க. அனந்தசுப்பையர்

From Tamil Wiki

க. அனந்தசுப்பையர் தமிழறிஞர். சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். வண்ணைநகர் தையல்நாயகி கலிவெண்பா மற்றும் திருவூடல் தொகுப்பு முக்கியமான படைப்புகள்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை யாழ்ப்பாண நகரப்பகுதியான வண்ணார்பண்ணையில் கணேசையருக்கு மகனாக அனந்தசுப்பையர் பிறந்தார். மகன் ஆதிநாராயணன்.

இலக்கிய வாழ்க்கை

வைத்திலிங்கச் செட்டி ஆசிரியரிடத்தில் கல்வி பயின்றார். தந்தை கணேசையர் வித்துவசிரோமணி பொன்னம்பலப் பிள்ளையின் நேரடி மாணவன். அனந்தசுப்பையரும் நேரடித் தொடர்பில் இருந்து கற்றார். வண்ணைநகர் தையல்நாயகி மீது கொண்ட பக்தியால் கலிவெண்பா, திருவூஞ்சல் ஆகிய சிற்றிலக்கிய வகைமைகள் கொண்டு தையல்நாயகியை பாட்டுடைத் தலைவியாகக் கொண்டு பாடியுள்ளார்.

சிவபெருமான் மீது சிவகாமி கொண்ட ஊடலை திருவூடல் என்பர். அனந்தசுப்பையர் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை வைத்தீசுவரர் ஆலயத்தில் மார்கழி மாதத் திருவாதிரையிலே ஓதப்படும் திருவூடல் தொகுத்து வெளியிட்டார்.

அனந்தசுப்பையர் பாடிய தையல்நாயகி திருவூஞ்சல் (காப்பு உட்பட) மொத்தம் ஒன்பது பாடல்களைக் கொண்டது. இவ்வூஞ்சற்பாடல்கள் ஆசிரிய விருத்தத்தால் ஆக்கப்பட்டுள்ளன. மிகவும் இலகுவான பதங்கள், தத்துவக் கருத்துக்கள், உலகியல் வாழ்விலும் சடங்குகளிலும் கிரியைகளிலும் மானுடன் ஆன்றாடம் அநுபவிக்கும் நிகழ்ச்சிகள், ஒசைச் சிறப்புகள் ஆகியவை கொண்ட நூல். சுப்பையருக்கு ஒரு மாணவ பரம்பரை இருந்தது. சுப்பையரின் பேரனாகிய சண்முகரத்தின ஐயர் சுப்பையரின் நூல்கள் சிலவற்றைத் தொகுத்து 1911-ல் வெளியிட்டார்.

மாணவப் பரம்பரை

  • ஆதிநாராயணன்
  • அ. சண்முகரத்தின ஐயர்

இலக்கிய நட்பு

  • சேனாதிராச முதலியார்
  • கரைதீவு கார்த்திகேயப்புலவர்
  • சிற்றம்பலப்புலவர்
  • நல்லூர் சின்னத்தம்பிப்புலவர்
  • கந்தபிள்ளை

நூல்கள் பட்டியல்

கலிவெண்பா
  • வண்ணைநகர் தையல்நாயகி கலிவெண்பா
ஊஞ்சல்
  • வண்ணைநகர் தையல்நாயகி திருவூஞ்சல்
  • ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி திருவூஞ்சல்
பிற
  • திருவூடல் தொகுப்பு
  • திருணோமலைப்புராணம் - 1909
  • சுப்பிரமணியப்பிரவாகம்

உசாத்துணை

  • Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
  • ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
  • சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந. வீ. ஜெயராமன்
  • http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#2