first review completed

கோடீச்சுரக் கோவை

From Tamil Wiki
Kodissurakkovai.jpg

கோடீச்சுரக்கோவை சோழநாட்டின் தேவாரப் பாடல் பெற்ற தலமான கொட்டையூரில் கோவில் கொண்ட கோடீச்சுரரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட கோவை எனும் சிற்றிலக்கியம்.

ஆசிரியர்

கோடீச்சுரக் கோவையை இயற்றியவர் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர். மராட்டிய மன்னர் காலத்தில் வாழ்ந்தவர். சரபோஜி மன்னரின் அவைக்கவிஞராக இருந்தவர்.

நூல் அமைப்பு

கோடீச்சுரக் கோவை அகப்பொருள்கோவை நூல். 444 பாடல்கள் கொண்டது. தலைவன் தலைவியை மலர்த்தோட்டத்தில் காணல், இருவரும் காதல் கொள்ளல், களவொழுக்கம், தலைவி இற்செறிக்கப்படல், ஊடல், பிரிவு, இரங்கல், நற்றாய் வருந்துதல், செவிலி பாங்கியின் மூலம் தலைவி நிலையறிந்து நற்றாயிடம் உண்மை உரைத்தல், தலைவியின் இல்லத்தார் தலைவனை ஏற்றுக்கொண்டு மணம் புரிவித்தல் என ஐந்திணைகளின் நிகழ்வுகளும் கூறப்படுகின்றன.

கோடீச்சுரக் கோவையில் பல அணிகளும் பயின்று வருகின்றன. தலைவியில் அழகை விண்மீன்கள் பெயரைக்கொண்டும், சிவத்தலங்களின் பெயர்களைக்கொண்டும் சொல்லும் பாடல்கள் அமைந்துள்ளன. "கோடீச்சுரக் கோவையில் காணப்படும் தொனிகளைப் போல வேறு எந்தத் தமிழ்நூலினும் காண்டல் அரிதாம்" என்று கா.ம. வேங்கடராமையா 'ஆய்வுப்பேழை' நூலில் குறிப்பிடுகிறார்.

பாடல் நடை

தேவார மூவர்

வெற்றிகொள் மால்விடைக் கோடீச் சுரவள்ளல் வெற்பனைய
மற்றி தோளுடைச் சுந்தரர் ஆனநம் மன்னவர் நூல்
பற்றிடு வாக்கர (சு) ஆகிமெய்ஞ் ஞானசம் பந்தர் பதம்
பெற்றிட எண்ணிப் பிரிந்தாரின் (று) ஓதப் பிறைநுதலே.

இதில் சுந்தரர் என்பது அழகுடையவர் என்ற பொருளிலும், வாக்கரசு என்பது நாவலர் என்ற பொருளிலும், மெய்ஞ் ஞானசம்பந்தர் என்பது உண்மையறிவொடு பொருந்தியவர் என்ற பொருளிலும் வந்து தேவார மூவர் பெயர்கள் தொனி யில் அமைந்தமையும் காணலாம்.

தலைவியின் அழகு (தலப்பெயர்கள்)

வல்லம்எனும் கொங்கையாள் மாகாளம் போற்கண்ணாள்
முல்லைவாய் உற்றதெனும் மூரலாள்-சொல்லியசீர்
ஏற்றிடுகுற் றாலந்தான் என்னும் வயிறுடையாள்
சாற்றிடுமா யூரம்எனும் சாயலாள்-போற்றலுறும்
வஞ்சி யிடையாள் வலஞ்சுழி நல் உந்தியாள்
கஞ்சனூர் அன்ன கதிநடையாள்.

சிவத்தலங்களின் பெயர்களைக் கொண்டு தலைவியின் அழகு சொல்லப்படுகிறது.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.