சரஸ்வதி ராம்நாத்

From Tamil Wiki
Revision as of 19:42, 30 January 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "சரஸ்வதி ராம்நாத் (1925 -2000) தமிழில் இந்தியிலிருந்து மொழியாக்கங்களைச் செய்து வரும் எழுத்தாளர். பிரேம்சந்த், அமிர்தா ப்ரீதம் போன்றவர்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். பிறப்பு,கல்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சரஸ்வதி ராம்நாத் (1925 -2000) தமிழில் இந்தியிலிருந்து மொழியாக்கங்களைச் செய்து வரும் எழுத்தாளர். பிரேம்சந்த், அமிர்தா ப்ரீதம் போன்றவர்களை மொழியாக்கம் செய்திருக்கிறார்.

பிறப்பு,கல்வி

சரஸ்வதி ராம்நாத் கோவை மாவட்டம் தாராபுரத்தில் 7 செப்டம்பர் 1925 ல் பிறந்தார். காந்தியவாதியான அவருடைய தந்தையின் சேகரத்தில் இருந்து பல நூல்களைச் சிறு வயதிலிருந்தே வாசிக்க ஆரம்பித்தார்.

இலக்கிய வாழ்க்கை

சரஸ்வதியின் மொழிபெயர்ப்புப் பணியைத் தினமணி கதிரின் அன்றைய ஆசிரியர் துமிலன் ஊக்குவித்தார். தினமணியில் வெளிவந்த ‘ராஜநர்த்தகி' என்ற நாவலின் மொழிபெயர்ப்புதான் சரஸ்வதியின் முதல் தொடர். தொடர்ந்து சுதேசமித்திரன், தீபம், தாமரை, கலைமகள் எனப் பல இதழ்களிலும் அவருடைய மொழிபெயர்ப்புகள் வெளியாகத் தொடங்கின.

அம்ரிதா பிரீதம் பஞ்சாபியில் எழுதிய ‘ராதையுமில்லை ருக்மிணியுமில்லை', ஸ்ரீலால் சுக்ல இந்தியில் எழுதிய ‘தர்பாரி ராகம்', தாராசங்கர் பானர்ஜி வங்க மொழியில் எழுதிய ‘சப்தபதி', கே.எம். முன்ஷி இந்தியில் எழுதிய ஜெயதேவன் அல்லது கூர்ஜரத்தின் செல்வன், கடைசி நூலாகப் பிரேம்சந்தின் ‘கோதான்' உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் சரஸ்வதி ராம்நாத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள்.

புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, நீல.பத்மநாபன், கி. ராஜநாராயணன், வண்ணதாசன், வண்ணநிலவன், பிரபஞ்சன் உள்ளிட்ட தமிழ் எழுத்தாளர்களின் நூற்றுக்கணக்கான படைப்புகளை இந்திக்குக் கொண்டு சென்றார்.‘ஜெயகாந்தன் கதைகள்’, ‘பாரதி லலித் நிபந்த்’ என்ற பெயரில் பாரதி படைப்புகள், ‘பவ்பதகி’ என்ற பெயரில் சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் போன்றவை இந்திக்கு அவர் கொண்டு சேர்த்த முக்கியத் தமிழ்ப் படைப்புகள்.சர்வதேசப் பெண்கள் ஆண்டையொட்டி ‘இந்தியப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்' என்ற மொழிபெயர்ப்பு நூலை அக்கறையுடன் தொகுத்து அளித்தார். ‘இளைஞர் மகாபாரதம்', ‘மலைநாட்டு நாடோடிக் கதைகள்' உள்ளிட்ட கதைகள், கங்கை, யமுனை, கோதாவரி, காவிரி போன்ற நதிகளைப் பற்றி தனித்தனி நூல்களைக் குழந்தைகளுக்கு எழுதியுள்ளார்

விருதுகள்

பல்வேறு இந்திய மொழிகளைச் சேர்ந்த சிறந்த நாடகங்கள் அடங்கிய ‘இந்திய மொழி நாடகங்கள்’ என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காக, சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதை 1993-ம் ஆண்டில் பெற்றார்.