being created

கே. தம்புசாமி பிள்ளை

From Tamil Wiki
Revision as of 10:28, 9 July 2022 by Saalini (talk | contribs) (Created page with "thumb|323x323px|''கே. தம்புசாமி பிள்ளை'' கே. தம்புசாமி பிள்ளை (காயரோகணம் தம்புசாமி பிள்ளை) மலேசிய தமிழர்களின் வளர்ச்சிக்குப் பெறும் பங்கினையாற்றியவர்களில் ஒருவர். ம...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கே. தம்புசாமி பிள்ளை

கே. தம்புசாமி பிள்ளை (காயரோகணம் தம்புசாமி பிள்ளை) மலேசிய தமிழர்களின் வளர்ச்சிக்குப் பெறும் பங்கினையாற்றியவர்களில் ஒருவர். மலேசியாவில் வணிகம், கல்வி, கலாச்சாரம், சமயம் என தமிழ் சமூகத்தினர் மத்தியில் கே. தம்புசாமி பிள்ளை பல புதுமைககளையும் மாற்றங்களையும் கொண்டு வந்தவராவார். இவர் மலேசியாவில் புகழ்பெற்ற செல்வச் சிறப்புமிக்க வர்த்தகராகத் திகழ்ந்தவர்.

பிறப்பு, கல்வி

கே. தம்புசாமி பிள்ளை ஜனவரி 1, 1850 அன்று சிங்கப்பூரில் பிறந்தார். இவரின் தந்தை காயரோகணம் பிள்ளை, தமிழகத்தில் திருமலைராயன் பட்டினத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஆங்கிலேயர்களின் குடியேற்ற நாடுகளில் பாதுகாப்பு படையில் பணியாற்றும் பொருட்டு இவர் சிங்கப்பூர் சென்றார். தம்புசாமி பிள்ளை தமது கல்வியைச் சிங்கப்பூரில் உள்ள ராபிள்ஸ் கல்லூரியில் பெற்றார்.

தனிவாழ்க்கை

கே. தம்புசாமி பிள்ளை தொடக்கக் காலத்தில் சிங்கப்பூர் வூட்ஸ் & டேவிட்சன் சட்ட நிறுவனத்தில் எழுத்தராகவும் டேவிட்சனின் மொழிபெயர்ப்பாளராகவும்  பணியாற்றினார். நாளடைவில் தம்புசாமி பிள்ளை ஜேம்ஸ் குத்ரி டேவிட்சனின் நம்பிக்கைக்கு ஆளானார். குடியேற்ற நாடுகளின் கவர்னராக இருந்த என்ட்ரூ கிலாக், ஜேம்ஸ் குத்ரி டேவிட்சனைச் சிலாங்கூர் மாநிலத்தின் முதல் பிரித்தானிய ஆளுநராக நியமனம் செய்தார். சிலாங்கூரில் அப்போது அரண்மனை வாரிசுகளான ராஜா மாஹாடிக்கும் ராஜா அப்துல்லாவுக்கும் இடையில் வரி வசூலிக்கும் உரிமை போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அதிகமான கடற்கொள்ளை சம்பவங்களும் நடந்து கொண்டிருந்தன.  1867 முதல் 1974 வரை வரலாற்று புகழ்மிகுந்த கிள்ளான் போர் இருதரப்புகும் இடையில் நடந்தது. இந்த இக்கட்டான சூழலை எதிர்கொள்ள சிலாங்கூர் சுல்தான் சாமாட், கவர்னர் என்ரூ கிலார்க்கின் உதவியை நாடினார். கிலார்க், டேவிட்சனைச் சிலாங்கூர் ஆளுனர் பொறுப்புக்கு நியமனம் செய்தார்.  டேவிட்சன் சிறந்த சட்ட வல்லுநர் என்பதாலும் சுல்தானின் மருமகன் தெங்கு கூடினின் நல்ல நண்பர் என்பதாலும் அவர் இப்பொறுப்புக்குத் தேர்வு செய்யப்பட்டார். டேவிட்சன் ஆளுனராகச் சிலாங்கூருக்குள் செல்லும் சமயத்தில் தன் நம்பிக்கைக்குரிய கே. தம்புசாமி பிள்ளையையும் தன்னுடன் பணியாற்ற அழைத்தார்.பிரித்தானிய ஆளுநரான ஜேம்ஸ் குத்ரி டேவிட்சனுடன் இணைந்தே தம்புசாமி பிள்ளை மலாயாவில் உள்ள கிள்ளானுக்குப் பயணம் செய்தார். இதன் அடிப்படையிலே தம்புசாமி பிள்ளை மலாயாவிற்கு வந்தடைந்தார்.

மலாயாவில் இவர் மலாயாவின் முதல் பிரிட்டிஷ் குடியிருப்பாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் இவர் தம் இருபத்தைந்தாவது வயதில் மாநிலக் கருவூலகத்திற்கு மாற்றப்பட்டு பின்னாளில் தலைமை எழுத்தராக ஆனார். மாநில கருவூலகத்தில் இடைக்கால பொருளாளராகவும் இவர் செயல்பட்டார்.

மலாயன் இரயில்வே சேவைக்காகவும் பொதுப்பணிக்காகவும் முதல் இந்திய குடியேறிகளைக் கொண்டு வருவதற்காக இவர் மலாயன் அரசாங்கத்தால் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். 1880 இவர் அரசு சேவையிலிருந்து விலகி, லோக் கியூவுடன் கூட்டுச் சேர்ந்தார். இவர் லோக் கியூவுடன் கூட்டாக இணைந்து  ரவாங்கில் ஈயம் அலசும் தொழிலில் ஈடுபட்டார். ஈயச் சுரங்கங்களில் முதல் முறையாக மின்பம்பிகளைப் பயன்படுத்திவர்கள் இவர்கள் ஆவர்.

மேலும், இவர் மலாயா அரசாங்கத்தால் நீதிபதிக்கு ஈடான சமாதான நீதிபதி (Justice of Peace) எனும் தகுதியைப் பெற்றிருந்தார். இவர் KL Sanitary Board என்று அழைக்கப்பட்ட கோலாலம்பூர் கழிவு நீக்க வாரிய உறுப்பினர்களில் ஒருவராகவும் சேவை ஆற்றினார். மலாயா இந்தியச் சமுதாயத்தின் தலைவராகக் கருத்தப்பட்டார். காப்பி வணிகம், நிலம் வாங்கி விற்றல், கட்டுமானத் தொழில் என பல வணிக துறைகளில் இவர் ஈடுபட்டார். குதிரை பந்தய சங்கம், சிலாங்கூர் சங்கம் போன்றவற்றில் உறுப்பினராக இருந்துள்ளார். கோலாலம்பூரில் உள்ள மகா மாரியம்மன் கோயில், கோர்ட்டு மலை பிள்ளையார் கோயில், பத்துமலை போன்ற கோயில்கள் இவருடைய உருவாக்கங்களாகும்.

மறைவு

தம்புசாமி பிள்ளை 2.jpg

கே. தம்புசாமி பிள்ளை 1902ஆம் ஆண்டு காலமானார். குதிரை ஏற்றத்தில் ஈடுபாடு கொண்டிருந்த இவர்,  அது சார்ந்த சந்திப்புக்காகச்  சிங்கப்பூர் குதிரையேற்ற மன்றத்திற்குச் சென்றிருந்தபோது உயிரிழந்தார்.

பொது பணி/பங்களிப்பு

மாரியம்மன் ஆலயம்

கே. தம்புசாமி பிள்ளை கோலாலம்பூரில் பணிபுரிகின்ற காலக்கட்டத்தில், கோலாலம்பூரில் குடியேறியிருந்த இந்தியர்களுக்கு வழிபாட்டு தளத்தை உருவாக்கி தர நினைத்தார். அதன் அடிப்படையில் ஆற்றோரத்தில் மாரியம்மன் ஆலயத்தை அமைத்தார். கோலாலம்பூரில் முதல் முதலாகக் கட்டப்பட்ட வழிபாட்டு தளத்தில் இவர் அமைத்து தந்த மாரியம்மன் ஆலயமும் அடங்கும். பின்னர், 1875-இல் கோலாலம்பூர் இரயில்வே அமைப்புக்கு, இரயில்வே சரக்குக் கிடங்கு அமைக்க, மாரியம்மன் ஆலயம் கட்டப்பட்ட நிலம் தேவைப்பட்டது. அதன் விளைவாக, சிலாங்கூர் மாநில சுல்தானின் ஒப்புதலுக்கேற்ப ஜாலான் பண்டாரில் அத்தாப்பு கூரைகளாலான குடிசை கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலுக்கு இந்தியச் சமூகத்தின் நிலம் என்று சிலாங்கூர் சுல்தான் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. 1888-இல் கே. தம்புசாமி பிள்ளை,  உள்ளூர் இந்தியச் சமூகத்தின் ஆதரவுடன் குடிசை கோயிலைச் செங்கல் கட்டிடமாக மாற்றினார். தம்புசாமி பிள்ளை, கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத்தின் முதல் நிறுவனராகச் செயல்பட்டார்.

விக்டோரியா பள்ளி

கோலாலம்பூரில் புகழ்பெற்ற விக்டோரியா பள்ளியைத் தோற்றுவித்தவர்களில் ஒருவராகத் திகழ்கிறார் கே. தம்புசாமி பிள்ளை. 1893 லோக் இயூ, யாப் குவான் செங் போன்றவர்களின் துணையோடு இப்பள்ளியை இவர் உருவாக்கினார். சிலாங்கூர் சுல்தான், பிரித்தானிய ஆளுநர் டிரேச்சர் போன்றவர்கள் இப்பள்ளிக்கு நன்கொடை வழங்கினர். இப்பள்ளியின் விளையாட்டுக்கூடங்களில் ஒன்று இன்றளவும் தம்புசாமியின் பெயரில் அமைந்துள்ளது.

பத்துமலை
பத்துமலை

உலகத்தார் மத்தியிலும் மலேசிய சுற்றுலாத் தளமாக விளங்கும் பத்துமலை கோயிலை நிறுவியர் இவர். வேலையாட்களாக மலாயாவிற்கு வந்த பல இந்தியர்கள் பத்துமலை பகுதியில் வசித்து வந்தனர். பத்துமலையில் முருகன் கோயிலை அமைக்க விரும்பிய அவர்களின் கோரிக்கையை நிவர்த்திச் செய்யும் வகையில், கே. தம்புசாமி பிள்ளை தனது சொந்த செலவில் குகைக்குக் கீழ் முருகன் கோயிலைக் கட்டினார். 1891ஆம் ஆண்டு பத்துமலை குகை கோயிலில் முருகப் பெருமானின் சிலை தம்புசாமி பிள்ளையால் நிலை நிறுத்தப்பட்டது. 1892-இல் இருந்து இவரால் பத்துமலையில் தைப்பூசம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1920இல் குகைக் கோயிலுக்குச் செல்ல மரக் கட்டைகளிலான 272 படிக்கட்டுகள் கட்டப்பட்டன.

ஈயச்சுரங்கத் தொழிலில் முதல் முதலாக மின்சாரப் பயன்பாடு

மலேசியாவில் ஈயச்சுரங்கத் தொழிலில் முதல் முதலாக மின்பம்பிகளைப் பயன்படுத்தியவர்கள் கே. தம்புசாமி பிள்ளையும் டவுகே லோக் யூவும் ஆவார்கள். ரவாங்கில் தொடங்கப்பட்ட நியூ டின் மைனிங் கம்பெனி என்று அறியப்பட்ட ஈயச்சுரங்கத் தொழிலில் படி படியாக மின்சாரத்தைக் கொண்டு வந்து பின்பு மின்பம்பிகளைப் இவர்கள் பயன்படுத்தினர்.

செயின்ட் மேரி கடீட்ரல்

1893ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் உள்ள செயின்ட் மேரி கதீட்ரலின் கட்டிட நிதிக்குக் கணிசமான தொகையை இவர் வழங்கினார்.

வரலாற்றில் கே. தம்புசாமி பிள்ளை

மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் மட்டுமல்லாது நவீன மலேசிய உருவாக்கத்திலும் தம்புசாமி பிள்ளை கணிசமாகப் பங்காற்றியிருக்கிறார். நல்ல ஆங்கில அறிவும் பிரிட்டீஷ் அதிகாரிகளிடம் நட்பும் பாராட்டிய இவர் மிக விரைவாக அரசின் மதிப்பைப் பெற்று அதன் வழி பல சமூக செயல்பாடுகளைச் சிக்கலின்றி நிறைவேற்றினார். மேலும் சிறந்த வனிகராக இருந்த தம்புசாமி பிள்ளை சீன செல்வந்தர்களுடன் கூட்டாகத் தொழிற்துறை முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெற்றார். நகரில் பெரும் செல்வாக்கோடு வாழ்ந்த அவர் தன் பெரும்பகுதி நாட்களை மலாயாவிலேயே களித்தார். தன் செல்வத்தின் பெரும் பகுதியைத் தமிழர்களின் நலன் கருதி கல்விக்கும் ஆன்மீகத்திற்கும் வழங்கினார்.

வரலாற்று நினைவுகள்

தம்புசாமி சாலை

தம்புசாமி சாலை

கே. தம்புசாமி நினைவாகக் கோலாலம்பூரில், சௌக்கிட் பகுதியில் உள்ள சாலைக்கு ஜாலான் தம்புசாமி என்று பெயரிடப்பட்டுள்ளது.

தம்புசாமி பிள்ளை தமிழ்ப்பள்ளி

செந்தூல் பகுதியில், தம்புசாமி பிள்ளை தமிழ்ப்பள்ளி என்ற தமிழ்ப்பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது.

கோலாலம்பூர் விக்டோரியா கல்விக்கழகம்

மலேசியாவின் பாரம்பரிச் சின்னமாகக் கோலாலம்பூர் விக்டோரியா கல்விக் கழகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உசாத்துணை

உலகத் தமிழ்க் களஞ்சியம் தொகுதி 3, உமா பதிப்பகம்.

K. Thamboosamy Pillay Malaysian Businessman

Kayaroganam Thamboosamy Pillay

K. Thamboosamy Pillay Biography

Thamboosamy Pillay; The Bigwig Who Brought Electricity To Malaya

தம்புசாமி பிள்ளை

பத்துமலை வரலாறு - 2

மலேசிய வரலாற்றில் பெருமைக்குரிய தமிழர்:- தம்புசாமி பிள்ளை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.