தி, கபாலம் காணப்படும். சிவனுக்கு இடப்பக்கத்தில் பார்வதி கூப்பிய கைகளுடன் இருப்பாள். அவளது முகத்தில் வியப்பு, பயம், அன்பு ஆகியன வெளிப்படும். தந்தையின் அச்சம் விளைவிக்கும் நடனத்தைக் கண்டு பயந்த முருகன் அன்னையை அணைத்தவாறு இருப்பார். இத்தாண்டவம் ஊர்த்துவ தாண்டவ வகையைச் சார்ந்தது.
  • ஏழாவது வகை நடனத்தில் சிவன் எட்டுக் கைகள் கொண்டு மூன்று கண்களுடன் இருப்பார். ஐந்தாவது மற்றும் ஆறாவது வகை நடனங்களில் இரண்டு கண்கள் மட்டுமே இருக்க மற்ற வகையில் முக்கண்ணுடன் சிவன் இருப்பார். இடக்கால் முயலகன் மீது இருக்க வலக்கால் தலை வரையில் தூக்கி இருப்பார். வலக்கை ஒன்று அபய முத்திரையில் இருக்க மற்ற கைகளில் சூலம், பாசம் உடுக்கையுடன் இருப்பார். இடக்கைகள் இரண்டில் ஒன்று கச முத்திரையும் மற்றொன்று விஸ்மய முத்திரையும் கொண்டிருக்கும். மற்ற கைகள் கபாலம் மற்றும் தீயுடன் கூடிய பாத்திரத்தைக் கொண்டிருக்கும். தேவி இடப்பக்கம் இருப்பாள்.
  • எட்டாவது வகை நடனத்தில் எட்டுக் கைகளுக்குப் பதில் ஆறு கைகள் இருக்கும். வலக் கை ஒன்று அபய முத்திரை காட்ட மற்ற கைகள் உடுக்கையும், சூலமும் கொண்டிருக்கும். இடக்கைகள் இரண்டில் ஒன்று கச முத்திரையும் மற்றொன்று விஸ்மய முத்திரையும் கொண்டிருக்கும். இடப்பக்கம் மூன்றாவது கையில் கபாலம் காணப்படும்.
  • கடைசி வகை நடனத்தில் சிவனின் திருவுருவம் நான்கு கைகள், மூன்று கண்கள் கொண்டதாய் இருக்கும். தலையில் சடை மகுடம் காணப்படும். வலக்கை ஒன்று அபய முத்திரையிலும் மற்றொன்றில் உடுக்கையும் இருக்கும். இடக்கைகளில் கச முத்திரையும், தீயும் இருக்கும். இங்கே சிவனின் காலுக்கு கீழ் முயலவனுக்கு பதிலாக பீடம் இடம்பெற்றிருக்கும். வலக்காலின் பெருவிரலும் பீடத்தின் மீது இருக்கும்.

இந்த ஒன்பது வகை நடனங்களை தவிர மகா சங்கார தாண்டவம் என்ற ஒன்றையும் பத்தாவது வகையாக சிற்ப சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. உமா தேவியுடன் கை பிணைய நின்றாடும் தாண்டவத்தையும் சேர்த்துப் பத்தென்று கூறும் தமிழ்ச் சிற்ப நூல்களும் உண்டு.

உசாத்துணை

  • சிவ தாண்டவம் - இரா. இராமகிருஷ்ணன்