க. அ. செல்லப்பன்

From Tamil Wiki
Revision as of 21:22, 8 February 2024 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பாரி நிலையம் க.அ. செல்லப்பன்

க. அ. செல்லப்பன் (அடைக்கப்பச் செட்டியார் செல்லப்பன்; பாரி நிலையம் செல்லப்பன்; பாரி செல்லப்பனார்) (ஜூலை 19, 1920 - 2006) தமிழக பதிப்பாளர். 1946-ல், பாரி நிலையம் என்ற பதிப்பகத்தைத் தொடங்கி நடத்தினார். பாரி நிலையம் செல்லப்பன் என்றும், பாரி செல்லப்பனார் என்றும் அழைக்கப்பட்டார். தமிழிலக்கியவாதிகள், தமிழறிஞர்கள், கவிஞர்கள், திராவிட இயக்கத்தவர்கள் எனப் பலரது நூல்களை வெளியிட்டார். முன்னோடிப் பதிப்பாளர்களுள் ஒருவர்.

பிறப்பு, கல்வி

க. அ. செல்லப்பன், புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில், ஜூலை 19, 1920 அன்று, அடைக்கப்பச் செட்டியார் - அழகம்மை ஆச்சி இணையருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள்; ஒரு தம்பி. செல்லப்பன், அரிமளத்தில் உள்ள திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார். தந்தை பர்மாவில் வணிகம் செய்ததால் பர்மாவுக்குச் சென்று அங்கு எட்டாம் வகுப்பு வரை படித்தார். ஜப்பானியப் போர் காரணமாகத் தமிழகம் திரும்பினார். கல்வியைத் தொடரவில்லை.

தனி வாழ்க்கை

க. அ. செல்லப்பன், பர்மாவில் வணிகம் செய்த தந்தைக்கு உதவியாளராகப் பணியாற்றினார். ஜப்பானியப் போரினால் தமிழகம் திரும்பினார். சௌத் இந்தியன் கார்ப்பரேஷன், ஜின்னிங் ஃபாக்டரியில் சில ஆண்டுகள் பணிபுரிந்தார். பின் பதிப்பகத் துறையில் ஈடுபட்டார். மணமானவர்.