under review

சரோஜா ராமமூர்த்தி

From Tamil Wiki
Revision as of 09:07, 19 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected section header text)
சரோஜா ராமமூர்த்தி (நன்றி: அரவிந்த் சுவாமிநாதன்)
முத்துச்சிப்பி
சரோஜா ராமமூர்த்தி கதை. 'சக்தி’ இதழில் 1943

சரோஜா ராமமூர்த்தி (ஜூலை 27, 1921 - 1991) (ஸரோஜா ராமமூர்த்தி) தொடக்க கால நவீனத்தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர். இவருடைய நூல்களை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியது.

வாழ்க்கைக் குறிப்பு

ஜூலை 27, 1921-ல் பிறந்தார். சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டார். இவரது குடும்பமே எழுத்தாளர் குடும்பம். கணவர் து. ராமமூர்த்தியும், மகன்கள் ரவீந்திரனும், ஜெயபாரதியும் எழுத்தாளர்கள். ஜெயபாரதி 'குடிசை' என்ற படத்தை இயக்கினார்.

அரசியல் வாழ்க்கை

சரோஜா ராமமூர்த்தியும் அவர் கணவர் து.ராமமூர்த்தியும் காந்தியத்தில் ஈடுபாடு கொண்டவர்கள். காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் ஈடுபட்டு சிறைசென்றவர்கள். இருவரும் காந்தியின் வார்தா ஆசிரமத்தில் இருந்திருக்கிறார்கள். சுதந்திரத்துக்குப்பின் கிராமநிர்மாணப் பணிகளில் ஈடுபட்டார்கள்.

இலக்கிய வாழ்க்கை

இளம் வயதிலேயே எழுத ஆரம்பித்தார். "பிருந்தையின் அருள்" சிறுகதை மங்கை இதழில் 1947-ல் வெளிவந்தது. இவரது முதல் நாவல் 'மனைவி' அக்டோபர், 1946-ல் கலைமகள் இதழில் தொடராக வெளியாகிப் பின் 1947-ல் நூலாக வெளியானது. 'முத்துச்சிப்பி’ , 'பனித்துளி’, 'இருளும் ஒளியும்' போன்றவை இவரது பிற நாவல்கள். சுதேசமித்திரன், ஆனந்தவிகடன், கல்கி, மங்கை, சக்தி, கலைமகள், நவசக்தி, காதல், அமுதசுரபி, தினமணி சுடர், போன்ற இதழ்களில் குறிப்பிடத்தகுந்த சிறுகதைகளை எழுதினார். 'சௌந்திரம்’, 'குடும்பக்காட்சி’, 'ஆகி வந்த படம்’, 'பிள்ளை வளர்ப்பு', 'பார்வதி’, 'யாருடைய சித்தம்’, 'ரங்கத்தின் ஆவி' போன்றவை இவரது முக்கியமான சிறுகதைகள். இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு, 'நவராத்திரிப் பரிசு', 'குழலோசை முதலிய கதைகள்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ளன. 'அன்னை', 'மாளவிகா' , 'இரு கதைகள்’ , 'நெஞ்சு பொறுக்குதில்லையே' போன்றவை இவரது பிற படைப்புகள். 'கல்கி' இதழில் சிறுகதைகள் பல எழுதினார்.

திரைவாழ்க்கை

எம்.ஜி.ஆர், பத்மினி நடித்த "விக்கிரமாதித்தன்" படத்தின் திரைக்கதையின் ஒரு பகுதியை இவர் எழுதினார். இவரது படைப்புகளை தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியது.

இலக்கிய இடம்

சரோஜா ராமமூர்த்தி பற்றி அம்பை, " சரோஜா ராமமூர்த்தி . முப்பதுகளின் இறுதி ஆண்டுகளில் எழுத ஆரம்பித்து எதிர்க் கேள்விகளை தைரியமாகக் கேட்டவர். தொடர்ந்து எழுதியவர். 16 வயதில் சரோஜா தன் முதல் கதையை எழுதினார்" என்கிறார். சரோஜா ராமமூர்த்தியின் கதைகள் இந்திய சுதந்திரப்போராட்ட கால மனநிலைகளை காட்டுபவை. மரபை அதன் விழுமியங்களை மீறாமல் சீர்திருத்தம் செய்யும் நோக்கம் கொண்டவை.சமூக விடுதலையையும், தனிமனிதனின் அகவிடுதலையையும் பற்றிய காந்திய பார்வையை முன்வைப்பவை.

மறைவு

1991-ல் , சரோஜா ராமமூர்த்தி காலமானார்

நினைவுகள்

சரோஜா ராமமூர்த்தியின் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன

நூல்கள்

நாவல்
சிறுகதைகள்

உசாத்துணை


✅Finalised Page