under review

கோவை அய்யாமுத்து

From Tamil Wiki
கோவை அய்யாமுத்து

கோவை அய்யாமுத்து (டிசம்பர் 1898 - டிசம்பர் 21, 1975) தமிழ் எழுத்தாளர், இதழாசிரியர், காந்தியவாதி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர். சர்வோதயா இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர்.

பிறப்பு, கல்வி

அய்யாமுத்து கோவை மாவட்டம் காங்கயத்தை அடுத்த பரஞ்சேர்வழி கிராமத்தில் டிசம்பர் 1898-ல் அங்கண்ணன், மாரம்மாள் இணையருக்குப் பிறந்தார். அய்யாமுத்துவின் மூத்த சகோதரர் நஞ்சப்பன். கோவையில் ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளிக் கல்வி பயின்றார்.

தனிவாழ்க்கை

கோவை அய்யாமுத்து ஸ்பென்சர் கம்பெனி உட்பட பல வேலைகளில் இருந்தார். 1918-ல் ராணுவத்தில் சேர்ந்து ஈராக்கில் பணியாற்றினார். 1921-ல் கிணத்துக்கடவைச் சேர்ந்த கோவிந்தம்மாளை மணந்தார். மனைவி கோவிந்தம்மாள் காந்தியவாதி, கதர் தொண்டர்.

அரசியல் வாழ்க்கை

கோவை அய்யாமுத்து

மாணவராக இருக்கையில் வ.உ. சியையும் சுப்ரமணிய சிவாவையும் காவல்துறையினர் விலங்கிட்டு இழுத்துச்சென்றதை கண்டு சுதந்திர போராட்டத்தில் ஈடுபாடு கொண்டார். 1918-ல் முதல் உலகப்போரின்போது ஐரோப்பியப் படையில் சேர்ந்தார். பஸ்ரா, மெஸபடோமியா போன்ற நாடுகளில் பணியாற்றினார். காந்தியுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். ஈ.வே. ராமசாமியின் நண்பர். பெல்காம், லாஹூர், கராச்சி, லக்னோ, ராம்கர், ஹரிபுரா, நாசிக், ஆவடி ஆகிய காங்கிரஸ் மாநாடுகளில் கலந்து கொண்டார். 1931-ல் சாத்தான்குளத்தில் பேசிய உரைக்காக ஆறுமாதம் சிறை சென்றார்.1932-ல் புஞ்சை புளியம்பட்டியில் போலீஸ் தடியடியில் காயமடைந்தார். ஆறுமாதம் வேலூர் சிறையில் இருந்தார். சுதந்திரத்திற்குப் பின்னர் கதரியக்கத்திலும் கிராம நிர்மாணத்திலும் பணியாற்றினார். 1950-ல் நாசிக் காங்கிரஸ் மாநாட்டுக்குப் பின் தீவிர அரசியலை விட்டு ஒதுங்கினார். 1960-லிருந்து 1967 வரை சுதந்திராக் கட்சியில் பணியாற்றினார். பெரியாருடைய ‘குடியரசு’ பத்திரிகையை ஈரோட்டிலிருந்து சென்னைக்குக் கொண்டு சென்று அங்கிருந்து வெளியிட அய்யாமுத்துவை பெரியார் நியமித்தார். பெரியாருடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக குடியரசு இதழிலிருந்து விலகினார்.

காந்தியம்

1921-ல் கோவைக்கு வருகை தந்த காந்தியின் உரை கேட்டு கோவை அய்யாமுத்துவும், அவரின் மனைவியும் காங்கிரஸில் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் பணியாற்றினர். 1931முதல் ஹரிஜன இயக்கத்தில் ஈடுபட்டார்.

கதர் வளர்ச்சி

காந்தியின் அறிவுரைப்படி கதரியக்கத்தை கோவையில் ஆரம்பித்தார். ஆங்காங்கே ராட்டையில் நூல் நூற்பவர்களுடைய நூல்களை வாங்கி திருப்பூர் காதி வஸ்த்திராலயத்துக்கு அனுப்பி வந்தார். இவரே கோவையில் ஒரு கதர் கடையைத் துவங்கி கதர் விற்பனையை மேற்கொண்டார். கோவையில் அகில பாரத சர்க்கா சங்கத்தின் கதர் உற்பத்திசாலையை நிறுவினார். 1926-ல் பாரத சர்க்கா சங்கத்தின் தமிழ்நாட்டு செயலாளர் எஸ். இராமநாதன் வேண்டுகோளை ஏற்று எர்ணாகுளம் வஸ்திராலயத்தை வழிநடத்தினார். 1933-ல் திருப்பூர் கதர் வஸ்திராலயத் தலைவரானார். 1936-ல் தமிழ்நாடு சர்க்கா சங்கத் தலைவரானார். 1940 வரை கதர் இயக்கத்தின் தீவிர வெற்றிக்குக் காரணமாக இருந்தனர். ஊர் ஊராகச் சென்று கிராம மக்களை கதர் நூற்கவும், கதர் உடைகளை அணியவும், நூற்ற நூலை திருப்பூர் காதி வஸ்த்திராலயத்தில் கொடுத்து துணியாக வாங்கி அணியவும் பழக்கப்படுத்தினார். கதர் அய்யாமுத்து என்று அழைக்கப்பட்டார்.

வைக்கம் போராட்டம்

1924-ல் வைக்கம் போராட்டத்தில் ஈ.வே.ராவுடன் கலந்து கொண்டு ஒரு மாதம் கடுங்காவல் சிறைசென்றார். பின்னர் சுசீந்திரம் ஆலயப்பிரவேசப் போராட்டத்திலும் தீவிரப் பங்கேற்றார்.

காந்தி பண்ணை

1951-ல் பொள்ளாச்சி அருகே கோதைவாடியில் 23 ஏக்கர் நிலம் வாங்கி காந்தி பண்ணை என்று பெயரிட்டு வேளாண்மை செய்தார்.

காந்தி ஆசிரமம்

திருச்செங்கோட்டில் பி.கே.ரத்தினசபாபதி கவுண்டர் எனும் ஜமீந்தார் கொடுத்த நிலத்தில் ராஜாஜியால் காந்தி ஆசிரமம் ஒன்று தொடங்கப்பட்டது. அதில் அய்யாமுத்து பெரும்பாடுபட்டு கட்டடங்களை உருவாக்கத் துணை புரிந்தார். அந்த ஆசிரமத்தில் இருந்தவர்கள் ராட்டையில் நூல் நூற்க வேண்டும். அங்கு தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கல்வியும் ராட்டை நூல் நூற்கும் பயிற்சியும் தரப்பட்டது. தீவிரமாக மதுவிலக்குப் பிரச்சாரம் நடத்தப்பட்டது.

நாடக வாழ்க்கை

1903-ல் ஐந்து வயதில் கோயமுத்தூர் ஆதம்சா மக்கான் கொட்டகையில் நடைபெற்ற நல்லதங்காள் நாடகத்தில் வேடமிட்டார். நாடகங்களில் நடித்தும், அரங்காற்றுகை செய்தார். நாடகத்தில் கதை, திரைக்கதை, வசனம், டைரக்‌ஷன் ஆகியவற்றை கோவை அய்யாமுத்து செய்தார். இவர் எழுதிய நச்சுப்பொய்கை அல்லது நாரியர் வேட்கை என்னும் நாடகத்தை மதுரை தேவி பாலவிநோத சபை நிகழ்த்தக்கூடாது என்று 1934-ல் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தடைவிதித்தார். 1934 செப்டம்பரில் இத்தடையை திரும்பப்பெற்றார். கஞ்சன், இன்பசாகரன் போன்ற நாடக நூல்களை எழுதினார்.

எனது நினைவுகள்

இலக்கிய வாழ்க்கை

கதர் இயக்கத்திற்காகக் குடிநூல் என்னும் இதழை நடத்தினார். ’எனது நினைவுகள்’ என்ற இவரின் தன்வரலாற்று நூல் தமிழக அரசியல் வரலாற்று ஆவணமாக உள்ளது. இன்பசாகரன் என்ற நாடக நூல எழுதினார்.

விருது/ கெளரவம்

  • 1972-ல் இந்திராகாந்தி டெல்லி சுதந்திரதின வெள்ளி விழாவில் அய்யாமுத்துவுக்கு தேசபக்தர்களுக்கான தாமிரப்பத்திரம் வழங்கினார்.

மறைவு

மூன்று முறை இதயநோயால் தாக்கப்பட்டு நலிவுற்ற அய்யாமுத்து டிசம்பர் 21, 1975-ல் காலமானார்.

நூல்கள்

மேயோ கூற்று மெய்யா - பொய்யா?
கட்டுரை
  • சுதந்திரனுக்கு முன்னும் பின்னும்
  • நாம் எங்கே செல்கிறோம்?
  • சோசலிசம்
  • சுதந்திரா கட்சி ஏன்?
நாடகம்
  • இன்பசாகரன்
  • நச்சுப் பொய்கை அல்லது நாரியர் வேட்கை (1934)
  • இராஜபக்தி
  • மேவாரின் வீழ்ச்சி
  • பிச்சைக்காரி
  • கஞ்சன்
பிற
  • அக்காளும் தங்கையும்
  • இராமசாமியும் கதரும்
  • எனது நினைவுகள்
  • சென்னை சர்க்காரின் கதர்த்திட்டம்
  • திருவிழா
  • தேசத்தொண்டனும் கிராமவாசியும்
  • பஞ்சமா பாதகங்கள்
  • மேயோ கூற்று மெய்யா பொய்யா
  • மேவாரின் வீழ்ச்சி
  • ராஜாஜி என் தந்தை
  • வேற்றுமை விருஷம் வேறோடு வீழ்க(1931)

உசாத்துணை

இணைப்புகள்



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.