சஞ்சாரம் (நாவல்)

From Tamil Wiki
Revision as of 18:02, 10 March 2022 by Dr.P.Saravanan (talk | contribs)
சஞ்சாரம் (நாவல்)

சஞ்சாரம் (2014) நாவல் நாதஸ்வரக் கலைஞர்களைப் பற்றியது. இதனை எழுதியவர் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். சாதிய அடிப்படையில் நாதஸ்வரக் கலைஞர்கள் ஒடுக்கப்பட்டவிதம், தொழில்நுட்ப வளர்ச்சியால் நாதஸ்வர இசை வளர்ச்சியில் ஏற்பட்ட தேக்கம் , தமிழக இசைவேளாளர்களின் பெருமைமிகு வாழ்வு மற்றும் காலவோட்டத்தில் அவர்களின் வாழ்வில் ஏற்பட்ட தாழ்வு போன்றனவற்றை வரலாற்று அடிப்படையிலும் புனைவின் ஓட்டத்திலும் இந்த நாவல் விளக்குகிறது. இந்த நாவலுக்காக 2018இல் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது.

பதிப்பு

சஞ்சாரம் நாவலை உயிர்மை பதிப்பகம் டிசம்பர் 2014இல் அச்சுப் பதிப்பாக வெளியிட்டது. அதன் பின்னர் தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டது.

ஆசிரியர்

சஞ்சாரம் நாவலை எழுதியவர் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். இவர் தமிழில் சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம்,குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு ஆகியவற்றை சினிமா, ஊடகம், இணையம் ஆகிய தளங்களில் எழுதி வருபவர். 2018இல் ‘சஞ்சாரம்’ நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றுள்ளார்.

கதைச்சுருக்கம்

ரத்தினமும் பக்கிரியும் இணைந்து நாதஸ்வரம் வாசிக்கின்றனர். ரத்தினம் மூத்தவர். திருமணமானவர். எல்லாவிதமான அவமானங்களையும் சகித்துக்கொள்பவர். பக்கிரி இளைஞர். திருமணமாகாதவர். தனக்கு ஏற்படும் அவமானங்களை உடனடியான நேர்செய்துவிட விரும்புபவர். சாதிய நோக்கிலும் கலையைக் கீழ்மை செய்யும் நோக்கிலும் தான் அடைந்த அவமானத்தை நேர்செய்ய நேர்கையில் சில உயிர்கள் பலியாவதற்குக் காரணமாகிவிடுகிறார். இவர்கள் இருவரையும் காவல்துறை தேடுகிறது. பல ஊர்களுக்குத் தப்பியோடுகின்றனர். இறுதியில் அகப்படுகின்றனர். தண்டனை பெறுகின்றனர். இவர்கள் தலைமறைவாக வாழும் வாழ்க்கையின் வழியாக நாதஸ்வரக் கலையும் நாதஸ்வரத்தில் கோலோச்சிய கலைஞர்களும் அவர்களின் பெருமைமிகு வாழ்வும் காட்டப்படுகின்றன. மூதூர், அரட்டானம், டெல்லி, கரிசக்குளம், உறங்காப்பட்டி, ஒதியூர், மருதூர், அருப்புக்கோட்டை, சித்தேரி, கலிபோர்னியா, கொடுமுடி, பனங்குளம், சென்னை, லண்டன், சோலையூர், காரியாப்பட்டி, பொம்மக்காபுரம், நாரைக்குளம், திருச்சுழி, நடுக்கோட்டை கோயமுத்தூர், வேப்பங்காடு, புதுக்குடி, மதுரை, தொடுமாக்கல்-தென்மலை, மருதூர் எனப் பல ஊர்களில் இந்த நாவலின் கதை நிகழ்கிறது.

கதைமாந்தர்கள்

ரத்தினமும் பக்கிரியும் இந்த நாவலின் முதன்மைக் கதைமாந்தர்களாகவும் ரத்தினத்தின் அக்கா குடும்பத்தினரும் பக்கிரியின் மனைவி, பிள்ளைகள், பிற கலைஞர்கள் முதலியோரும் துணைமைக் கதைமாந்தர்களாகவும் இடம்பெற்றுள்ளனர்.

இலக்கிய மதிப்பீடு

தமிழில் இசைவேளாளர்களைப் பற்றி எழுதப்பட்ட நாவல்களாக தி. ஜானகிராமனின் ‘மோகமுள்’, யுவன் சந்திரசேகரனின் ‘கானல்நதி’ ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அவை அந்தக் கலைஞர்களின் அக, புற வாழ்வை எடுத்துரைக்கின்றன. அவர்கள் புழங்கும் தளத்தில் அவர்களுக்கு எதிராக (குறிப்பாக கருத்தியல் அடிப்படையில்) இருப்பவற்றை முன்னிறுத்தி அந்த நாவல்கள் பேசின. அந்த வரிசையில் இந்த ‘சஞ்சாரம்’ நாவலையும் நாம் இணைத்து நிறுத்த முடியும். ஒருகாலத்தில் நாதஸ்வரக் கலைஞர்களுக்குப் பெரிய மதிப்பும் மரியாதையும் இருந்துள்ளன. ஆனால், தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் மக்களின் பொருளாதாரச்  சிக்கன நடவடிக்கைகளும் இந்த மதிப்பையும் மரியாதையையும் இந்தக் கலைஞர்களுக்குக் கொடுக்கத் தடையாக இருந்துவிட்டன. ‘மீண்டும் இந்தக் கலைஞர்களுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் கிடைக்குமா?’ என்ற வினா நம் மனத்துள் விடையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. அதனோடு, ‘இனி, இந்த நாதஸ்வரத்தைக் கற்றுக்கொள்ள யார் முன்வருவார்கள்? யார் இதனைத் தொடர்ந்து இசைக்கப் போகிறார்கள்? யார் இதனை விரும்பிக் கேட்டு ரசிக்கப் போகிறார்கள்?’ என்ற வினாக்களும்  இணைந்து கொள்கின்றன. வாசகர்களுக்குக் கலையின் மீதும் கலைஞர்களின் மீதும் கழிவிரக்கத்தை ஏற்படுத்தவல்ல நாவல் என்ற முறையில் இந்த நாவல் முதன்மையானதாகிறது.

உசாத்துணை

சஞ்சாரம் நாவல் பற்றிய விமர்சனங்கள்

இணைப்புகள்

சஞ்சாரம் நாவல் பற்றி எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் பேட்டி