சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை

From Tamil Wiki
Revision as of 15:31, 28 February 2022 by Subhasrees (talk | contribs) (சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை - முதல் வரைவு)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை(ஜூன் 22, 1898) பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கர்னாடக இசைக் கலைஞர்.

பிறப்பு, கல்வி

சுப்பிரமணியன் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள புங்களூர் என்ற ஊரில் ஜூன் 22, 1898 அன்று நாயுடு குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை போனாரியா பிரபல வயலின் இசைக்கலைஞர், கதாகாலட்சேபம் செய்பவர். தாயும் இசைஞானம் உடையவர். இவர்களுக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தோர் மூவர்.

பதினாறு வயதில் நாயனாப் பிள்ளையிடம் குருகுலவாச முறையில் இசைப்பயிற்சி தொடங்கினார். 27ஆவது வயதில் சென்னைக்கு குடிபெயர்ந்தார்.

இசைப்பணி

மிகுந்த வறுமை நிலையில் இருந்த சுப்பிரமணியனை அவரது குரு நாயனாப் பிள்ளை உணவு உடை தந்து ஆதரித்து நான்கு வருடங்கள் இசையும் பயிற்றுவித்தார். நாயனாப் பிள்ளை கச்சேரிகளுக்கு தன்னோடு சுப்பிரமணியத்தையும் அழைத்துச் செல்வது வழக்கமாக இருந்தது. நாயனாப் பிள்ளையின் இயற்பெயர் சுப்பிரமணிய பிள்ளை. ஒரு முறை கச்சேரியின் அழைப்பில் அச்சிடும் போது சுப்பிரமணியத்துக்கும் தன் பெயரையே குறிப்பிடுமாறு நாயனாப் பிள்ளை குறிப்பிட்டார். அன்று முதல் சுப்பிரமணிய நாயுடு சுப்பிரமணிய பிள்ளை என்றே அறியப்பட்டார். மேலும் நாயனாப் பிள்ளை சுப்பிரமணிய பிள்ளையே தன்னுடைய இசைமுறையில் பாடிப் பெரும் புகழ் பெறுவார் என்று குறிப்பிடுவார்.

சித்தூர் சுப்பிரமணிய பிள்ளையும் தன் குருவைப் போல லயத்தில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அவருடைய இசையமைப்பின் நுட்பங்கள் அனைத்தையும் கற்று, நாயனாப் பிள்ளை போலவே பழைய கீர்த்தனைகளைத் தேடிக் கற்றுப் பாடுவதை வழக்கமாகக் கொண்டார்.

அபூர்வ ராகங்களை எடுத்து விரிவாகப் பாடுவது இவரது சிறப்பு. மூன்று காலங்களிலும்[1] சிறப்பாகப் பாடும் திறன் கொண்டவர்.

இசை மேடைகளில் பெரும்பான்மையும் அந்தணர்கள் மட்டுமே பெரும் புகழ் கொண்டிருந்த காலகட்டத்தில் இவர் வேறு பின்புலத்தில் (நாயுடு) இருந்து வந்து புகழ் பெற்றவர். இசையில் இவருக்கு தந்தையென இருந்த நாயனப் பிள்ளை இசை வேளாளர் குலத்தில் பிறந்தவர். தினமணி இதழ் 1946ல் வெளியிட்ட சங்கீத நவமணிகள் என்ற நூலில் இடம்பெற்ற ஒன்பது பேரில் இவர் ஒருவரே பிராமணர் அல்லாதவர்.

உசாத்துணை

தமிழ் இசை இலக்கிய வரலாறு - மு. அருணாசலம்

  1. 1) சவுக்க காலம் 2) மத்திம காலம் 3) துரித காலம்