க.நா. கணபதிப்பிள்ளை

From Tamil Wiki

க.நா. கணபதிப்பிள்ளை (சின்னமணி) (மார்ச் 30, 1936) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். இசை நாடககக் கலைஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை பருத்தித்துறையில் மாதளை கிராமத்தில் மார்ச் 30, 1936இல் நாகலிங்கம், ராசம்மா இணையருக்கு இரண்டாவது மகனாக க.நா. கணபதிப்பிள்ளை பிறந்தார். இயற்பெயர் கணபதிப்பிள்ளை. ஆரம்பக்கல்வியை மாதனைமெதடிஸ் மிஷன் பாடசாலையில் கற்றார். ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்புவரை புலோலி ஆண்கள் ஆங்கில பாடசாலையில் கற்றார். ஏழாலை அரசினர் உயர்தரபாடசாலையில் ஒன்பதாம் பத்தாம் வகுப்புவரை படித்தார்.

கலை வாழ்க்கை

ஏழாலையில் இவர் கற்றபோது கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றார். 1949-1951ஆம் ஆண்டுகளில் சின்னமணி ஏழாலை அரசினர் உயர்தர பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தபோது வண்ணார்பண்ணையில் நடனஆசிரியர் நல்லையாவிடம் நடனம் கற்றுக் கொண்டார். இவர் ”யாழ் கலாஷேத்திரா” என்ற நாட்டியப் பள்ளியை நடத்தினார். அந்தப் பள்ளியின் மூலம் சின்னமணியும் , அவரது தமையனாரும் இயலிசை நாடகத்துறையில் அடிப்படை அறிவினைப் பெற்றுக் கொண்டதோடு, நடனத்துக் குரிய முத்திரைகள், அபிநயங்கள் ஆகியவற்றையும் அறிந்து கொண்டனர். பலதரப்பட்ட நடனங்கள், கரகங்கள், காவடிகள் ஆகிய கலைநிகழ்ச்சிகளை பாடசாலைகளுக்கும் தனிப்பட்ட ஸ்தாபனங்களுக்கும் இணைந்து பழக்கிய சகோதரர்கள் இருவரும் பல பரிசுகளையும் பாராட்டுதல்களையும் பெற்றனர். 1962இல் கோ. செல்லையா, தா.க. பசுபதி, ச. செல்லத்துரை, ராஜதுரை, கா.த. சோமலிங்கம் ஆகிய சுலாபிமானிகளின் முயற்சியால் ”மாதனை கலாமன்றம்” ஆரம்பிக்கப்பட்டது.

அரிச்சந்திர மயான காண்டத்தில் சின்னமணி, நான்கு வேறுபட்ட குணஇயல்புகள் கொண்ட பாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார். தெய்வீசு அம்சம் கொண்ட நாரதராகவும், ஹாஸ்ய வெடிகளை உதிர்க்கும் நட்சத்திரராகவும், அயலாத்துப் பிள்ளைகளில் ஒருவராகவும், சுடலையில் மேளம் அடிப்பவராகவும் நடித்து புகழ் பெற்றார். ”தீர்க்க சுமங்கலி” நாடகத்தில் சின்னமணி நடித்த யமன் பாத்திரம், பலராலும் பாராட்டப்பட்டு ”யமன் சின்னமணி” என்ற பட்டத்தைப் பெற்றார்.

இணைந்து நடித்தவர்கள்
  • வி.வி. வைரமுத்து
  • கரவை கிருஷ்ணாழ்வார்
  • மாசிலாமணி
  • தாவடி
  • S.S. வடிவேல்

விருதுகள்

  • கீதாஞ்சலி நல்லையாவால் தயாரிக்கப்பட்டு ஏழாலை மாணவர்களுடன் இவர் பங்குபெற்ற காவடி நடனம் கொழும்பு விக்றோறியாப் பூங்காவில் முடிக்குரிய எலிஸபேத் மகாராணியார் முன்னாலையில் அரங்கேற்றப்பட்டு அவரது பரிசையும் பெற்றது.
  • 1949இல் ஏழாலை பாடசாலை மாணவர்களுடன் கணபதிப்பிள்ளை நடித்த “கப்பற்பாட்டு” கலைநிகழ்ச்சி கொழும்பு றோயல் கல்லூரி மண்டபத்தில் அரங்கேற்றப்பட்ட போது இவருக்கு அகில இலங்கை ரீதியில் பரிசும் பாராட்டும் வழங்கப்பட்டது.
  • கணபதிப்பிள்ளை பங்காற்றிய உழவர்நடனம் மாவட்ட அளவில் முதற் பரிசைப் பெற்றது.
  • தென்னிந்திய நாட்டிய மேதையான பிரபல கோபிநாத் அவர்களிடம் நாட்டிய நுணுக்கங்களைக் கற்று ”கீதாஞ்சலி” என்ற பட்டத்தையும் பெற்றார்.

அரங்கேற்றிய கூத்துகள்

  • அரிச்சந்திரா
  • ஸ்ரீ ஸ்கந்தலீலா
  • பவளக்கொடி
  • ஸ்ரீவள்ளி
  • ராமாயணம்
  • காத்தவராயன்

உசாத்துணை