கே. தாமோதரன்

From Tamil Wiki
கே.தாமோதரன்

கே.தாமோதரன் ((5 பிப்ரவரி 1912- 3 ஜூலை 1976) இந்திய தத்துவ சிந்தனையாளர். மலையாள இலக்கியவாதி. இந்திய இடதுசாரி இயக்க முன்னோடிகளில் ஒருவர். மார்க்ஸிய தத்துவம் சார்ந்தும், மார்க்ஸிய இயங்கியல் வரலாற்று வாத நோக்கில் இந்திய தத்துவயியல் சார்ந்தும், இடதுசாரி அரசியல் நடவடிக்கைகள் சார்ந்தும் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் எழுதினார்

பிறப்பு, கல்வி

கே.தாமோதரன் கேரளத்தில் மலப்புறம் மாவட்டத்தில் திரூர் அருகே பொறூர் என்னும் ஊரில் கீழேடத்து என்னும் நாயர் இல்லத்தில் கிழக்கினியேடத்து இல்லத்தை சேர்ந்த துப்பன் நம்பூதிரிக்கும் கீழேடத்து வீடு என்னும் குடும்பத்தைச் சேர்ந்த நாராயணி அம்மாவுக்கும் 5 பிப்ரவரி 1912 ல் பிறந்தார்.

திரூரங்காடி மாட்டாயி ஆரம்பப்பள்ளியிலும், திரூர் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிக்கல்வியை முடித்தார். கோழிக்கோடு சாமூதிரி கலைக்கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.

கோவை சிறையில் இருக்கையில் தமிழ், இந்தி மொழிகளைக் கற்ற கே.தாமோதரன் ஆச்சாரிய நரேந்திரதேவ் ஊக்குவித்தமையால் 1935ல் சம்ஸ்கிருதக் கல்விக்காக காசி வித்யாபீடத்தில் சேர்ந்தார். காசி பல்கலையில் சாஸ்திரி பட்டம் பெற்றார். காசியில் இருக்கையில் உருது, வங்காள மொழிகளில் தேர்ச்சி பெற்றார்.

தனிவாழ்க்கை

கே.தாமோதரனின் மனைவி பத்மம். மகன் கே.பி.சசி ஆவணப்பட இயக்குநர், கேலிச்சித்திரக் கலைஞர்.

அரசியல்

இந்திய தேசிய இயக்கம்

கல்லூரி நாட்களில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பில் பங்கேற்று தீவிரமாகச் செயல்பட்டார். சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு சொற்பொழிவாளராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்தமைக்காக 1931ல் முதன்முதலாகச் சிறைசென்றார். 23 மாதங்கள் கடுங்காவல் தண்டபை பெற்று கோயம்புத்தூரில் சிறையில் இருந்தார்.

கே.தாமோதரன் 1938ல் கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளராக ஓராண்டு பணியாற்றினார்.1940 ல்.கே.தாமோதரன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (All India Congress Committee (AICC)) உறுப்பினரானார். 1940 ஆகஸ்டில் காந்தி தனிநபர் சத்யாக்கிரகத்தை அறிவித்ததை தொடர்ந்து செப்டெம்பர் 15 ல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கலைக்கப்பட்டது. வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக இரண்டுமுறை சிறை சென்ற கே.தாமோதரன் 1945ல் விடுதலையானார்.

பொதுவுடைமை இயக்கம்

1935ல் காசி வித்யாபீடத்தில் கல்வி கற்கச் சென்ற கே.தாமோதரன் பொதுவுடைமைக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். 1937 ல் கேரளம் திரும்பிய கே.தாமோதரன் கேரள சோஷலிஸ்டுக் கட்சியில் சேர்ந்தார். அன்று காங்கிரஸ் சோஷலிஸ்டுக் கட்சியின் தலைவராக இருந்த பி.கிருஷ்ணபிள்ளையின் அணுக்கரும் மாணவருமாக ஆனார். கோழிக்கோடு அருகே ஃபரோக் ஓட்டுத்தொழிற்சாலை ஊழியர்களின் சங்கத்தில் பணியாற்றினார். அவர்களின் முதல் வேலைநிறுத்தத்தை ஒருங்கிணைத்தார். பொன்னானி பீடித்தொழிலாளர் வேலைநிறுத்ததை ஒருங்கிணைத்து இரண்டாம் முறையாகச் சிறை சென்றார்.

1939 ல் கேரளத்தில் காங்கிரஸில் இருந்த சோஷலிஸ்டுகள் கருத்துவேறுபாட்டால் தனியாகப் பிரிந்தனர். அதன்பொருட்டு கூடிய முதல் கூட்டத்தில் இருந்த நான்குபேரில் ஒருவர் கே.தாமோதரன். 1 மே 1939 ல் கேரளத்தில் கம்யூனிஸ்டுக் கட்சியின் கிளை உருவாக்கப்பட்டது. அதில் கே.தாமோதரன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராகப் பொறுப்பு வகித்தார்.

கே.தாமோதரன் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியில் 1945 முதல் பணியாற்றினார். 1951ல் மலபார் கம்யூனிஸ்டுக் கட்சியின் வட்டச்செயலாளராகப் பதவியேற்றார். 1957 ல் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி பிளவுண்டபோது கே.தாமோதரன் கம்யூனிஸ்டுக் கட்சி (CPI) அணியில் இருந்தார்.

கே.தாமோதரன் 1960 ல் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டார்

தேர்தல்

கே.தாமோதரன் கேரளத்தின் தேர்தல் அரசியலில் ஈடுபட்டார். தேர்தல்களில் வெல்லவில்லை.

  • 1951 கேரளச் சட்டச்சபைக்கு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்
  • 1957ல் இந்திய மக்களவைக்கு போட்டியிட்டு தோல்வியடந்தார்
  • 1964 ல் இந்திய மாநிலங்களவை உறுப்பினரானார்.

பயணங்கள்

கே.தாமோதரன் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி சார்பில் ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணங்கள் செய்தார்.

இதழியல்

1960 முதல் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் கோட்பாட்டு வெளியீடான நவயுகம் இதழின் ஆசிரியராக கே.தாமோதரன் பணியாற்றினார்.

இலக்கியம்

கே.தாமோதரன் 1937ல் எழுதிய பாட்டபாக்கி (குத்தகைபாக்கி) என்னும் நாடகம் பொதுவுடைமைப் பிரச்சார நாடகமாக பெரும்புகழ்பெற்ற ஒன்று.

ஆய்வுப்பணிகள்

தத்துவம்
அரசியல்

கே.தாமோதரன் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் முழுமையான வரலாற்றை எழுதும்பொருட்டு இந்திய வரலாற்றாய்வுக் கழகத்தின் (Indian Council of Historical Research- ICHR) நிதிக்கொடையை ல் பெற்றார். ஆய்வுக்காக டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தபோது மறைந்தார்

மறைவு

கே.தாமோதரன் 3 ஜூலை 1976 ல் மறைந்தார்.