கோபாலகிருஷ்ண பாரதி

From Tamil Wiki
Revision as of 16:15, 25 January 2022 by Subhasrees (talk | contribs) (கோபாலகிருஷ்ண பாரதி முதல் வரைவு)

கோபாலகிருஷ்ண பாரதி (1811 – 1881) தஞ்சை மாவட்டத்தில் நரிமணம் என்னும் ஊரில் பிறந்தார். இவர் இயற்றிய நந்தனார் சரித்திரக் கீர்த்தனை தமிழில் புதிய இசைப்பாடல் மரபின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது. தெலுங்கு மற்றும் சமஸ்கிருதப் பாடல்கள் மட்டுமே பாடப்பட்டு வந்த கர்நாடக இசை மேடைகளில் தமிழிசைப் பாடல்களை அறிமுகம் செய்தவர்களில் முதன்மையானவர். புராணங்கள், கலம்பகங்கள், அந்தாதிகள் போன்ற இலக்கணத்துக்கு உட்பட்ட படைப்புகளே இலக்கியங்களாக அங்கீகரிக்கப்பட்ட அந்தக் காலத்தில் எளிய இசைப்பாடல்களை எழுதி புகழ்பெறச் செய்த முன்னோடி.

வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு, இளமை

கோபாலகிருஷ்ண பாரதி தஞ்சாவூரில் நரிமணம் என்னும் ஊரில் 1811ல் பிறந்தார். திருவாரூர் அருகே உள்ள முடிகொண்டானில் இளமையில் இருந்திருக்கிறார். பின்னர் மாயவரம் அருகே உள்ள ஆனந்தத்தாண்டவபுரம் என்னும் ஊரில் வாழ்ந்தார். கோபாலகிருஷ்ணர் அத்வைதம், யோக சாஸ்திரம் ஆகியவற்றை மாயவரத்தில் கோவிந்த சிவம் என்னும் குருவிடம் இருந்து கற்றார்.

தனிவாழ்க்கை

கர்னாடக இசையில் முதன்மையான மூவரில் ஒருவராகிய தியாகராஜ சுவாமியின் சம காலத்தவர். கோபாலகிருஷ்ண பாரதியின் தந்தை ராமசுவாமி ஒரு பாடகர். இசை சார்ந்த குடும்பப் பின்னணி இருந்ததால் சிறு வயதில் இருந்தே சங்கீதத்தில் ஈடுபாடு இருந்தது. அங்கு கிராமங்கள்தோறும் இசை வல்லுனர்கள் இருந்தமையால் இசையை நன்கு கற்றுத் தேர்ந்தார். பாடல்களை இயற்றிப் பண்ணமைத்துப் பாடும் திறன் இயல்பாகவே இருந்தது.

திருவிடைமருதூரில் அமரசிம்ம மகாராஜாவால் ஆதரிக்கப்பட்டு வந்த ராமதாஸ் என்னும் ஹிந்துஸ்தானி இசைப் பாடகரிடம் மாணவராக அமைந்து ஹிந்துஸ்தானி இசையிலும் பயிற்சி பெற்றார். திருவிடைமருதூரில் முதன்மைப் பாடகராக இருந்த கனம் கிருஷ்ணைய்யரிடம் நெருங்கிப் பழகி அவரிடமும் பாடல்கள் கற்றுக் கொண்டார்.

துறவு மனநிலை கொண்ட இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

பங்களிப்பு

தமிழிசை

கோபாலகிருஷ்ண பாரதி தமிழில் கைவல்ய நவநீதம், பிரபோத சந்திரோதயம், தத்துவராயர் பாடுதுறை, தாயுமானவர் பாடல்கள் போன்றவற்றை நன்கு கற்றிருந்தார். அத்வைத சித்தாந்தத்தை ஒட்டி பல பாடல்களை இயற்றியுள்ளார். அப்போதிருந்த பல கர்னாடக இசைப்பாடகர்கள் இவரிடம் வந்து தங்கள் தேவைக்கேற்றபடி கீர்த்தனைகளை இயற்றித் தரும்படிக் கேட்டுக் கொண்டு பாடுவதுண்டு. இவர் தனது பாடல்களில் சரணத்தில்(இறுதி வரிகளில்) தன் பெயரான கோபாலகிருஷ்ண வரும்படி இயற்றி வந்தார் (முத்திரை எனப்படும்). நடராஜ தத்துவத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த இவர் இயற்றிய நடராஜர் மீதான பல கீர்த்தனைகள் புகழ் பெற்றவை.

சிலப்பதிகாரத்தின் கானல்வரி ஆய்ச்சியர் குரவை போன்ற இசைப்பாடல்கள் கொண்ட தமிழ் இசைப்பாடல் மரபு தொன்மையானது. இசைப்பாடல் திரட்டுக்களில் திருப்புகழ் முன்னோடியான ஆக்கம். ஆனால் அதன் மொழி சம்ஸ்கிருதக் கலவை கொண்டது. அக்கால கட்டத்தில் கர்னாடக இசை மேடைகளில் தெலுங்கு மற்றும் வடமொழி கீர்த்தனைகளே பாடப்பட்டு வந்தன. தமிழில் பாடும் வண்ணம் கீர்த்தனைகள் என சொல்லப்படும் இசைப்பாடல் வடிவ ஆக்கங்கள் குறைவாகவே இருந்தன.

ஒருமுறை திருவையாறு சென்று தியாகராஜரை நேரில் சந்த்தித்திருக்கிறார். அப்போது தியாகராஜரின் மாணவர்கள் ஆபோகி ராகத்தில் அமைந்த பாடல் ஒன்றைப் பாடிப் பழகிக் கொண்டிருந்திருக்கிறார்கள். தியாகைய்யர் கோபாலகிருஷ்ண பாரதியிடம் ஆபோகி ராகத்தில் அவர் ஏதும் பாடல்கள் இயற்றியிருக்கிறாரா என்று கேட்டிருக்கிறார். அதுவரை அந்த ராகத்தில் ஏதும் பாடல்கள் இயற்றியிராத பாரதி மறுமொழி சொல்லவில்லை. மறுநாள் தியாகராஜரை சந்த்தித போது தான் புதிதாக இயற்றிய ஆபோகி ராகப் பாடலை பாடிக் காட்டியிருக்கிறார்.[1]

அதுவே “சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா” என்ற மிகவும் புகழ் பெற்ற பாடல்.

கோபாலகிருஷ்ண பாரதி இயற்றிய நந்தனார் சரித்திரக் கீர்த்தனை தமிழ் இசைப்பாடல்களில் நெகிழ்ந்த யாப்புமுறையைக் கொண்ட புதிய ஒரு தமிழ்ப் பாடல் மரபைத் துவக்கிவைத்தது. எளிய நடையில் அமைந்த இவரது கீர்த்தனைகள் இலக்கணத்தை விட இசையமைதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இயற்றப்பட்டிருந்தன.

கோபாலகிருஷ்ண பாரதி சிதம்பரத்தில் இருந்த போது தினமும் கோவிலுக்குச் சென்று பாடுவது வழக்கம். சில சமயங்களில் தெற்கு சுவரோரம் கையில் கடப்பாரையும் தோளில் மண்வெட்டியும் சுமந்து நடராஜரை தரிசித்த வண்ணம் நிற்கும் நந்தனார் உருவத்துக்கு அருகே அமர்ந்து பாடுவார். நந்தனாரின் பக்தி அவரை மிகவும் ஈர்த்தது. எனவே “எந்நேரமும் உன்றன் சந்நிதியில் நான் இருக்கவேண்டுமைய்யா” என்ற தனிப்பாடல் ஒன்றை இயற்றினார். இக்கீர்த்தனம் தனியாகவே பாடப்பட்டு வந்தது. பின்னர் வந்த பிற்காலப் பதிப்புகளில் நந்தனார் சரித்திரக் கீர்த்தனையோடு சேர்த்துப் பதிப்பிதிருக்கிறார்கள்.

நாகப்பட்டிணத்தைச் சேர்ந்த வணிகரான கந்தப்ப செட்டியார் என்னும் செல்வந்தர் ஒருவர் ஏதேனும் ஒரு நாயனாரின் சரித்திரத்தை கீர்த்தனை வடிவாக இயற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டார். திருநாளைப்போவாரின்(நந்தனார்) பக்திமீது கொண்ட மதிப்பினால் நந்தனார் கதையையே விரித்தெழுதத் தொடங்கினார். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இவரை மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு அறிமுகம் செய்து வைத்தார். கோபாலகிருஷ்ண பாரதியிடம் நெருங்கிய நட்பு கொண்ட வேதநாயகம் பிள்ளை நந்தனார் சரித்திரம் இயற்றிய காலத்தில் அவரைத் தன் இல்லத்தில் தங்க வைத்து ஆதரித்தார்.

கோபாலகிருஷ்ண பாரதி இயற்றிய நந்தனார் சரித்திரம் ஒரு சங்கீத கதா காலட்சேபமாக நிகழ்த்தும் வகையில் இயற்றப்பட்டது.

“இரக்கம் வராமற் போனதென்ன காரணம்”(ராகம்: பெஹாக்)

”ஐயே மெத்தக்கடினம்” (ராகம்: புன்னாகவராளி)

“சற்றே விலகியிரும்” (ராகம்: பூர்வி கல்யாணி) போன்ற பல பாடல்கள் மிகவும் புகழ் பெற்றவை.

பெரியபுராணத்தில் உள்ள சுருக்கமான நந்தனின் வரலாற்றை விரித்து இந்த இசைப்பாடல் தொகுதியை இயற்றி இருக்கிறார். அதில் ஹிந்துஸ்தானி ராகங்களிலும் சில பாடல்களை இயற்றியிருந்தார்.

நந்தனார் சரித்திரம் துன்மதி வருடம்(1860ஆக இருக்கலாம்) ஐப்பசி மாதம் முதன்முதலில் அச்சிடப்பட்டதாக முதற்பதிப்பில் இருந்து அறிய முடிகிறது. பரத நாட்டியத்தில் புகழ் பெற்ற தஞ்சாவூர் பாலசரஸ்வதி இவரின் சில பாடல்களைத் தன் நடனத்திற்கு பயன்படுத்திக் கொண்டார்.

உ.வே.சாமிநாதையர் கோபாலகிருஷ்ண பாரதியிடம் இசை கற்றுக் கொண்டதை அவர் எழுதிய “கோபாலகிருஷ்ண பாரதி” என்னும் வாழ்க்கை வரலாற்று நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

மறைவு

கோபாலகிருஷ்ண பாரதி 1881ல் மரணமடைந்தார்.

விவாதங்கள்

கோபால கிருஷ்ண பாரதியாரின் இசைப்பாடல்கள் போன்ற புதிய தமிழ் இசைப் பாடல்களை அக்கால தமிழ்ப் பண்டிதர்கள் இலக்கியமாக கருதவில்லை என்பதை உ.வே.சாமிநாதய்யரின் தன்வரலாறு(என் சரித்திரம்) காட்டுகிறது

நந்தனார் சரித்திரத்தைத் தன் காலத்திலேயே வெளியிட்டார் கோபாலகிருஷ்ண பாரதியார். ஆனால் அப்போது திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அதில் இலக்கணப் பிழைகள் மட்டுமல்லாது பொருள் குற்றம், கருத்தில் பிழை இருப்பதாகச் சொல்லி நந்தனார் சரித்திரத்திற்குப் பாயிரம் எழுதிக் கொடுக்க மறுத்து வந்தார்.

பின்னால் கோபாலகிருஷ்ண பாரதியார் பெருமுயற்சி செய்து மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் மனதைத் தன் இசையால் மாற்றி, பாயிரம் எழுதி வாங்கினார் என உ. வே. சாமிநாதையர் ’என் சரித்திரம்’ நூலில் குறிப்பிடுகிறார்.

படைப்புகள்

இசைப் பாடல் தொகுப்புகள்

பெரியபுராணத்து நாயன்மார்கள் வரலாற்றை போற்றிக் கீர்த்தனைகளாக பாடியவை[2]:

  • நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
  • நீலகண்ட நாயனார் சரித்திரக் கீர்த்தனை
  • இயற்பகை நாயனார் சரித்திரக் கீர்த்தனை
  • காரைக்காலம்மையார் சரித்திரக் கீர்த்தனை

சில புகழ்பெற்ற தனிப்பாடல்கள்

  • அற்புத நடனம் ஆடினானையா அம்பலந்தனில் (ராகம்: ஆகிரி)
  • ஆடிய பாதம் தரிசனம் கண்டால் (ராகம்: யதுகுல் காம்போதி)
  • ஆடிய பாதமே கதியென்றெங்கும் (ராகம்: அசாவேரி)
  • எங்கே தேடிப் பிடித்தாயடி மானே (ராகம்: தேவகாந்தாரி)
  • தேடி அலைகிறாயே பாவி மனதே (ராகம்: நாதநாமக்கிரியை)
  • பிறவாத முக்தியைத் தாரும் (ராகம்: ஆரபி)
  • பேயாண்டி தனைக் கண்டு நீயேண்டி மையல் கொண்டாய்(ராகம்: சாரங்கா)
  • சபாபதிக்கு வேறு தெய்வம் (ராகம்: ஆபோகி)

உசாத்துணை

தமிழ் இலக்கிய வரலாறு – மு. வரதராசன்

கோபாலகிருஷ்ண பாரதியார் – உ.வே. சாமிநாதையர்

கோபாலகிருஷ்ண பாரதி இசைப்பாடல்களின் பட்டியல்

https://www.karnatik.com/co1020.shtml

https://shaivam.org/scripture/Tamil/1772/gopalakrishna-bharathiyar-compositions