சாண்டில்யன்

From Tamil Wiki
Revision as of 13:57, 19 January 2022 by Ramya (talk | contribs)

சாண்டில்யன் (நவம்பர் 10, 1910 - செப்டம்பர் 11, 1987) வாசகனை ஒரு கனவுலகத்துக்கு அழைத்துச் செல்லும் சாகச நாவல்களை தமிழ் இலக்கியத்திற்கு தந்தவர். வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட நாவல்களை எழுதியவர். இவருடைய நாவல்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.

தனிவாழ்க்கை

ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி ஆகியோருக்கு மகனாக நவம்பர் 10, 1910ம் ஆண்டு திருக்கோவிலூரில் பிறந்தார். அவருடைய இயற்பெயர் பாஷ்யம் அய்யங்கார். சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார். செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.

இலக்கிய வாழ்க்கை

கல்லூரிப் படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார். அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.

2009ல் தமிழக அரசு சாண்டில்யன் உட்பட்ட 28 எழுத்தாளர்களின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கவும் அவர்களின் வாரிசுகளுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கவும் முன்வந்தது. சாண்டில்யனின் வாரிசுகள் நாட்டுடைமையாக்குவதற்கு மறுத்து விட்டனர்.

திரைப்படத்துறை

ஹிந்துஸ்தான் டைம்ஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது விஜயா ஸ்டுடியோவின் பி.என்.ரெட்டி, நடிகர் சித்தூர்.வி. நாகையா இருவருடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பே இவர் திரைப்படத்துறையில் அடியெடுத்து வைக்க வழிவகுத்தது. சுவர்க்க சீமா (1945), என் வீடு (1953) ஆகிய இரு திரைப்படங்களுக்கு திரைக்கதைகளை எழுத உதவினார். பிற்காலத்தில் தனது திரைப்படத்துறை அனுபவங்களை சினிமா வளர்ந்த கதை (1985) என்ற புத்தகமாக வெளியிட்டார். பெர்த் ஆஃப் நியூஸ்பேப்பர் என்ற ஆவணப்படமும் தயாரித்து வெளியிட்டார்.

புதினங்கள்

ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார்.

சாண்டில்யனின் கதையுலகம்

வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் மனநிலையின் கதை வடிவமே சாகசம் என்பது. அந்தக் காலகட்டத்தில் அதற்குரிய படைப்புகளுடன் வளர்வது ஆரோக்கியமான விஷயமே. அவருடைய நாவல்கள் பெரிய திரையில் விரிவுபடுத்தப்பட்ட சாகசக் குழந்தை இலக்கியங்களே அன்றி வேறல்ல. ஒரு குறிப்பிட்ட வயதில் சாண்டில்யனின் நாவல்களைப் படிப்பதென்பது அவசியமான விஷயமே ஆகும். அவை அழுத்தமாக மனத்தில் பதியவைக்கும் செய்திகள் தன்னம்பிக்கையும், சுயமுயற்சியின் முக்கியத்துவமும், நட்பும்தான். இளஞ்செழியன் டைபீரியஸ் உறவு (யவன ராணி) நம் மனத்தை எந்த அளவுக்குக் கொள்ளை கொண்ட ஒன்று! சாண்டில்யன் படைப்புகளில் வால்டர் ஸ்காட், அலக்ஸாண்டர் டூமா ஆகிய மேற்கத்திய சாகசப் படைப்பாளிகளின் பாதிப்பு உண்டு. ஆனாலும், அவற்றின் வரலாற்று ஐதீகப் பின்புலம் அவற்றை நம் மண்ணுடன் பிணைக்கிறது. அவரது கதைகூறல் நம் தொல் மரபு பற்றிய பெருமித உணர்வை உருவாக்கும் தன்மை கொண்டது. நம்முடைய இறந்த காலத்தின் சிறந்த விஷயங்களை அது நமக்குக் காட்டுகிறது. அவரது பெரும்பாலான படைப்புகளில் வில்லன்கள் இல்லை. வரலாற்றுக் கதாபாத்திரங்களும் கற்பனையான வீரர்களும் மட்டுமே உள்ளனர். அவை ஒவ்வொன்றும் குறையாத மாண்புடன் மாத்திரமே சித்திரிக்கப்படுகின்றன. கதாபாத்திரங்கள்கூட ஒருவருக்கொருவர் அதே மரியாதையைக் கொண்டுள்ளனர். சாண்டில்யனின் பாணியிலான சாகச எழுத்து இத்தகைய வரைமுறை மீறலுக்குப் பண்பாடு சார்ந்த ஒரு வடிகாலை அமைத்துத் தருகிறது. ஒரு கையில் உருவிய வாளுடனும் மறு கையில் அரை நிர்வாணமான பூவழகியுடனும் கப்பலில் பாய்ந்து ஏறும் இளஞ்செழியனுடன் நாம் நம்மை அடையாளம் கண்டுகொள்கிறோம். நம்முடைய வன்முறைக்கும் காமத்துக்கும் ஓர் இனிய வெளிப்பாடாக அது அமைகிறது. சாகச நாவல், வாசகனை ஒரு கனவுலகத்துக்கு எடுத்துச் செல்வதன் மூலம், வன்முறையையும் காமத்தையும் மரபான அறநெறியுடன் பிணைத்துவிடுகிறது. இளமையின் ஒரு கட்டத்தில் அது அவசியமானதே ஆகும்.

படைப்புகள்

வரலாற்றுப் புதினங்கள்

  • கடல் புறா
  • யவன ராணி
  • ராஜ முத்திரை
  • விஜய மகாதேவி
  • பல்லவ திலகம்
  • விலை ராணி
  • மன்னன் மகள்
  • ராஜ திலகம்
  • ஜல தீபம் (3 பாகங்கள்)
  • கன்னி மாடம்
  • சேரன் செல்வி
  • கவர்ந்த கண்கள்
  • மலை வாசல்
  • ஜீவ பூமி
  • மஞ்சள் ஆறு
  • மூங்கில் கோட்டை
  • சித்தரஞ்சனி
  • மோகினி வனம்
  • இந்திர குமாரி
  • இளைய ராணி
  • நீள்விழி
  • நாக தீபம்
  • வசந்த காலம்
  • பாண்டியன் பவனி
  • நாகதேவி
  • நீல வல்லி
  • ராஜ யோகம்
  • மோகனச் சிலை
  • மலை அரசி
  • கடல் ராணி
  • ஜலமோகினி
  • மங்கலதேவி
  • அவனி சுந்தரி
  • உதய பானு
  • ராஜ்யஸ்ரீ
  • ராஜ பேரிகை
  • நிலமங்கை
  • சந்திரமதி
  • ராணா ஹமீர்
  • அலை அரசி
  • மலை வாசல்
  • கடல் வேந்தன்
  • பாலைவனத்துப் புஷ்பம்
  • சாந்நதீபம்
  • மண்மலர்
  • மாதவியின் மனம்
  • பல்லவ பீடம்
  • நீலரதி


சமூகப் புதினங்கள்

  • நங்கூரம்
  • செண்பகத் தோட்டம்
  • மனமோகம்
  • மதுமலர்

அரசியல் புதினம்

  • புரட்சிப் பெண்

கதைகள்

ராணியின் கனவு

உசாத்துணை

நவீன தமிழ் இலக்கைய வரலாறு: ஜெயமோகன்