கோவை அய்யாமுத்து

From Tamil Wiki
Revision as of 16:14, 26 August 2022 by Ramya (talk | contribs) (Created page with "கோவை அய்யாமுத்து (டிசம்பர் 1898 - டிசம்பர் 21, 1975) தமிழ் எழுத்தாளர், காந்தியவாதி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர். சர்வோதயா இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர். == பிறப்பு, கல்வி == அய்யாமுத்து...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கோவை அய்யாமுத்து (டிசம்பர் 1898 - டிசம்பர் 21, 1975) தமிழ் எழுத்தாளர், காந்தியவாதி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர். சர்வோதயா இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர்.

பிறப்பு, கல்வி

அய்யாமுத்து கோவை மாவட்டம் காங்கயத்தை அடுத்த பரஞ்சேர்வழி கிராமத்தில் டிசம்பர் 1898இல் அங்கண்ணன், மாரம்மாள் இணையருக்குப் பிறந்தார். அய்யாமுத்துவின் மூத்த சகோதரர் நஞ்சப்பன். கோவையில் ஒன்பதாம் வகுப்பு படித்தார்.

தனிவாழ்க்கை

கோவை அய்யாமுத்து ஸ்பென்சர் கம்பெனி உட்பட பல வேலைகளில் இருந்தார். 1918இல் ராணுவத்தில் சேர்ந்து ஈராக்கில் பணியாற்றினார். 1921இல் கிணத்துக்கடவைச் சேர்ந்த கோவிந்தம்மாளை மணந்தார். மனைவி கோவிந்தம்மாள் கதர் தொண்டர்.

அரசியல் வாழ்க்கை

மாணவராக இருக்கையில் வ.உ. சியையும் சுப்ரமணிய சிவாவையும் காவல்துறையினர் விலங்கிட்டு இழுத்துச்சென்றதை கண்டு சுதந்திர ஆர்வம் கொண்டார். 1918இல் முதல் உலகப்போரின்போது ஐரோப்பியப் படையில் சேர்ந்தார். பஸ்ரா, மெஸபடோமியா போன்ற நாடுகளில் பணியாற்றினார். காந்தியுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். ஈ.வே. ராமசாமியின் நண்பர். சுதந்திரத்திற்குப் பின்னர் கதரியக்கத்திலும் கிராம நிர்மாணத்திலும் பணியாற்றினார். 1950ல் நாசிக் காங்கிரஸ் மாநாட்டுக்குப் பின் தீவிர அரசியலை விட்டு ஒதுங்கினார். 1960லிருந்து 1967வரை சுதந்திராக் கட்சியில் பணியாற்றினார்.

காந்தியம்

1921இல் கோவைக்கு வருகை தந்த காந்தியின் உரை கேட்டு கோவை அய்யாமுத்து, அவரின் மனைவியும் காங்கிரஸில் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் பணியாற்றினர். 1931ல் போலீஸ் குடியிருப்பில் தண்ணீர் எடுக்க ஒரு தலித் போலீஸ் காவலரை மற்ற ஜாதிகளை சேர்ந்த போலீசார் அனுமதிக்கவில்லை. இதைக் கேள்விப்பட்ட அய்யாமுத்து தன் மனைவியுடன் அங்கு சென்று அந்தத் கிணற்றுக்கு அவரை அழைத்துச் சென்று தண்ணீர் இறைக்கச்செய்தார். அதிலிருந்து ஹரிஜன இயக்கத்தில் ஆர்வம் கொண்டு பணியாற்றினார். இக்காலத்தில் ஈ. வே. ராமசாமியுடன் நட்புக்கொண்டார்.

கதர் வளர்ச்சி

காந்தியின் அறிவுரைப்படி கதரியக்கத்தை கோவையில் ஆரம்பித்தார். ஆங்காங்கே ராட்டையில் நூல் நூற்பவர்களுடைய நூல்களை வாங்கி திருப்பூர் காதி வஸ்த்திராலயத்துக்கு அனுப்பி வந்தார். இவரே கோவையில் ஒரு கதர் கடையைத் துவங்கி கதர் விற்பனையை மேற்கொண்டார். கோவையில் அகில பாரத சர்க்கா சங்கத்தின் கதர் உற்பத்திசாலையை நிறுவினார். 1926இல் பாரத சர்க்கா சங்கத்தின் தமிழ்நாட்டு செயலாளர் எஸ். இராமநாதன் வேண்டுகோளை ஏற்று எர்ணாகுளம் வஸ்திராலயத்தை வழிநடத்தினார். 1933ல் திருப்பூர் கதர் வஸ்திராலயத் தலைவரானார். 1936இல் தமிழ்நாடு சர்க்கா சங்கத் தலைவரானார். 1940வரை கதர் இயக்கத்தின் தீவிர வெற்றிக்குக் காரணமாக இருந்தனர். கதர் அய்யாமுத்து என்று அழைக்கப்பட்டார்.

தீண்டாமை எதிர்ப்பு

1924ல் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைசென்றார். பின்னர் சுசீந்திரம் ஆலயப்பிரவேசப் போராட்டத்திலும் தீவிரப் பங்கேற்றார்.

காந்தி பண்ணை

1951ல் பொள்ளாச்சி அருகே கோதைவாடியில் 23 ஏக்கர் நிலம் வாங்கி காந்தி பண்ணை என்று பெயரிட்டு வேளாண்மை செய்தார்.

நாடக வாழ்க்கை

1903இல் ஐந்து வயதில் இருந்தபோது கோயமுத்தூர் ஆதம்சா மக்கான் கொட்டகையில் நடைபெற்ற நல்லதங்காள் நாடகத்தில் வேடமிட்டார். இவர் எழுதிய நச்சுப்பொய்கை அல்லது நாரியர் வேட்கை என்னும் நாடகத்தை மதுரை தேவி பாலவிநோத சபை நிகழ்த்தக்கூடாது என்று 1934ஆம் ஆண்டில் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தடைவிதித்தார். 1934 செப்டம்பரில் இத்தடையை திரும்பப்பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

கதர் இயக்கத்திற்காகக் குடிநூல் என்னும் இதழை நடத்தினார். ’எனது நினைவுகள்’ என்ற இவரின் தன்வரலாற்று நூல் தமிழக அரசியல் வரலாற்று ஆவணமாக உள்ளது. இன்பசாகரன் என்ற நாடக நூலை எழுதினார்.

மறைவு

மூன்று முறை இதயநோயால் தாக்கப்பட்டு நலிவுற்ற அய்யாமுத்து டிசம்பர் 21, 1975ல் காலமானார்.

நூல்கள்

  • அக்காளும் தங்கையும்
  • இராமசாமியும் கதரும்
  • இராஜபக்தி
  • இன்பசாகரன் (நாடகம்)
  • எனது நினைவுகள்
  • சுதந்திரனுக்கு முன்னும் பின்னும்
  • சென்னை சர்க்காரின் கதர்த்திட்டம்
  • திருவிழா
  • தேசத்தொண்டனும் கிராமவாசியும்
  • நச்சுப்பொய்கை அல்லது நாரியர் வேட்கை (நாடகம்: 1934)
  • நாம் எங்கே செல்கிறோம்?
  • பஞ்சமா பாதகங்கள்
  • பிச்சைக்காரி
  • மேயோ கூற்று மெய்யா பொய்யா
  • மேவாரின் வீழ்ச்சி
  • ராஜாஜி என் தந்தை
  • வேற்றுமை விருஷம் வேறோடு வீழ்க (1931)

உசாத்துணை

  • வைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்:

இணைப்புகள்